வெண்குஷ்டம் நோய் தீர்க்கும் ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர் கோவில், திருதலையாலங்காடு

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 93-வது தலமாக விளங்குவது தலையாலங்காடு.
Published on
Updated on
4 min read

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 93-வது தலமாக விளங்குவது தலையாலங்காடு.

    இறைவன் பெயர்: நர்த்தனபுரீஸ்வரர், ஆடல்வல்லநாதர்
    இறைவி பெயர்: ஸ்ரீபாலாம்பிகை, திருமடந்தை அம்மை

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது?

கும்பகோணம் - திருவாரூர் சாலை வழியில் உள்ள குடவாசல் என்ற ஊரில் இருந்து கிழக்கே 8 கி.மீ. தொலைவிலும், திருப்பெருவேளூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது.

ஆலய முகவரி

அருள்மிகு ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில்,
தலையாலங்காடு,
செம்பங்குடி அஞ்சல்,
குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 612 603.

இக்கோயில் தினமும் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். அருகிலேயே அர்ச்சகர் இல்லம் உள்ளதால் எப்போதும் தரிசிக்கலாம்.

செருக்குற்றுத் திரிந்த தாருகாவன முனிவர்கள், இறைவனின் பெருமை உணராது, அவரை அழித்திடத் தீர்மானித்து ஆபிசார வேள்வி நடத்தினர். ஈசனோ அவற்றிலிருந்து புறப்பட்ட புலியைக் கிழித்து, அதன் தோலைப் போர்த்தி வீர நடனம் புரிந்தார். நாகங்களை ஆபரணமாகச் சூடினார். மானை ஏந்தினார். மழுவைத் தாங்கினார். தாருகாவன முனிவர்களின் ஆணவத்தை ஒடுக்கி, இறைவன் ஒருவனே என்பதையும், ஈசனால் மட்டுமே சகல செயல்களும் நடக்கின்றன என்பதையும் உணர்த்தி அருள்புரிந்தார். தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய முயலகனை அடக்கி அவன் முதுகின் மீது இறைவன் நடனம் புரிந்த தலம் இதுவாகும்.

தேவாரப் பாடல் பெற்ற தலையாலங்காடு, தென்னிந்திய வரலாற்றிலும் பெயர் பெற்ற ஊராகும். இவ்வூர் சங்க காலத்தில் "தலையாலங்கானம்" என்று போற்றப்பட்டுள்ளது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடையே ஏற்பட்ட கடும் போரில் பாண்டியன் நெடுஞ்செழியன் வெற்றிபெற்றான். இந்தப் போர் நடந்த இடம் தலையாலங்கானம். எனவே இவனுக்கு தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற சிறப்புப் பெயரும் ஏற்பட்டது. இதனைப் புறநானூறு விரிவாக எடுத்துரைக்கிறது. இவ்வளவு மகிமை மிக்க தலத்திலுள்ள இந்த ஆலயம் ஆரவாரமின்றி ஆனந்தச் சூழலில் அமைதியாக அமைந்துள்ளது.

உயர்ந்த ராஜகோபுரமோ ஓங்கிய மதில்களோ இல்லாமல் இவ்வாலயம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய ஆலயத்தின் முன்பு, தலத்தின் திருக்குளமான சங்கு தீர்த்தம் உள்ளது. குளக்கரையின் மேல் நுழைவு வாயிலுக்குள் சென்றால் முதலில் அம்பாள் சந்நிதி தென்திசை நோக்கியுள்ளது. சிறிய முன் மண்டபத்தோடு கூடிய தனிச் சந்நிதிக்குள் ஸ்ரீபாலாம்பிகை கலையெழில் கொண்டு கருணை புரிகிறாள். திருமடந்தை என்றும் அழைக்கப்படுகின்றாள். சண்டேஸ்வரி சந்நிதியும் இங்கு உண்டு. சந்நிதிக்கு வெளியே சனீஸ்வரர் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். நந்தி தேவர் தனி மண்டபத்துள் அமர்ந்துள்ளார். பின் திறந்தவெளியில் நீண்ட பாதை. அது சுவாமி சந்நிதியைச் சென்றடைகிறது.

செங்கற்களால் ஆன ஸ்வாமி சந்நிதி சபா மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் அமைந்துள்ளது. நீண்ட பாணம் கொண்டு சதுர ஆவுடையார் மீது அற்புதமாகத் தரிசனம் தருகின்றார் ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர். ஆடல்வல்லநாதர் என்பது இவரது தமிழ்ப் பெயராகும். இவரது தரிசனம் முடித்து, ஆலய வலம் வருகையில், வடக்கே தலவிருட்சமான பலா மரத்தைக் கண்டு வணங்கலாம். தனியே ஒரு லிங்கமும், அம்பாள் சந்நிதியும், விநாயகருக்கும் முருகனுக்கும் தனித்தனி சந்நிதியும் இங்கே உள்ளது. ஸ்வாமி சந்நிதி முன்பு ஓலைச்சுவடி ஏந்திய சரஸ்வதியின் சிலை உள்ளது. வீணையில்லா சரஸ்வதியை இங்கே காணலாம். சரஸ்வதி தேவி இங்கு பரமனை வழிபடும்போது, ஜோதிர்லிங்கத் தரிசனத்தைத் தந்து அருள்புரிந்துள்ளார். பங்குனி 30, 31 மற்றும் சித்திரை மாதம் 1, 2, 3 ஆகிய தேதிகளில் சூரியக் கதிர்கள் இறைவன் மீது விழுந்து சூரிய பூஜை நடைபெறுகிறது.

இத்தல தீர்த்தக்குளமான சங்கு தீர்த்தம் மிக சிறப்புடையது. இத்தீர்த்தத்தில் தொடர்ந்து 45 நாட்கள் நீராடி, இறைவன், இறைவி முன்பு நெய் தீபமேற்றி வழிபட, வெண்குஷ்டம் என்ற ஒருவகை தோல் நோய் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மேலும் சகல தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளும் தீரும். முன்னோர்களது சாபங்கள் அகலும். இத்தல பைரவருக்கு வடைமாலை சாற்றி வழிபட எதிரிகள் நாசமடைவர். இத்தல இறைவனுக்கும் அம்பிகைக்கும் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வில்வ அர்ச்சனை செய்து வழிபட, தடைபட்ட காரியங்கள் விரைவில் நடைபெறும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாகும். பிள்ளைப்பேறு கிட்டும். இறைவன் நடனமாடிய அரிய தலங்களுள் இதுவும் ஒன்றென்பதால், நடனப் பயிற்சியாளர்கள் அவசியம் வழிபட வேண்டிய திருத்தலமாகும்.

திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளியுள்ள இத்தலத்துக்கான பதிகம் 6-ம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. திருநாவுக்கரசர் இந்த தலத்தை கால்களால் மிதிப்பதைப் பாவமாகக் கருதி, கரங்களால் ஊன்றிவந்து வழிபட்டு பதிகம் பாடித் துதித்துள்ளார். இறைவன் தை அமாவாசை தினத்தில், ஆலயத்தின் வடபிராகாரத்தில் உள்ள பலா மரத்தடியில் அப்பருக்குக் காட்சி கொடுத்து அருள்புரிந்துள்ளார். அப்பர் இத்தலம் மீது பத்து பாடல்களைப் பாடிச் சிறப்பித்துள்ளது மட்டுமின்றி, பிற திருத்தலப் பதிகங்களிலும் இத்தலத்தைக் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார்.

திருநாவுக்கரசர், இத்தலப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் தலையாலங்காடு இறைவனை அடையாமல் வீணாய் நாட்களைப் போக்கினேனே என்று மனம் உருகிப் பாடியுள்ளார்.

1. தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைச்
சூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை
அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை
ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை
முண்டத்தின் முளைதத்து எழுந்த தீ ஆனானை
மூவுருவத்து ஓர் உருவாய் முதலாய் நின்ற
தண்டத்தில் தலையாலங்காடன் தன்னைச்
சாராதே சால நாள் போக்கினேனே.

2. அங்கு இருந்த அரையானை அம்மான் தன்னை
அவுணர் புரம் ஒரு நொடியில் எரி செய்தானைக்
கொக்கு இருந்த மகுடத்து என் கூத்தன் தன்னைக்
குண்டலம் சேர் காதானைக் குழைவார் சிந்தை
புக்கு இருந்து போகாத புனிதன் தன்னைப்
புண்ணியனை எண்ணரும் சீர்ப் போகம் எல்லாம்
தக்கு இருந்த தலையாலங்காடன் தன்னைச்
சாராதே சால நாள் போக்கினேனே.

3. மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை
விளங்கிள மாமதி சூடும் விகிர்தன் தன்னை
எய்தத்து அவமே உழிதந்த ஏழையேனை
இடர்க்கடலில் வீழாமே ஏற வாங்கிப்
பொய்த்தவத்தார் அறியாத நெறி நின்றானைப்
புனல் கரந்திட்டு உமையொடொடு ஒரு பாகம் நின்ற
தத்துவனைத் தலையாலங்காடன் தன்னைச்
சாராதே சால நாள் போக்கினேனே.
 
4. சிவனாகித் திசைமுகனாய்த் திருமாலாகிச்
செழுஞ்சுடராய்த் தீயாகி நீருமாகிப்
புவனாகிப் புவனங்கள் அனைத்துமாகிப்
பொன்னாகி மணியாகி முத்துமாகிப்
பவனாகிப் பவனங்கள் அனைத்துமாகிப்
பசு ஏறித் திரிவான் ஓர் பவனாய் நின்ற
தவனாய தலையாலங்காடன் தன்னைச்
சாராதே சால நாள் போக்கினேனே.

5. கங்கை எனும் கடும்புனலைக் கரந்தான் தன்னைக்
காமரு பூம்பொழில் கச்சிக் கம்பன் தன்னை
அங்கையினில் மான்மறி ஓன்று ஏந்தினானை
ஐயாறு மேயானை ஆரூரானைப்
பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் தன்னைப்
பரிதிநியமத்தானைப் பாசூரானைச்
சங்கரனைத் தலையாலங்காடன்த்தன்னைச்
சாராதே சால நாள் போக்கினேனே.
 
6. விடம் திகழும் அரவு அரைமேல் வீக்கினானை
விண்ணவர்க்கும் எண்ணரிய அளவினானை
அடைந்தவரை அமருலகம் ஆள்விப்பானை
அம்பொன்னைக் கம்ப மா களிறு அட்டானை
மடந்தை ஒரு பாகனை மகுடம் தன்மேல்
வார் புனலும் வாளரவும் மதியும் வைத்த
தடங்கடலைத் தலையாலங்காடன் தன்னைச்
சாராதே சால நாள் போக்கினேனே.

7. விடையேறிக் கடைதோறும் பலி கொள்வானை
வீரட்டம் மேயானை வெண்ணீற்றானை
முடைநாறும் முதுகாட்டில் ஆடலானை
முன்னானைப் பின்னானை அந்நாளானை
உடை ஆடை உரிதோலே உகந்தான் றன்னை
உமையிருந்த பாகத்துள் ஒருவன் தன்னைச்
சடையானைத் தலையாலங்காடன்த்தன்னை
சாராதே சால நாள் போக்கினேனே.
 
8. கரும்பு இருந்த கட்டிதனைக் கனியைத் தேனைக்
கன்றாப்பின் நடுதறியைக் காறையானை
இரும்பு அமர்ந்த மூவிலை வேல் ஏந்தினானை
என்னானைத் தென்னானைக் காவான் தன்னைச்
சுரும்பு அமரும் மலர்க்கொன்றை சூடினானைத்
தூயானைத் தாயாகி உலகுக்கு எல்லாம்
தரும்பொருளைத் தலையாலங்காடன் தன்னைச்
சாராதே சால நாள் போக்கினேனே.

9. பண்டு அளவு நரம்பு ஓசைப் பயனைப் பாலைப்
படுபயனைக் கடுவெளியைக் கனலைக் காற்றைக்
கண்டளவில் களிகூர்வார்க்கு எளியான் தன்னைக்
காரணனை நாரணனைக் கமலத்தோனை
எண்டளவில் என்னெஞ்சத்து உள்ளே நின்ற
எம்மானைக் கைம்மாவி னுரிவை பேணுந்
தண்டு அரனைத் தலையாலங்காடன் தன்னைச்
சாராதே சால நாள் போக்கினேனே.

10. கைத்தலங்கள் இருபது உ அரக்கர் கோமான்
கயிலைமலை அதுதன்னைக் கருதாது ஓடி
முத்து இலங்கு முடிதுளங்க வளைகள் எற்றி
முடுகுதலும் திருவிரலொன்று அவன்மேல் வைப்பப்
பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டுப்
பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாம
தத்துவனைத் தலையாலங்காடன் தன்னைச்
சாராதே சால நாள் போக்கினேனே.

இத்தலத்தைப் பற்றிய அப்பர் தேவாரம் - பாடியவர் கொடுமுடி வசந்தகுமார் ஓதுவார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com