புற்றுநோய் நிவர்த்தித் தலம் திருப்பராய்த்துறை

காவிரி தென்கரை பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் 3-வது தலமாக உள்ள திருப்பராய்த்துறை, மிகவும் பழமையான சிவஸ்தலம். தாருகாவனம் ஷேத்திரம் என்ற பெருமை உடையது.
Published on
Updated on
4 min read

காவிரி தென்கரை பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் 3-வது தலமாக உள்ள திருப்பராய்த்துறை, மிகவும் பழமையான சிவஸ்தலம். தாருகாவனம் ஷேத்திரம் என்ற பெருமை உடையது.

இறைவன் பெயர்: பராய்த்துறைநாதர், தாருகாவனேஸ்வரர்

இறைவி பெயர்: பசும்பொன்நாயகி, ஹேமவர்ணாம்பிகை

இத்தலத்துக்கு, திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் என 2 பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது?

இத்தலம், திருச்சியில் இருந்து குளித்தலை செல்லும் சாலையில் சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பராய்த்துறைக்கு நகரப் பேருந்து வசதிகள் உள்ளன.

ஆலய முகவரி

அருள்மிகு தாருகாவனேஸ்வரர் திருக்கோயில்,

திருப்பராய்த்துறை,

திருப்பராய்த்துறை அஞ்சல்,

கரூர் மாவட்டம் - 639 115.

இந்த ஆலயம், தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

புற்றுநோய் குணப்படுத்தும் தலவிருட்சம் உள்ள தலம்

காவிரியின் தென்கரையில் உள்ள 127 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில், திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் ஆலயம் மிகவும் தொன்மையான ஒரு கோவிலாகும். இந்த இடத்தில் காவிரி மிகவும் அகலமாக ஓடுவதால் அகண்ட காவிரி என்று அழைக்கப்படுகிறது. இதை திருநாவுக்கரசர் தனது பதிகத்தில் ‘பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத் திருப்பராய்த்துறை மேவிய செல்வரே’ என்று குறிப்பிடுகிறார்.

ஒரு காலத்தில், பராய் மரங்கள் நிறைந்த தலமாக இவ்வூர் திகழ்ந்ததால், பராய்த்துறை என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தின் தலவிருட்சம் அரிய வகை பராய் மரம். மூலவர் சந்நிதிக்குப் பின்புறம் வெளிப்பிராகாரத்தில் உள்ள இத்தல விருட்சம், புற்றுநோயையும் மற்றும் எளிதில் குணப்படுத்தமுடியாத சிலவகை தோல் நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது.

பராய் மரத்தின் இலையானது சீதபேதி மற்றும் ரத்தபேதியைக் குணமாக்கும். பராய் மரத்துப் பால், கால் வெடிப்புகளைச் குணமாக்கும். இத்தகைய நோய்களால் பீடிக்கப்பட்டு, குறிப்பாக புற்றுநோயினால் வருந்தும் மக்கள், இத்தல விருட்சத்துக்கு நீரூற்றி, தீபம் ஏற்றி, தூபம் காட்டி, வலம் வந்து வணங்கினால் இந்நோய் நிவர்த்தியாகும் அல்லது கட்டுப்படும் எனத் தல வரலாறு தெரிவிக்கிறது. புற்றுநோய்க்கு நிவர்த்தித் தலமான திருப்பராய்த்துறையில் சுயம்பு லிங்கமாக உறையும் இறைவன் தாருகாவனேஸ்வரர் மற்றும் இறைவி ஹேமவர்ணாம்பிகையை வழிபட்டுப் பலன் பெற்றவர்கள் பலர்.

தல புராண வரலாறு

இத்தலத்தில் தவம் செய்து வந்த தாருகவன முனிவர்கள், தான் என்ற அகந்தையால் மமதை கொண்டனர். தாங்கள் செய்யும் வேள்விகளே முதன்மையானது என்றும், அதனால் இறைவனைத் துதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கருதி நடந்துகொண்டனர். அவர்களின் மமதையை அடக்க இறைவன் சிவபெருமான், பிச்சாடனர் வேடம் பூண்டு தாருகாவனத்துக்கு வந்து முனிபத்தினிகளை மயக்கினார். இறைவனை அழிக்க முனிவர்கள் மாபெரும் யாகம் செய்தனர். யாக குண்டத்தில் இருந்து தோன்றிய புலிகளை இறைவன் மீது ஏவினர். சிவபெருமான் அவற்றைக் கொன்று, தோலை ஆடையாக அணிந்துகொண்டார். முனிவர்கள் பிறகு மானை ஏவினர். இறைவன் அதை அடக்கி தனது இடக்கரத்தில் ஏந்திக்கொண்டார். முனிவர்கள் பாம்புகளை ஏவ, சிவபெருமான் அவற்றைத் தனது அணிகலன்களாக ஆக்கிக்கொண்டார். பூதகணங்களை முனிவர்கள் ஏவினர். எதனாலும் இறைவனை வெல்ல முடியவில்லை என்று தெரிந்துகொண்ட முனிவர்கள் ஞானம் பெற்று, வந்திருப்பது பரம்பொருள் சிவபெருமானே என்பதைப் புரிந்துகொண்டு மமதை அடங்கி, இறைவனிடம் தஞ்சம் அடைந்தனர். இறைவன் அவர்களை மன்னித்து, அவர்களுக்குத் தாருகாவனேஸ்வரராகக் காட்சி அளித்தார். கருவறை அர்த்த மண்டபத்தில், பிச்சாடனர் வேடம் பூண்டு வந்த சிவபெருமானின் உற்சவத் திருமேனி உள்ளது. பிராகாரத்திலும் பிச்சாடனர் உருவச்சிலை இருக்கிறது.

கோவிலின் சிறப்பு

இத்தலத்து இறைவன், ஒரு சுயம்பு லிங்கமாக தாருகாவனேஸ்வரர், பராய்த்துறைநாதர் என்ற திருநாமங்களுடன் கிழக்கு நோக்கியும், இறைவி பசும்பொன்மயிலாம்பிகை, ஹேமவர்ணாம்பிகை என்ற திருநாமங்களுடன் தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். ஆலயத்தின் முன் உள்ள மண்டப வாயிலில் மேலே சுதையால் ஆன ரிஷபாரூடர் சிற்பம் உள்ளது. வாயில் வழியாக உள்ளே நுழைத்தவுடன் இடதுபுறம் குளம் உள்ளது. வலதுபுறம் உள்ள கல்மண்டபத்தில் (வசந்த மண்டபத்தில்) விவேகானந்தர் தொடக்கப் பள்ளி நடைபெறுகிறது. நேரே ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் உள்ளது. முகப்பில், விநாயகர் காட்சி தருகிறார். ராஜகோபுரம் வழியே உள்ளே நுழைந்தால், நேரே செப்புக் கவசமிட்ட கொடிமரம். இதனுடன் பலிபீடம், நந்தி இரண்டும் சேர்ந்து ஒரு மண்டபத்தில் உள்ளன. இது நந்தி மண்டபம் எனப்படும். இத்தூண்களில் சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் உருவங்களும், திருப்பணி செய்த செட்டியாரின் உருவமும் உள்ளன. வெளிப்பிராகாரத்தில் விநாயகரும் தண்டபாணியும் உள்ளனர்.

அடுத்து உள்ள கோபுரம் ஐந்து நிலைகளை உடையது. உள்ளே நுழைந்ததும், நேரே கிழக்கு நோக்கிய மூலவர் சந்நிதி தெரிகிறது. உள்சுற்றில், வலம்புரி விநாயகரும், சப்தகன்னியரும், அறுபத்து மூவரும் உள்ளனர். அடுத்து சோமாஸ்கந்தர், மகாகணபதி, பஞ்சபூத லிங்கங்கள், ஆறுமுகர், பிட்சாடனர், பிரம்மா, துர்க்கை, கஜலட்சுமி, சண்முகர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. நவக்கிரகங்களுள், சனீஸ்வரனுக்கு மட்டும் காக்கை வாகனம் உள்ளது. பைரவரும் உள்ளார்.

கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், லிங்கோத்பவர் இடத்தில் அர்த்தநாரீஸ்வரரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர். சண்டிகேசுவரர் சந்நிதி உள்ளது. நடராசர் சந்நிதியும் இங்குள்ளது. துவாரபாலகர்களைத் தரிசித்து உட்சென்று மூலவரைத் தரிசிக்கலாம். மூலவர் அழகான திருமேனி. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. அம்பாள் மண்டபத்தில் உள்ள முன் தூணில் ஊர்த்துவ தாண்டவ சிற்பமும், எதிர்த் தூணில் காளியின் சிற்பமும் உள்ளன.

இத்தலம், அருணகிரிநாதர் பாடல் பெற்ற ஒரு திருப்புகழ் தலம். இங்கு முருகப்பெருமான், ஆறுமுகமும் 12 திருக்கரங்களும் கொண்டு, வள்ளி தெய்வானை அருகில் இருக்க, மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். உற்சவரும் இதே அமைப்பில் உள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் முதல்நாள் இத்திருத்தலத்தில் காவிரியில் புனித ஸ்நானம் செய்வதை முதல் முழுக்கு எனப் பெரியோர் போற்றுவர். அன்றைய தினம், இறைவன் ரிஷப வாகனத்தில் அம்பிகையோடு எழுந்தருளி, காவிரிக் கரையில் தீர்த்தம் கொடுத்தருளுவார். (ஐப்பசி கடைசி நாளன்று, காவிரியில் மயிலாடுதுறை திருத்தலத்தில் ஸ்நானம் செய்வதைக் கடை முழுக்கு என்று போற்றுகின்றனர்). பராய்த்துறைக்கு வந்து தரிசித்தால், பாவங்கள் நீங்கப்பெறும் என்பது ஐதீகம்.

புற்றுநோய் நிவர்த்திக்கு மற்றொரு தலம் திருவெற்றியூர்

காளையார்கோவில் - திருவாடானை - தொண்டி சாலையில், திருவாடானையை அடுத்து சுமார் 4 அல்லது 5 கி.மீ. சென்றவுடன் காடாகுடி விலக்குச் சாலை வரும். அங்கிருந்து திருவெற்றியூர் சாலை வலதுபுறம் பிரிகிறது. அச்சாலையில் சுமார் 6 கி.மீ. தெற்கே சென்று, தேவார வைப்புத் தலங்களில் ஒன்றான வெற்றியூரை அடையலாம். திருவாடானையில் இருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. இத்தல இறைவன் பழம்புற்றுநாதர் என்றும், வன்மீகநாதர் என்று அழைக்கப்படுகிறார். இறைவி பாகம்பிரியாள் என்ற திருநாமத்துடன் இங்கு அருள் செய்கிறாள். இத்தலத்தில் அம்பிகைதான் முக்கியத் தெய்வம்.

மகாவிஷ்ணுவுக்குப் புற்றுநோய் நீங்கிய தல வரலாறு

வாமன அவதாரம் எடுத்து, மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மகாவிஷ்ணு மூன்றடி மண் கேட்டார். மகாபலி அந்தத் தானத்தைக் கொடுக்க, தன் முதல் ஓரடியால் மண்ணுலகத்தையும், ஈரடியால் விண்ணுலகத்தையும் அளந்த மகாவிஷ்ணு, தனது மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து, அவனை பாதாள லோகத்துக்கு அனுப்பினார். நீதி நெறி தவறாமல், தர்மத்தின்படி ஆட்சி செய்துவந்த மகாபலியை பாதாளத்துக்கு அனுப்பிய மகாவிஷ்ணுவைத் தொடர்ந்து வந்த தர்மதேவதை, அவரின் பாதத்தில் புற்றுநோய் ஏற்பட சாபம் தந்தாள். தர்மதேவதையால் சபிக்கப்பட்ட மகாவிஷ்ணு, தனது சாபம் தீர பூவுலகில் சிவாலய தரிசனம் செய்து, திருவாடானை ஆதிரத்தினேஸ்வரரை வணங்கி, பின் ஜெயபுரம் என்கிற வெற்றியூர் தலத்தை அடைந்தார். அங்கு வாசுகி தீர்த்தத்தில் நீராடி, இறைவன் பழம்புற்று நாதரை வழிபட்டு சாபவிமோசனம் அடைந்தார். பாதத்தில் ஏற்பட்டிருந்த புற்றுநோயும் தீர்ந்தது. புற்றுநோய் தீர வாசுகி தீர்த்தத்தில் நீராடி அம்பிகையை வணங்கி தீர்த்தம் வாங்கிக் குடித்து வர குணம் அடையலாம் என்று இப்பகுதி மக்கள் இன்றும் நம்பிக்கையுடன் இத்தலம் வந்து வழிபடுகின்றனர்.

இத்தலத்துக்கான ஞானசம்பந்தரின் பதிகம்.. பதிகத்தைப் பாடியவர் திருத்தணி சுவாமிநாதன்

இத்தலத்தைப் பற்றிய திருநாவுக்கரசரின் குருந்தொகை. இப்பதிகத்தைப் பாடியவர் திருத்தணி சுவாமிநாதன்

Picture courtesy : www.shivatemples.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com