
மன வயலில் விளைந்த சிந்தனை மணிகள்; டி.எஸ்.தியாகராசன்; பக். 264; ரூ.250; நர்மதா பதிப்பகம்; சென்னை-17; ✆ 044-24334397.
தினமணி நாளிதழில் ஆசிரியர் உரைப்பக்க கட்டுரைகள் பகுதியில் இடம்பெற்ற நூலாசிரியரின் 41 கட்டுரைகளின் தொகுப்பு. 2-ஆவது பாகமாக வெளிவந்துள்ள இந்நூலில் உள்ள கட்டுரைகள் மொழிப் பற்றையும், தேசப்பற்றையும் ஊக்குவிக்கும் கருத்துச் செறிவுகள் நிறைந்தவை. கல்விப் பணி, கலாசார பணி, இலக்கியப் பணி எனப் பல தளங்களில் அனுபவம் கொண்டவர் நூலாசிரியர் என்பதால், ஒவ்வொரு கட்டுரையிலும் அந்த அனுபவம் பிரதிபலிக்கிறது.
"நாட்டில் கைநாட்டு இடும் பாமரனும், அரைகுறையாகப் படித்தவர்களும் செய்கிற குற்றங்களைக் காட்டிலும் மெத்தப் படித்தவர்களும் ஆணையிடவல்ல அதிகாரம் பெற்றவர்களும் செய்யும் குற்றங்கள்தான் அதிகம்' என்பதை ஆணித்தரமாக ஆதாரங்கள் தரவுகளுடன் சுட்டிக்காட்டுகிறது "அஃகி அகன்ற அறிவு என்னாம்?' என்ற கட்டுரை.
மொகலாய மன்னர் அக்பரால் போரில் வெல்ல முடியாதவர் ராஜபுத்திர அரசர் மேவார் நாட்டு ராணா பிரதாப் சிங். அவர் தாய்மண்ணை நேசித்த பண்பை, வீரத்தை நம் நாட்டுக் குழந்தைகளுக்கு போதித்திருந்தால் பாரதம் இப்போதும் அடிமைத்தன சிந்தனையுடன் தொடர்ந்திருக்காது என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது "நாட்டுப்பற்றும் பாடத்திட்டமும்' என்ற கட்டுரை.
பாரதத்தின் பெருமை ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் கோயில்கள். அத்தகைய பெருமையைப் போற்றி பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கும் மக்களுக்கும் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது "காலப் பழைமையும் சாலப் பெருமையும்' என்ற கட்டுரை.
ஆய்ந்தறிந்து எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு கட்டுரையிலுமே நூலாசிரியரின் அறச்சீற்றம் வெளிப்படுகிறது. வாசிப்பவர்களின் மனசாட்சியிடம் அழுத்தமான கேள்விகளையும் எழுப்புகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.