
வழக்காடும் நதிகளும் நீதிமன்றங்களும் - ஜெகாதா; பக்.150; விலை ரூ.150; ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32-பி, கிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை 600 017 ✆ 044-24331510
இந்தியாவில் பரவலாகப் பேசப்படுகிற முக்கியமான சில நதிநீர்ப் பிரச்னைகளை இந்த நூலில் வாசகர்களுக்கு எளிதாக ஆசிரியர் விளக்குகிறார். தண்ணீர்ப் பிரச்னை பற்றிய சுருக்கமான அறிமுகத்துடன் தொடங்கி, தமிழ்நாட்டில் நீர்நிலைகளை நிர்வகித்த முன்னோடிகளைப் பற்றிக் குறிப்பிடும் நூலாசிரியர், சென்னைப் பகுதியிலுள்ள ஏரிகளின் நிலையையும் விளக்குகிறார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஏற்பட்ட சூழலை விரிவாகத் தருவதுடன், தொடர்புடைய பிரச்னைகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
மகாநதியால் ஒடிசாவுக்குக் கிடைக்கும் பலன்களையும் நிலவும் நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினைகளையும் விளக்கும் ஆசிரியர், பிரம்மபுத்ரா நதியால் வங்க தேசத்துக்கும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் சச்சரவுகளை விவரிக்கிறார். நர்மதை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டதால் மக்கள் எதிர்கொண்ட அவலங்களும் போராட்டங்களும் விளக்கப்படுகின்றன.
தொல்லை தரும் முல்லைப் பெரியாறு வழக்குகள் பற்றிக் கூறும்போது அணையின் வரலாற்றுடன் ஏற்பட்ட உடன்பாடுகளையும் வரிசைப்படுத்துகிறார். வைகை, தாமிரவருணி, காவிரி, கிருஷ்ணா, நொய்யல், சிறுவாணி தொடர்பான பிரச்னைகளும் அலசப்படுகின்றன. நதிகளின் பின்னுள்ள தகராறுகளைப் பற்றி நூலில் இன்னமும் விரிவாகத் தெரிவித்திருக்கலாம். நதி நீர் வழக்குகள் தொடர்பான ஒவ்வோர் தலைப்புமே தனித்தனியே நூலாக எழுத வேண்டிய விஷயங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.