
சும்மா இருப்பதே சுகம் - ந.அசோகன்; பக்.164; ரூ.250; பாரதி மோகன் வெளியீடு, சங்கர் நகர், பம்மல், சென்னை 600075. ✆ 9444391884
நூலாசிரியர் பல்வேறு இலக்கியக் கூட்டங்களில் ஆற்றிய உரைகள், புத்தக மதிப்புரைகள் உள்ளிட்டவற்றின் தொகுப்பே இந்நூல். சங்க இலக்கியம் முதல் தற்கால தமிழறிஞர்கள் வரை, சைவம், வைணவம், பௌத்தம், கிறிஸ்துவம், இஸ்லாம் உள்ளிட்ட சமயங்கள் தமிழுக்குச் செய்த பங்களிப்பு குறித்தும் இந்நூல் பதிவு செய்துள்ளது.
'பொய்மையும் வாய்மை இடத்த' என்ற தலைப்பிலான கட்டுரையில் நூலாசிரியரின் ஆழ்ந்த சிந்தனை வெளிப்படுகிறது. இக்கட்டுரைக்கு வலுசேர்க்கும் வகையில் லட்சிய புருஷர்களான இராமன், அரிச்சந்திரன், மகாத்மா காந்தி ஆகியோரை மேற்கோள் காட்டியிருப்பது சிறப்பு.
'சமயங்கள் வளர்த்த தமிழ்' என்ற கட்டுரை, சமயங்களை விளக்குவதோடு மட்டுமல்லாது, முதல் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் பற்றிய குறிப்புகளையும் பதிவு செய்துள்ளது. சமயங்கள் எவ்வாறு தமிழுக்குச் சிறப்பு சேர்த்தன என்பதை தக்க சான்றுகளோடும் நிறுவுகிறது.
'தவறிழைத்த இராமனும் தட்டிக்கேட்ட கம்பனும்' என்ற கட்டுரை இராமன் வாலியை மறைந்து நின்று கொன்றது குறித்து பல்வேறு அறிஞர்கள் கூறியிருக்கும் கருத்துக்களை சாறு பிழிந்து தருகிறது.
பல்வேறு ஞானிகள், துறவிகளால் வெளிப்படுத்தப்பட்ட தத்துவங்களில் 'சும்மா' என்ற சொல்லின் சூட்சுமம் குறித்து விளக்கப்பட்டுள்ளன. நகைச்சுவையாக தொடங்கினாலும், 'சும்மா' என்ற சொல் எவ்வாறு தத்துவப் பொருளில் ஆளப்பட்டது என்பது குறித்த விரிவான ஆராய்ச்சியை 'சும்மா இருப்பதே சுகம்' என்ற கட்டுரை முன்னெடுக்கிறது.
'தமிழ்த் தென்றல்' திரு.வி.க.வின் தேசியத் தொண்டு குறித்தும், வள்ளலாரின் சன்மார்க்க நெறியில் விளைந்த 28 கவிதைகள், அதற்கான தெளிவுரை, மரணமிலாப் பெருவாழ்வு எய்திடுவதற்கான வழி குறித்தும் இந்நூல் விரிவான பார்வையை முன்வைக்கிறது.
ஆழ்ந்த தமிழ் அறிவு, பல்துறைப் புலமை, ஆராய்ச்சித் திறன், எழுத்தாற்றல், பேச்சாற்றல் ஆகியவற்றுக்கு சிறந்த உதாரணமாக இந்நூல் திகழ்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.