பாவங்கள், வினைகள் நீங்கி இன்பமுடன் வாழ திருமேனிநாதர் கோவில், திருச்சுழியல்

பாண்டிய நாட்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் 12-வது தலமாக இருப்பது திருச்சுழியல்.
பாவங்கள், வினைகள் நீங்கி இன்பமுடன் வாழ திருமேனிநாதர் கோவில், திருச்சுழியல்
Published on
Updated on
5 min read

பாண்டிய நாட்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் 12-வது தலமாக இருப்பது திருச்சுழியல். இந்நாளில் திருச்சுழி என்று விளங்குகிறது. நாம் நம் வாழ்நாளில் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் இத்தல இறைவனை வழிபட நீங்கும். திருமணக் கோலத்தில் அமைந்துள்ள இத்தல இறைவன், இறைவி சந்நிதிகளை சுற்றிவந்து அவர்களை வழிபட திருமண தடை நீங்கி பலன் பெறலாம்.

இறைவன் பெயர்: திருமேனிநாதர், பூமிநாதசுவாமி

இறைவி பெயர்: சகாயவல்லி, துனைமாலைநாயகி

இத்தலத்துக்கு சுந்தரர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது

மதுரை மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. மதுரை, அருப்புக்கோட்டையில் இருந்து நேரடி பேருந்து வசதிகள் இருக்கின்றன. மதுரையில் இருந்து காரியாபட்டி வரை நகரப் பேருந்தில் சென்று, அங்கிருந்து மீண்டும் நகரப் பேருந்தில் திருச்சுழியல் வரை செல்லலாம். மதுரை - காரியாபட்டி - திருச்சுழிதான் நேர்வழி. மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை சென்று பின் திருச்சுழி செல்வது சுற்று வழியாக இருந்தாலும், சாலை வசதி நன்றாக உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோவில்,

திருச்சுழி அஞ்சல், திருச்சுழி வட்டம்,

விருதுநகர் மாவட்டம் – 626 129.

இவ்வாலயம் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தலப் பெயர் காரணம்

சிவபெருமான் இத்தலத்தில் பிரளய வெள்ளத்தை ஓர் அம்பினால் சுழித்துப் பாதாளத்தில் செலுத்தியதால் இவ்வூர் திருச்சுழியல் என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு யுகத்திலும் இவ்வூரில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உண்டாவது உண்டு. துவாபர யுகத்தில் பேரழிவு ஏற்பட்டபோது, இப்பகுதியை ஆண்டுவந்த மன்னன் இந்த இயற்கை அழிவிலிருந்து இவ்வூரைக் காப்பாற்றும்படி சிவபெருமானை வேண்டினான்.

அவனது வேண்டுதலை ஏற்றுக்கொண்ட சிவன், தனது சூலத்தால் தரையில் குத்தி நிலத்தில் ஒரு பெரிய துளையிட்டு, வெள்ளத்தைப் பூமியில் புகுமாறு செய்தார். சிவபெருமானின் சூலத்தைச் சுற்றி வெள்ளம் சுழித்துச் சென்றதால் சுழி என்று பெயர் பெற்று, பின்னர் திரு எனும் அடைமொழி சேர்ந்து திருச்சுழியல் ஆயிற்று என் தலபுராணம் விவரிக்கிறது.

கோவில் அமைப்பு

முகப்பு வாயில் வழியே உள்ளே துழைந்தால் விசாலமான வெளி முற்றம் காணப்படுகிறது. நேரே அம்பாள் சந்நிதி கோபுரமும், அதன் வலது பக்கம் இறைவன் சந்நிதி கோபுரமும் உள்ளன. சுவாமி சந்நிதி கோபுரத்துக்கு முன்னால் கற்தூண்களால் ஆன மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்துக்கு முன், இவ்வாலயத்தின் ஒரு தீர்த்தமான கவ்வைக்கடல் (ஒலிப்புணரி) உள்ளது. முதல் மண்டப வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நாம் காண்பது கம்பத்தடி மண்டபம். இதில் பலிபீடம், கொடிமரம் ஆகியவற்றைக் காணலாம்.

நவக்கிரக சந்நிதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், விநாயகர் ஆகியோரின் சந்நிதிகளும் இங்குள்ளன. இம்மண்டபம், சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதி இரண்டுக்கும் முன்னால் இணைந்து காணப்படுகிறது. இந்த கம்பத்தடி மண்டபத்திலுள்ள தூண்களில் அநேக சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒரு தூணில் ஆஞ்சநேயரின் சிற்பத்தையும் காணலாம்.

இம்மண்டபத்தை அடுத்து உள்ளது ஏழுநிலை கோபுரம். கோபுர வாயில் வழியே உள் நுழைந்து நந்தியை வணங்கிவிட்டு சபா மண்டபம், அந்தராள மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கடந்து இறைவன் கருவறையை அடையலாம். இறைவன் திருமேனிநாதர் சுயம்புலிங்க வடிவில், சதுர ஆவுடையார் மீது கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். கருவறை அகழி அமைப்புடையது. மூன்று பிராகாரங்களை உடைய இத்தலத்தின் கருவறை சுற்றுப் பிராகாரத்தில் உஷா, பிரத்யுஷா சமேத சூரியன், அறுபத்துமூவர், சந்தானாசாரியர், சப்தமாதர்கள் சந்நிதிகள் உள்ளன. மேலும், தென்மேற்கில் விநாயகர், மேற்கில் சோமாஸ்கந்தர், காசிவிசுவநாதர், விசாலாட்சி, சுழிகைக் கோவிந்தர், வடமேற்கில் முருகன் ஆகியோர் எழுந்தருளி உள்ளனர்.

கருவறை சுற்றுச் சுவரில் கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், துர்க்கை, பிரம்மா ஆகியோர் உள்ளனர். சபா மண்டபத்தில் நடராசர் சந்நிதி உள்ளது. இங்கு நடராசர் மூலவராகச் சிலாரூபத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். அருகே நடராசர், சிவகாமி, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோரின் உற்சவ மூர்த்திகள் தரிசனம். கருவறை பிராகாரம் சுற்றி வரும்போது மேற்கு சுற்றில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் பூதேவி, ஶ்ரீதேவி சமேத சுழிகை கோவிந்தர் ஆகியோர் காட்சி அளிக்கின்றனர்.

சுவாமி சந்நிதிக்கு தென்புறம் சகாயவல்லி என்றும், துனைமாலைநாயகி என்றும் அழைக்கப்படும் இறைவியின் கோவில் தனி சந்நிதியாக இருக்கிறது. இங்கும் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன. இவற்றைக் கடந்து கருவறை உள்ளே சென்றால், இறைவி கிழக்கு நோக்கி காட்சி தருகிறாள். இறைவியின் எதிரில் உள்ள மண்டபத்தின் மேற்புறத்தில் ஸ்ரீ சக்கரம் கல்லில் வடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

சுவாமி, அம்பாள் இரு சந்நிதிகளையும் சேர்த்து வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது தென்மேற்கு மூலையில் அண்டபகிரண்ட விநாயகர் சந்நிதி உள்ளது. அதையடுத்து மேற்குப் பிராகாரத்தில் தலமரமான புன்னை மரக்கன்று வைத்து வளர்க்கப்படுகிறது. அதையடுத்து வடமேற்கு மூலையில் பிரளயவிடங்கர் சந்நிதி அமைதுள்ளது. இத்தலத்தில் ஏற்பட்ட பிரளய வெள்ளத்தை அடக்கியவர் இவர். மேலும் வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது வடகிழக்கு மூலையில் தண்டபாணி சுவாமி சந்நிதி இருக்கிறது. சந்நிதி முன் கொடிமரம், பலிபீடம், மயில் உள்ளன. 

இத்திருத்தலத்தில் திருமால், இந்திரன், பிரம்மன், சூரியன், கௌதமர், அகலிகை, கண்ணுவ முனிவர், அர்ச்சுனன், சேரமான் ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர் என்பது சிறப்பு. இத்தலத்தில் பூமிதேவி இறைவனை வழிபட்டிருப்பதால், இறைவனுக்கு பூமிநாதசுவாமி என்ற பெயரும் உண்டு. ஆண்டுக்கு இருமுறை சூரிய ஒளி மூலவரின் திருமேனி மீது விழுமாறு கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது.

ஶ்ரீ ரமணாஸ்ரமத்தை ஸ்தாபித்த ஶ்ரீ ரமண மகரிஷி பிறந்து வளர்ந்து, படித்தது இத்தலத்தில்தான் என்பது சிறப்பு. அவர் பிறந்த வீடு இந்நாளில் ஒரு புனித யாத்திரைத் தலமாக உள்ளது.

சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தனது பதிக பாடல்களில் இத்தலம் பற்றி மிகவும் உயர்வாக சுந்தரர் குறிப்பிடுகிறார். திருச்சுழியலில் எழுந்தருளியிருக்கின்ற கடவுளை வழிபட்டு மீள்கின்றவர்களின் திருவடிகளை வணங்குவோர், அவர்கள் தாம் வாழ்கின்ற நாட்டுக்கு அரசர் போன்று திருமகள் அருள் பெற்று செல்வத்துடன் வாழ்வர் என்று குறிப்பிடுகிறார். (பாடல் 3)

திருச்சுழி சென்று வந்தவரை வழிபட்டாலே இவ்வளவு பலன் என்றால், நாமே நேரில் சென்று வழிபடுவதால் ஏற்படும் பலன்களைப் பற்றி மேலும் கூற வேண்டியதில்லை. மேலும், சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருச்சுழியலுக்கு சென்று இறைவனுக்குத் தொண்டு செய்ய வல்லவர்கள், இன்பம் உடையவரும், துன்பம் இல்லாதவரும் ஆவர் என்றும், திருச்சுழி இறைவனை மனதில் வைத்து அவரது திருவடியை நினைத்து வாழ்ந்து வருபவர்களின் வினைகள் யாவும் நீங்கும் என்றும் குறிப்பிடுகிறார்.

1. ஊனாய் உயிர் புகலாய் அகலிடமாய் முகில்பொழியும்

வானாய் வரு மதியாய் விதி வருவானிடம் பொழிலின்

தேன் ஆதரித்து இசை வண்டினம் மிழற்றும் திருச்சுழியல்

நானாவிதம் நினைவார் தமை நலியார் நமன்தமரே.

2. தண்டேர் மழுப்படையான் மழவிடையான் எழு கடல்நஞ்சு

உண்டே புரம் எரியச் சிலை வளைத்தான் இமையவர்க்காத்

திண் தேர்மிசை நின்றான் அவன் உறையும் திருச்சுழியல்

தொண்டே செய வல்லாரவர் நல்லார் துயர் இலரே.

3. கவ்வைக்கடல் கதறிக் கொணர் முத்தங்கரைக் கேற்றக்

கொவ்வைத் துவர்வாயார் குடைந்து ஆடும் திருச்சுழியல்

தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் அடி தொழுவார்

அவ்வத் திசைக்கு அரசாகுவர் அலராள் பிரியாளே.

4. மலையான் மகள் மடமாது இட மாகத்தவள் மற்றுக்

கொலை யானையின் உரி போர்த்த எம்பெருமான் திருச்சுழியல்

அலையார் சடை உடையான் அடி தொழுவார் பழுமு உள்ளம்

நிலையார் திகழ் புகழால் நெடு வானத்து உயர்வாரே.

5. உற்றான் நமக்கு உயரும் மதிச்சடையான் புலன் ஐந்தும்

செற்றார் திருமேனிப் பெருமான் ஊர் திருச்சுழியல்

பெற்றான் இனிது உறையத் திறம்பாமைத் திருநாமம்

கற்றார் அவர் கதியுட் செல்வர் ஏத்தும்மது கடனே.

6. மலந்தாங்கிய பாசப் பிறப்பு அறுப்பீர் துறைக் கங்கைச்

சலந்தாங்கிய முடியான் அமர்ந்த இடமாம் திருச்சுழியல்

நிலந்தாங்கிய மலரால் கொழும் புகையால் நினைந்து ஏத்தும்

தலந்தாங்கிய புகழாம் மிகு தவமாம் சதுர் ஆமே.

7. சைவத்த செவ் வுருவன் திருநீற்றன் உரும் ஏற்றன்

கை வைத்த ஒரு சிலையால் அரண் மூன்றும் எரி செய்தான்

தெய்வத்தவர் தொழுது ஏத்திய குழகன் திருச்சுழியல்

மெய் வைத்து அடி நினைவார் வினை தீர்தல் எளிதன்றே.

8. பூ ஏந்திய பீடத்தவன் தானும் மடல் அரியும்

கோ ஏந்திய வினையத்தொடு குறுகப் புகல் அறியார்

சே ஏந்திய கொடியானவன் உறையும் திருச்சுழியல்

மா ஏந்திய கரத்தான் எம சிரத்தான் தனது அடியே.

9. கொண்டாடுதல் புரியா வரு தக்கன் பெரு வேள்விச்

செண்டாடுதல் புரிந்தான் திருச்சுழியல் பெருமானைக்

குண்டாடிய சமண் ஆதர்கள் குடைச் சாக்கியர் அறியா

மிண்டாடிய அது செய்தது ஆனால் வரு விதியே.

10. நீர் ஊர்தரு நிமிலன் திருமலையார்க்கு அயல் அருகே

தேர் ஊர்தரும் அரக்கன் சிரம் நெரித்தான் திருச்சுழியல்

பேர் ஊர் என உரைவான் அடி பெயர் நாவலர் கோமான்

ஆரூரன் தமிழ்மாலை பத்து அறிவார் துயர் இலரே.

சுந்தரர் அருளிய பதிகம் - பாடியவர் கொடுமுடி வசந்தகுமார் தேசிகர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.