தமிழ்ச் செவ்வியல் மரபுகள் பண்பாட்டு ஆய்வு

பண்பாட்டு ஆய்வில் உள்ளோர் கவனத்தில் கொள்ள வேண்டிய நூல்.
தமிழ்ச் செவ்வியல் மரபுகள் பண்பாட்டு ஆய்வு
Published on
Updated on
1 min read

தமிழ்ச் செவ்வியல் மரபுகள் பண்பாட்டு ஆய்வு; ஒ.முத்தையா; பக்.128; ரூ.150; காவ்யா வெளியீடு, சென்னை - 24. ✆ 98404 80232.

பண்பாட்டு நோக்கில் செவ்வியல் இலக்கியங்களை இந்த நூல் ஆராய்ந்து விளக்கியுள்ளது. உயர்ந்த குறிக்கோள்களை உள்ளடக்கி, வாழ்க்கைக்கு வழிகாட்டும் முழுத்தகுதி உடையவையே தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள்.

சங்க இலக்கிய நூல்கள் தமிழரின் தொன்மையான விழுமியங்கள், ஒழுக்க நெறிகள், வாழ்வியல் மற்றும் சடங்கியல்களை அகம் - புறம் எனத் தொகுத்து வைத்துள்ளதை அறிவோம்.

தமிழ் மரபில் "குறி சொல்லுதல்' மரபுவழிச் சடங்காக தொடர்ந்து வருகிறது. இந்த மரபு பல்வேறு பரிமாணம் பெற்றுள்ளது.

தொல்காப்பியர் குறிப்பிடும் "மன்னு நிமத்தம், மொழிப்பொருள், தெய்வம்' (தொல்.பொருள், புறம், நூ.36) என்ற மூன்றும் குறிப்பிடத்தக்கனவாகும். குறிகேட்டல் என்பது வாழ்வின் மீதான நம்பிக்கையைக் கூட்டுவதாகும்.

மன்னு நிமித்தம்: வழிவழி வந்த புள் (புள் என்றால் பறவை) நிமித்தம், மொழிப்பொருள்: விரிச்சி எனும் நற்சொல், தெய்வம்: வேலன் கட்டு, கழங்கு, வெறியாட்டு முதலிய கடவுட் பரவுதல் என்று உரையாசிரியர்கள் கூறுகின்றனர்.

தமிழ்த் தொன்மத்தில் ’வேலன் வெறியாட்டு' முக்கிய இடம் பெறுகிறது. இதில் ஒரு தகவலை நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ’தொல்காப்பியத்தில் இடம் பெற்ற வெறியாட்டு என்ற சொல், சங்க இலக்கியத்தில் எங்கும் இடம் பெறவில்லை. ஆனால், இன்றைய மக்கள் வழக்கில் வெறியாட்டு என்ற சொல் இடம் பெறுவது வியப்பைத் தருவதாக உள்ளது'.

கலித்தொகை காட்டும் பண்பாட்டு விழுமியங்கள், மலைபடுகடாமில் மரபு அறிவுப் பதிகள், ஆற்றுப்படை இலக்கியங்களில் நாட்டுப்புறக் கூறுகள், சிலப்பதிகாரம் - நாட்டுப்புறக் காப்பியம், நீரும் தமிழரின் மரபு அறிவும் என இந்நூலில் உள்ள ஆய்வுக் கட்டுரைகள் நாட்டுப்புறவியல் நோக்கில் பண்பாட்டுப் பயணத்தை நடத்தியுள்ளது. பண்பாட்டு ஆய்வில் உள்ளோர் கவனத்தில் கொள்ள வேண்டிய நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com