
ஆசிரியரும்... அன்பு மாணவரும்... வே.காளியப்பன், பக். 140, இந்த நூல் விற்பனைக்கல்ல, தேவகி பதிப்பகம், 79, சந்தி விநாயகர் கோயில் தெரு, சிவகிரி, தென்காசி- 627757. ✆ 96000 77219.
தாம் கற்ற, பெற்ற அனுபவங்களை ஆசிரியரும் அன்பு மாணவரும் என்னும் அழகிய நூலாகத் தந்துள்ளார் வே.காளியப்பன். இன்றைய மாணவர்கள் எதிர்காலத்தின் சீர்மிகு சமுதாயத்தை உருவாக்க காத்திருப்பவர்கள். அவர்கள் பயணிக்கும் பாதை சரியானதா, அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன, மாணவர் நலனில் ஆசிரியர், பெற்றோர், அரசு, சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பும், பங்களிப்பும் செம்மையாக உள்ளதா போன்ற பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை இந்த நூலெங்கும் காண முடிகிறது.
இந்த நூலின் மூலம் ஆசிரியர்களது மேன்மைகளையும், அவர்களது வஞ்சமில்லா நெஞ்சம் மாணவர்களுக்காகத் துடிப்பதையும் உணர முடியும். ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் ஒவ்வொரு மாணவரும் எதிர்காலத்தில் சிறந்த குடிமகனாகத் திகழ வேண்டும். கல்வி சார்ந்த விஷயங்களில் மட்டுமல்லாமல் ஒழுக்கம் சார்ந்த விஷயங்களிலும் மாணவர்களை நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது என்ற கருத்து அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நூலில், ஆசிரியர் மேன்மை, அன்பெனும் நந்தவனம், நல்லதோர் வீணை செய்தே, மாணவர் நலனில் சமூகப் பங்களிப்பு, அரசின் மேலான கவனத்துக்கு, திசை மாறும் பறவைகள், பெருமைமிகு தலைமை ஆசிரியர் ஆகியவை உள்பட 16 அத்தியாயங்கள் உள்ளன. அதில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது காட்டும் எல்லையற்ற அன்பே, அவர்கள் நெறிபிறழ பல நேரங்களில் காரணமாக அமைந்து விடும். அதனால், அன்பு காட்டுவதில் ஓர் எல்லையைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். மேலும், ஒரு சிறந்த ஆசிரியர் பயன் கருதி பணியாற்றுவதில்லை. அவர்கள் தேர்ந்த சிற்பி போன்றவர்கள். எந்தக் கல்லில் எந்தச் சிற்பம் உள்ளது என்பதை கண்டறியும் திறமை ஆசிரியர்களுக்கே இருக்கிறது என்ற உண்மை சமரசமின்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.
வகுப்பறையில் தன்னால் தண்டிக்கப்பட்ட, கண்டிக்கப்பட்ட மாணவர்களைப் பள்ளி முடிந்த பின்பு மாலை நேரத்தில் அவர்களை அழைத்து, எதற்காக கண்டித்தேன், தண்டித்தேன் என்பதை அவர்களுக்கு உணர்த்தி மனக்காயத்துக்கு மருந்திட்டு அனுப்புகிறார். இதை ஒவ்வொரு ஆசிரியரும் பின்பற்றினால் கட்டுப்பாடு மிகுந்த ஆசிரியர்கள் மீது மாணவர் கொண்டிருக்கும் பொதுப் பார்வை மாறும்.
ஆசிரியரின் அர்ப்பணிப்பு, மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் இருவருக்கும் இடையேயான பாசப் பிணைப்பை விவரிக்கும் இந்த நூல் மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும், ஆசிரியர்களுக்கு ஊக்கியாகவும் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.