நடுநாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் 7-வது தலமாக விளங்குவது திருவதிகை. கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு திருவதிகை இறைவனை மனமுருகி பதிகம் பாடி, திருநாவுக்கரசர் தனது வயிற்று வலி நீங்கி அருள் பெற்ற தலம்.
இறைவன் பெயர்: அதிகை வீரட்டேஸ்வரர் இறைவி பெயர்: திரிபுரசுந்தரி |
இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் 16-ம், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், சுந்தரர் பதிகம் ஒன்றும் என மொத்தம் 18 பதிகங்கள் உள்ளன.
எப்படிப் போவது?
கடலூரில் இருந்து திருவஹீந்திபுரம் (திருவந்திபுரம்), பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் பேருந்தில் சென்று திருவதிகை ஊரில் இறங்கி, அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மீ. சென்றால் அதிகை வீரட்டேஸ்வரர் கோவிலை அடையலாம். பண்ருட்டிக்கு அருகில் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னை, கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், சிதம்பரம் போன்ற ஊர்களிலிருந்து பண்ருட்டிக்கு பேருந்து வசதி உள்ளது.
ஆலய முகவரி |
இந்த ஆலயம், தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருநாவுக்கரசருக்கு வயிற்று வலி நீங்கிய வரலாறு
தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு அருகிலுள்ள திருவாமூர் என்ற ஊரில் ஒரு சைவக் குடும்பத்தில், புகழனார் - மாதினியார் தம்பதிகளுக்கு மகளாக திலவதியும், மகனாக மருள்நீக்கியாரும் பிறந்தனர். மருள்நீக்கியார் வளர்ந்து தனது இளமைப் பருவத்தில் சமண சமயத்தில் ஈடுபாடு கொண்டு சமண சமயத்தைச் சார்ந்து, தருமசேனர் என்று பெயரோடு வாழ்ந்து வருகிறார்.
தமக்கை திலவதியாரோ, தனக்கு மணம்புரிய நிச்சயிக்கப்பட்ட கலிப்பகையார், ஒரு போரில் இறந்துபோக, இனி தனக்குத் திருமணம் வேண்டாம் என்று வெறுத்து, சைவ சமயம் சார்ந்து திருவதிகை சிவஸ்தலத்தில் இறைப்பணி செய்து வாழ்ந்து வருகிறார். தம்பி சமண மதத்தில் இருந்து விலகி சைவ சமயம் சார அருள்புரியவேண்டி சிவபெருமானிடம் முறையிடுகிறார்.
இந்நிலையில் தம்பி தருமசேனரை கொடிய சூலைநோய் தாக்குகிறது. அவர் தங்கியிருந்த சமண மடத்தில் செய்யப்பட்ட மருத்துவச் சிகிச்சைகள் எதுவும் பலனளிக்கவில்லை. சூலைநோயின் கொடுமை தாங்கமுடியாமல், தன்னுடைய தமக்கை இருக்கும் திருவதிகை சென்று முறையிடுகிறார். தம்பி துன்பப்படுவதைக் கண்ட திலகவதி, திருவதிகை இறைவனிடம் அழைத்துச் சென்று, அங்குள்ள திருநீறை அவருக்குப் பூசி, இறைவன் மேல் மனமுருகிப் பாடச் சொல்கிறார். அவரும்,
கூற்றாயின வாறு விலக்ககிலீர்
கொடுமைபல செய்தன் நான் அறியேன்
ஏற்றாய அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம் படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதி கைக்கெடில
வீரட்டானத் துறை அம்மானே…
என்ற பாடலுடன் தொடங்கும் பதிகத்தைப் பாடி சூலை நோய் நீங்கப்பெற்றார்.
மேலும், நாவுக்கரசர் என்று சிவபெருமானால் அழைக்கப்பட்டு, தருமசேனராக இருந்தவர் திருநாவுக்கரசர் என்று சிவபெருமான் சூட்டிய திருநாமத்துடன் சைவ சமயத்துக்குப் பெரும் தொண்டு செய்யத் தொடங்கினார். தனது சூலை நோய் நீங்கப் பாடிய பதிகமே இவர் பாடிய முதல் பதிகமாகும்.
திருவதிகை இறைவனை வணங்கித் தொழுது, அன்பர்கள் நாள்தோறும் பக்தி சிரத்தையுடன் திருநாவுக்கரசர் பாடியருளிய இப்பதிகத்தை ஓதி வந்தால் வயிற்று வலி நீங்குவது அனுபவபூர்வ உணமையாகும்.
தல புராணம்
சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவதிகையில்தான், சிவபெருமான் திரிபுரசம்ஹாரம் செய்தார்.
வித்யுந்மாலி, தாருகாட்சன், கம்லாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்தக் கோட்டைகளுக்கு, விமானம்போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக்கொண்டு தேவர்களை இந்த அசுரர்கள் மிகவும் துன்புறுத்தி வந்தனர். அசுரர்களின் தொல்லை பொறுக்கமுடியாமல், சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.
மூன்று அசுரர்களையும் அழிக்க, பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி, மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி சிவபெருமான் புறப்பட்டார். இச்சமயம், ஒவ்வொரு உறுப்பும் தன்னால்தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப்போகிறார் என்று நினைத்து கர்வம்கொள்ளத் தொடங்கின.
இவ்வாறு ஒவ்வொருவரும் கர்வம் கொண்டிருப்பதைக் கண்ட இறைவன், தன் பங்கு இல்லாமல் இப்படையில் எந்த ஒரு பயனும் இல்லை என்று அவர்களுக்குப் புரியவைக்க நினைத்து, தேவர்களின் செருக்கு அடங்கப் புன்னகையும், சிவபூஜை தவறாத திரிபுர அசுரர்கள் உய்யுமாறு தண்ணகையும், சிவபூஜை தவறிய முப்புரவாசிகள் மடியுமாறு வெந்நகையும் ஆகிய இம்மூன்றையும் இத்தல சிவபெருமான் செய்தார். அவர் சிரித்த உடனேயே கோட்டைகள் மூன்றும் பொடிப்பொடியாக பொசுங்கிப் போயின. இச்சம்பவம் நடந்த இடம்தான் திருவதிகை.
கோவில் அமைப்பு
சுமார் 7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவில் இது. கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் 7 நிலைகளுடனும், 7 கலசங்களுடனும் காட்சி தருகிறது. கோயிலுக்கு முன்னால் பதினாறுகால் மண்டபம் உள்ளது. இதைத் திருநீற்று மண்டபம் என்றழைக்கிறார்கள். இம்மண்டபத் தூண்களில் ரிஷபாரூடர், அப்பர், மயில்வாகனன் முதலிய சிற்பங்களும், இக்கோயிலைத் திருப்பணி செய்வித்த செட்டியார் சிற்பங்களும் உள்ளன.
கோபுர வாயிலின் இரு பக்கமும், நாட்டியக் கலையின் 108 தாண்டவ லட்சணங்களை விளக்கும் வகையில், பெண்கள் அழகிய சிற்பங்களாகக் காட்சி அளிக்கின்றனர். வலப்பக்கத்தில் சற்று உயரத்தில் திரிபுரம் எரித்த கோலம் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் கஜசம்ஹாரகோலம்.
கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன், உட்புறத்தில் மற்றொரு பதினாறுகால் மண்டபம் உள்ளது. திறந்த வெளி முற்றத்தின் தென்பக்கம் சங்கர தீர்த்தமும், வடபக்கம் 5 அடி உயரமுள்ள பத்மாசனக் கோலத்தில் காணப்படும் ஒரு புத்தர் சிலையும் உள்ளன.
இரண்டாவது கோபுர வாயிலின் வெளிப்புறம் விநாயகர், கொடிமரம், பலிபீடம் ஆகியவை உள்ளன. 5 நிலைகளை உடைய இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன், ஒரு பெரிய நந்தியின் உருவச்சிலை காணப்படுகிறது. ஒருபுறம் முருகப் பெருமானும், மறுபுறம் கணபதியும் காட்சியளிக்கின்றனர். இரண்டாவது சுற்றின் தென்புறத்தில் திருநாவுக்கரசருக்கும், அவர் தமக்கை திலகவதிக்கும் தனித் தனியாக சந்நிதி உள்ளது. அதற்கடுத்து பைரவர், சனீஸ்வரர் மற்றும் துர்க்கையம்மன் சந்நிதிகள் உள்ளன. அதன்பின் இறைவி பெரியநாயகி சந்நிதி இருக்கிறது.
அம்பிகையின் கோவில் வாசலில் இருந்து இறைவி சந்நிதி விமானத்தைக் காணலாம். விமானத்தில் உள்ள சுதை வேலைப்பாடு சிற்பங்கள் பல வண்ணங்களில் நம் கருத்தைக் கவரும். இவற்றில் பிரசித்தமான வடிவம், திரிபுராந்தகர் சிற்பம். 12 திருக்கரங்கள், சூலம் ஏந்திய கை ஒன்று, வில்லேந்திய கை ஒன்று, ஒரு கால் தேர்த்தட்டிலும், மற்றொரு காலை உயர்த்தியும் வில்போல் வளைத்து நிற்கிறார்.
மூன்றாவது சுற்றில்தான் மூலவர் அதிகை வீரட்டேஸ்வரர் சந்நிதி இருக்கிறது. கருவறையில் காட்சி அளிக்கும் வீரட்டேஸ்வரர், 16 பட்டைகளுடன் கூடிய சுயம்பு லிங்கம் ஆவார். இவருக்குப் பின்னால், கருவறைச் சுவற்றில் பார்வதி, சிவன் கல்யாணத் திருக்கோலம் காட்சி தருகிறது. மூலஸ்தானத்தின் மேல் உள்ள விமானம், பல்லவர் காலத்தைச் சார்ந்தது. இறைவன் கருவறை விமானம் நிழல் பூமியில் சாயாதபடி கட்டப்பட்டுள்ளது. கருடன், பிரம்மா, திருமால், பாண்டவர்கள் இத்தலத்தில் வீரட்டேஸ்வரரை பூஜித்திருக்கின்றனர்.
உள் சுற்றின் தென்மேற்கே உள்ள பஞ்சமுக லிங்கம் காண வேண்டிய ஒன்று. இதுவும் பல்லவர் காலத்தைச் சார்ந்தது. இத்தகைய பஞ்சமுக லிங்கம், தமிழ்நாட்டில் வேறெங்கும் காண முடியாது. நான்கு திக்குகளை நோக்கி நான்கு முகங்கள் உள்ளன. ஒரு முகம் மேல் நோக்கி உள்ளதாக ஐதீகம். எனவே, பஞ்சமுக லிங்கம் என்று கூறுவர். இது ஒரு அரிய தரிசனம் ஆகும். வரிசையாகப் பல சிவலிங்கத் திருமேனிகள் உள்ளன. யாகசாலை, நவக்கிரக சந்நிதிகளை அடுத்து, நடராச சபை உள்ளது.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில், இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் ஆறுமுகப் பெருமான் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார். உற்சவரும் தன் இரு தேவியருடன் சண்முகப் பெருமானாகக் காட்சி தருகிறார்.
திருநாவக்கரசர் உழவாரப் பணி செய்த இத்தலத்தை மிதிக்க அஞ்சி, சுந்தரர் அருகிலிருந்த சித்தவட மடத்தில் தங்கி இத்தலப் பெருமானை வழிபட்டார். ஒரு சமயம், மடத்தில் சுந்தரர் இரவு தூங்கிக்கொண்டு இருந்தபோது, அவர் மேல் யாரோ காலால் இடிப்பது தெரிந்து சுந்தரர் நகர்ந்து படுத்தார். மீண்டும் யாரோ அவர் தலையில் கால் படும்படி படுக்க, சுந்தரர் எழுந்து காலால் தலையைத் தீண்டியவரை கடுமையாகப் பேச, பின் இறைவன்தான் இவ்வாறு திருவிளையாடல் செய்துள்ளார் என்பதைப் புரிந்துகொண்டு அவரை வணங்கினார்.
இவ்வாறு இறைவனிடம் சுந்தரர் திருவடி தீட்சை பெற்றதும், பல்லவ மன்னனான மகேந்திரவர்மனின் மனத்தை மாற்றிச் சமணப் பள்ளிகளை இடித்துக் குணபரவீச்சரம் என்ற கோவிலை எழுப்பச் செய்ததும் இத்தலத்தின் பெருமையைப் பறைசாற்றும்.
திருநாவுக்கரசர் தனது வயிற்று வலி நீங்க பாடிய திருப்பதிகம்
கூற்றாயினவாறு விலக்ககிலீர்
கொடுமை பல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக்கெடில
வீரட்டானத்துறை அம்மானே.
நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்
நினையாது ஒரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன்
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகி வந்தென்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
அஞ்சேலுமென் னீர் அதிகைக்கெடில
வீரட்டானத்துறை அம்மானே.
பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர்
படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேயுமக் காட்செய்து வாழலுற்றாற்
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர்
பெற்றமேற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீரடி கேள் அதிகைக்கெடில
வீரட்டானத்துறை அம்மனே.
முன்னம்மடி யேன்அறி யாமையினான்
முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னையடி யேனுமக் காளும்பட்டேன்
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ
தலையாயவர் தங்கட னாவதுதான்
அன்னநடை யார் அதிகைக்கெடில
வீரட்டானத்துறை அம்மானே.
காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற்
கரைநின்றவர் கண்டுகொள் என்றுசொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட
நிலைக்கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன்
வார்த்தையிது வொப்பது கேட்டறியேன்
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார் புனலார் அதிகைக்கெடில
வீரட்டானத்துறை அம்மானே.
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன் நாமம் என்னாவின் மறந்தறியேன்
உலர்ந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய்
உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய்
அலந்தேன் அடியேன் அதிகைக்கெடில
வீரட்டானத்துறை அம்மானே.
உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும்
ஒருவர்தலை காவலி லாமையினல்
வயந்தேயுமக் காட்செய்து வாழலுற்றால்
வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தேயென் வயிற்றின கம்படியே
பறித்துப்புரட் டியறுத் தீர்த்திடநான்
அயர்ந்தேன் அடியேன் அதிகைக்கெடில
வீரட்டானாத்துறை அம்மானே.
வலித்தேன்மனை வாழ்கை மகிழ்ந்தடியேன்
வஞ்சம்மன மொன்று மிலாமையினாற்
சலித்தால் ஒருவர் துணை யாருமில்லைச்
சங்கவெண்குழைக் காதுடை எம்பெருமான்
கலித்தேயென் வயிற்றி னகம்படியே
கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்துதின்ன
அலுத்தேன் அடியேன் அதிகைக்கெடில
வீரட்டானத்துறை அம்மானே.
பொன்போல மிளிர்வதொர் மேனியினீர்
புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்
துன்பேகவ லைபிணி யென்றிவற்றை
நணுகாமற் றுரந்து கரந்துமிடீர்
என்போலிக ளும்மை இனித்தெளியார்
அடியார் படுவது இதுவேயாகில்
அன்பே அமையும் அதிகைக்கெடில
வீரட்டானத்துறை அம்மானே.
போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல்
புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தானரக் கன்றனை மால்வரைக்கீழ்
அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய்
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்
என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார் புனல் சூழ் அதிகைக்கெடில
வீரட்டானத்துறை அம்மானே.
இத்தலத்துக்கான பதிகத்தைப் பாடியவர்கள் குமாரவயலூர் திருஞ்ஞான பாலச்சந்திரன் மற்றும் மயிலாடுதுறை சிவக்குமார்
</p><p align="justify"> </p><p align="justify"> </p><p align="justify"><strong>Picture courtesy : www.shivatemples.com</strong></p>