மஹாளய பட்சம் புரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டும், விசேஷமாகக் கருதப்படும் வரும் மஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டும், இந்த வாரம் நாம் ராமேஸ்வரம் தலத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
இறைவன் பெயர்: ராமநாதசுவாமி
இறைவி பெயர்: பர்வதவர்த்தினி
இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டும் என மொத்தம் மூன்று பதிகங்கள் உள்ளன.
எப்படிப் போவது
இந்தத் திருத்தலம் ராமேஸ்வரம் தீவில் உள்ளது. சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து ரயில் வசதி உண்டு. மதுரை, திருச்சியில் இருந்து பேருந்து வசதியும் இருக்கிறது
ஆலய முகவரி
அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில்,
ராமேஸ்வரம்,
ராமநாதபுரம் மாவட்டம் – 623 526.
ராமாயணம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது ராமேஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலம். இந்தியாவில் மிகவும் தெய்வீகத்தன்மை உடையதாகக் கருதப்படும் கோவில்களில் ராமேஸ்வரமும் ஒன்றாகும். ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து மூலவர் ராமநாதரை வழிபடுவதும், அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் சமுத்திரக் கரையில் நீராடுவதும், ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய கடமைகளாகக் கருதப்படுகின்றன. இறந்தவர்களுக்காகத் திதி, தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த திருத்தலங்களில் ராமேஸ்வரம் ஒரு முக்கியத் தலம் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புபெற்ற தலம் ராமேஸ்வரம்.
தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில், பாக் ஜலசந்தியில் உள்ள ராமேஸ்வரம் தீவில் ராமநாதசுவாமி ஆலயம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக பாம்பன் ரயில் பாலம் மூலமாகத்தான் ராமேஸ்வரம் செல்ல முடியும் என்று இருந்த நிலை மாறி, இப்போது பாம்பன் சாலைப் பாலமும் இருப்பதால் எளிதாக ராமேஸ்வரம் சென்றுவர முடியும்.
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ராமேஸ்வரம் தலமும் ஒன்று. இந்தியாவில் உள்ள புண்ணியத் தலங்களுள் நான்கு தலங்களையே வட இந்தியாவில் உள்ளோர் மிகச் சிறப்பாகக் கருதுகின்றனர். அவை முறையே, வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், மேற்கே துவாரகநாதம், தெற்கே ராமநாதம். இவற்றுள் முதல் மூன்று தலங்களும் வைணவத் தலங்களாகும். நான்காவதான ராமநாதம் ஒன்றே சிவஸ்தலம். இத்தலத்தில் ராமநாதர் ஜோதிர்லிங்க மூர்த்தியாகத் திகழ்கிறார். இந்த ஜோதிர்லிங்கம், சுவாமி சந்நதியின் முதல் கிழக்குப் பிராகாரத்தில் உள்ள சிறிய சந்நிதியில் இருக்கிறது.
இலங்கை மீது படையெடுத்து ராவணாதி அரக்கர்களை வென்று, ராமன் அயோத்திக்குத் திரும்பும் வழியில், இராவணனைக் கொன்றதனால் ஏற்பட்ட பழியைப் போக்கிக்கொள்வதற்கு, ராமேஸ்வரத்தில் சீதாப்பிராட்டியால் மணலால் அமைக்கப்பட்ட சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து சிவபெருமானை வழிபட்டார் என்றும் புராண வாயிலாக அறியப்படுகிறது. ராமபிரான் சிவலிங்கம் ஸ்தாபித்து அவரை வழிபட்ட காரணத்தினால் இத்தலத்துக்கு ராமேஸ்வரம் என்று பெயர் ஏற்பட்டது.
வடக்கே உள்ள காசியும் தெற்கே உள்ள ராமேஸ்வரமும் இந்துக்களின் சிறந்த புண்ணியத் தலங்களாகக் கருதப்படுகின்றன. காசிக்குப் புனிதப் பயணம் சென்றவர்கள், ராமேஸ்வரம் தலத்துக்கு வந்து தனுஷ்கோடி தீர்த்தத்தில் நீராடி ராமநாதரை வழிபட்டால்தான், காசி தலப் பயணம் முழுமை அடைந்ததாகும் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கையாகும். ராமாயணத் தொடர்புடைய ராமலிங்கத்தை வழிபட, இந்தியாவின் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருகின்றனர். எனவே, ராமேஸ்வரக் கோவிலை இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்குரிய ஒரு சிறந்த சின்னமாகக் கருதலாம்.
தல வரலாறு
இலங்கைப் போரில் ராவணனைக் கொன்ற பிறகு, சீதையை சிறைமீட்டு ராமபிரான் அழைத்துவருகிறார். ராமேஸ்வரம் தலம் வந்த பிறகு, ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் விலக சிவபெருமானை வழிபடத் தீர்மானித்து, அனுமனை சிவலிங்கம் கொண்டு வருமாறு காசிக்கு அனுப்புகிறார். சிவலிங்கப் பிரதிஷ்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்துக்குள் அனுமன் திரும்பி வராததால், கடற்கரையில் உள்ள மணலால் சீதை ஒரு சிவலிங்கம் உருவாக்கித் தந்தாள். ராமபிரான் அந்த சிவலிங்கத்தை குறித்த நேரத்தில் பிரதிஷ்டை செய்து தனது பூஜையை முடித்தார்.
காலம் கடந்து வந்த அனுமன், தான் வருவதற்குள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் கண்டு கோபமுற்று, தனது வாலால் ராமபிரான் பிரதிஷ்டை செய்த லிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயன்று தோல்வியுற்று நின்றார். அனுமனை ராமன் சமாதானப்படுத்தி, அனுமன் கொண்டுவந்த லிங்கத்தை முதலில் பிரதிஷ்டை செய்த லிங்கத்துக்கு அருகில் பிரதிஷ்டை செய்தார். மேலும், அனுமன் கொண்டுவந்த லிங்கத்துக்கே முதல் பூஜை நடைபெற வேண்டும் என்றும் கட்டளையிட்டார். அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம், ராமலிங்கத்துக்கு வடக்குப்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அனுமன் கொண்டுவந்த லிங்கம் காசி விஸ்வநாதர் எனப்படும். இன்றும் இந்தக் காசி விஸ்வநாதருக்கே முதல் பூஜை நடைபெறுகிறது. பிறகே, ராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமலிங்கத்துக்குப் பூஜை நடைபெறுகிறது.
கோவில் அமைப்பு
ராமேஸ்வரம் திருக்கோவில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். 865 அடி நீளமும் 657 அடி அகலமும் உடைய ராமேஸ்வரம் கோவிலின் கிழக்கு கோபுரமே மிகவும் உயரமானது. இதன் உயரம் சுமார் 126 அடி. மேற்கில் உள்ள கோபுரம் சுமார் 78 அடி உயரம் உடையது. இக்கோவிலின் நான்கு பக்கமும் வாயில்கள் அமைந்திருந்தாலும், வடக்கு, தெற்கு வாயில்கள் உபயோகத்தில் இல்லை. ஆலயத்தினுள் ராமலிங்கம், காசி விஸ்வநாதர் பர்வதவர்த்தினி, விசாலாட்சி, நடராஜர் ஆகியோருக்கு தனித்தனி விமானங்கள் அமைந்திருக்கின்றன.
சுவாமியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இச்சந்நிதியில் சீதாதேவியால் உருவாக்கப்பட்டு ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமலிங்கர், சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். இந்த சிவலிங்கத் திருமேனியில் அனுமனின் வால் பட்ட தழும்பை இன்றும் காணலாம். சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் காசி விஸ்வநாதர் சந்நிதி அமைந்துள்ளது. இதுவே அனுமன் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமாகும். மூலவர் கருவறையின் முன்மண்டபத்தில் ராமன், சீதை, லட்சுமணன் ஆகியோருடைய திருஉருவங்களைக் காணலாம். இவர்களுக்கு எதிரே தெற்கு நோக்கியபடி தனியே ஒரு ஆஞ்சநேயரும் எழுந்தருளியுள்ளார்.
அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நிதி, இராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது. அம்பிகை, கோவிலின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி கிடந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். தென்மேற்கு மூலையில் சந்தானகணபதியின் சந்நிதி அமைந்திருக்கிறது. ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. ராமநாதர் சந்நிதிக்கு பின்புறம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிராகாரங்களுக்கிடையே சேதுமாதவர் சந்நிதி அமைந்துள்ளது. தினமும் காலை 5 மணிக்கு ராமநாதசுவாமி சந்நதியில், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் நடக்கிறது. இந்த அபிஷேகத்தை தரிசிக்கக் கட்டணம் உண்டு. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்துக்குக் கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரம் இருக்கிறது. சக்தி பீடங்களில் இது சேதுபீடம் ஆகும்.
இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு 1212 தூண்களைக் கொண்ட இக்கோவிலின் மூன்றாம் பிராகாரம் ஆகும். உலகிலேயே மிக நீளமான பிராகாரம் என்ற பெருமையைப் பெற்ற இப்பிராகாரம், உலகப் பிரசித்தி பெற்றதாகும். முத்துவிஜயரகுநாத சேதுபதி அவர்களால் (1735 - 1746) கி.பி. 1740-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரசித்தி பெற்ற மூன்றாம் பிராகாரம் அமைக்கும் பணி, முத்துராமலிங்க சேதுபதி அவர்களால் (1740 – 1770) கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் பிராகாரம் வெளிப்புறத்தில் கிழக்கு, மேற்காக 690 அடியும், வடக்கு தெற்காக 435 அடி நீளமும் கொண்டது. உள்புறத்தில் கிழக்கு மேற்காக 649 அடியும், வடக்கு தெற்காக 395 அடி நீளமும் கொண்டது. இந்தப் பிராகாரத்தில், ராமபிரானுக்கு கடலில் பாலம் (சேது பாலம்) அமைக்க உதவி செய்ய வந்த நளன், நீலன், கவன் ஆகிய மூன்று வானரர்களின் பெயரால் லிங்க சந்நதிகளும், பதஞ்சலி ஐக்கியமான நடராஜர் சந்நதியும் உள்ளன. இந்த நடராஜர், ருத்திராட்ச மண்டபத்தில் அழகுடன் எழுந்தருளியுள்ளார்.
கோவில் தீர்த்தம்
ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனத்தைவிட தீர்த்தமாடுவதுதான் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்களும், வெளியே மேலும் பல தீர்த்தங்களும் உள்ளன. ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் ராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முதலில் தீர்த்தமாடுவதைத் தொடங்கி, பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். முற்காலத்தில் தனுஷ்கோடியில் நீராடி அதன் பின்பு, ராமேஸ்வரம் வந்து தீர்த்தமாடும் வழக்கம் இருந்தது. பல வருடங்களுக்கு முன்பு புயலில் தனுஷ்கோடி அழிந்தபிறகு, கோயில் முன்பு உள்ள அக்னி தீர்த்தக் கடலில் நீராடும் வழக்கம் ஏற்பட்டது.
அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் சமுத்திரக் கரையில்தான் முன்னோர்களுக்குத் தர்ப்பணங்கள், பித்ரு கடன்கள் நிறைவேற்றப்படுகின்றன. தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மஹாளய அமாவாசை ஆகிய தினங்களில், பக்தர்கள் கூட்டத்தால் ராமேஸ்வரம் நிரம்பி இருக்கும்.
இத்தலத்தைப் பற்றிய திருஞானசம்பந்தரின் பதிகம் - பாடியவர் மதுரை முத்துக்குமரன்
இத்தலத்தைப் பற்றிய திருநாவுக்கரசரின் தேவாரம் - பாடியவர் மதுரை முத்துக்குமரன்
இத்தலத்தைப் பற்றிய திருநாவுக்கரசரின் தேவாரம் பகுதி 2 - பாடியவர் மதுரை முத்துக்குமரன்