வியாபாரத்தில் முன்னேற்றம் காண வழிபட வேண்டிய பரங்கிரிநாதர் கோவில், திருப்பரங்குன்றம்

பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்கள் 14-ல் மூன்றாவதாக திருப்பரங்குன்றம் விளங்குகிறது. முருகப் பெருமானின் ஆறுபடை விடுகளில் ஒன்றான இத்தலம்,
வியாபாரத்தில் முன்னேற்றம் காண வழிபட வேண்டிய பரங்கிரிநாதர் கோவில், திருப்பரங்குன்றம்
Published on
Updated on
3 min read


பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்கள் 14-ல் மூன்றாவதாக திருப்பரங்குன்றம் விளங்குகிறது. முருகப் பெருமானின் ஆறுபடை விடுகளில் ஒன்றான இத்தலம், அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலமாகவும் இருக்கிறது. செய்யும் தொழில் நன்றாக நடைபெற, வியாபாரத்தில் முன்னேற்றம் காண இத்தலத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

இறைவன் பெயர்: பரங்கிரிநாதர், பரங்குன்றநாதர், சத்தியகிரீஸ்வரர்

இறைவி பெயர்: ஆவுடைநாயகி

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, சுந்தரர் பதிகம் ஒன்று என மொத்தம் இரண்டு பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது

மதுரையில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் இக்கோவில் இருக்கிறது. மதுரையில் இருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு பரங்கிரிநாதர் திருக்கோவில்,

திருப்பரங்குன்றம் அஞ்சல்,

மதுரை – 625 005.

இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

கயிலாயத்தில் பார்வதிதேவிக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை சிவபெருமான் உபதேசிக்கும்போது, தன் தாயாரின் மடி மீது முருகன் அமர்ந்திருந்தார். தாய்க்குத் தந்தையார் பிரணவ மந்திர உபதேசம் செய்தபோதுர முருகனும் அந்த உபதேசத்தைக் கேட்டார். புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்துகொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்துகொள்வது முறையாகாது. அது பாவம் என்று கருதிய முருகப் பெருமான், இக்குற்றத்துக்குப் பரிகாரம் தேடி திருப்பரங்குன்றம் வந்து தவம் செய்தார்.

சிவனும், பார்வதியும் முருகனுக்குக் காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள். சிவன் - பார்வதி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடைநாயகி என்றும் பெயர் பெற்றார்கள். எனவே, திருப்பரங்குன்றம் முருகன் ஆலயத்துக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் பரங்கிரிநாதர், சத்தியகிரீஸ்வரர் என்ற பெயரில் காட்சி அளிக்கும் சிவனையும், அம்பாள் ஆவுடைநாயகியையும் வழிபட்ட பிறகே முருகனை வழிபட வேண்டும் எம்பறு இவ்வாலயத்தின் மரபு.

தலப் பெயர் காரணம்

பரம்பொருளான சிவபெருமான் குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம். திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான். குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழி. மூன்றும் சேர்ந்து திருப்பரங்குன்றம் ஆயிற்று. இக்குன்றமானது லிங்க வடிவிலேயே காணப்படுவதால், சிவபெருமானே குன்று உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டர். இம்மலையை தினமும் வலம் வந்து வழிபட்டால், தொழுபவரின் வினைகள் தீர்ந்துவிடும் என்று திருஞானசம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.

சுமார் 1050 அடி உயரமுள்ள மலை அடிவாரத்தில், வடக்கு திசை நோக்கி அமைந்திருக்கும் இந்த அழகுமிக்க குடைவரைக் கோவில், சிவபெருமானுக்காகவே தோற்றுவிக்கப்பட்டு ஒரு பாடல் பெற்ற தலமாக இருந்தாலும், இத்தலம் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று என்ற காரணத்தினால் மிகவும் புகழுடன் விளங்குகிறது.

ஒரு சிறிய குன்றின் மீது மலையைக் குடைந்து இக் கோயில் கட்டப்பட்டுள்ளது. வடக்கு திசை நோக்கி அமைந்திருக்கும் அழகிய குடவரைக் கோவில், 150 அடி உயரமுள்ள 7 நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. மூலவர் சுயம்பு லிங்கமாக அருள்மிகு பரங்குன்றீஸ்வரர் என்ற திருநாமத்துடன் கிழக்கு நோக்கியும், கற்பக விநாயகர், துர்க்கை மற்றும் முருகர் வடக்கு நோக்கியும், பவளக்கனிவாய் பெருமாள் மேற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். கோபுர வாயில் கடந்தவுடன் உள்ள மண்டபத் தூண் ஒன்றில், தேவேந்திரன் தனது மகள் தெய்வயானையை முருகனுக்குதி திருமணம் செய்துகொடுப்பது போன்ற சிற்பம் நம் கருத்தைக் கவரும் வகையில் காட்சி அளிக்கிறது. இந்த மண்டபத்திலுள்ள பெரிய நந்தி, அருகில் மயில் மற்றும் மூஞ்சூறு வாகன சிலா உருவங்கள் மிகவும் கண்ணைக் கவரும் நிலையில் இருக்கக் காணலாம்.

பல படிக்கட்டுகளை ஏறி கோவில் கருவறையை அடையலாம். கருவறை ஒரு குடவரைக் கோவிலாக உள்ளது. பரங்குன்றநாதர் மற்றும் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோரை தரிசனம் செய்ய வேண்டும் என்றால், சிறப்பு நுழைவுக் கட்டணம் செலுத்தி அதற்கான தனி வழியில் சென்றால்தான் பார்க்க முடியும். மேலும் மற்ற 3 சந்நிதிகளையும் அருகிலிருந்து தரிசிக்கமுடியும். இல்லாவிடில், இலவச தரிசனத்தில் சற்று தொலைவிலிருந்து மற்ற 3 சந்நிதிகளான விநாயகர், துர்க்கை, முருகர் ஆகியோரை மட்டுமே பார்க்க இயலும். குடவரைக் கோவிலின் அமைப்பு அவ்வாறு அமைந்துள்ளது.

குன்றின் உச்சியில் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் சந்நிதி உள்ளது. நக்கீரருக்கும் இங்கு சந்நிதி உள்ளது. அருகிலுள்ள வற்றாத காசி தீர்த்தம் மிகவும் புனிதமானதாகும்.

முருகப் பெருமான் திருமணம்

முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப் பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக்கொண்டு அருளினார். இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துயர் களையப் பெற்றார்கள். முருகப் பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை முருகனுக்குத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி, முருகன் - தெய்வானை திருமணம் இந்த திருப்பரங்குன்றத்தில் நடந்தது. திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, தெய்வயானையை இந்திரன் தாரை வார்த்து கொடுக்க, முருகப் பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்துகொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.

பராசர முனிவரின் ஆறு மகன்களும் ஒரு தடாகத்திலுள்ள மீன்களுக்கு எப்போதும் துன்பம் இழைத்து வந்தனர். தனது குமாரர்கள் என்றும் பாராமல் மீன்களுக்கு துன்பம் இழைத்த காரணத்தால், அவர்களை மீன்களாகப் பிறக்கும்படி சாபம் இட்டார். அவர்கள் ஆறு பேரும் இத்தலம் வந்து முருகப் பெருமானை வழிபட்டு சிவபெருமான் அருளால் தங்களது சாபம் நீங்கப் பெற்றனர்.

சங்க காலப் புலவர்களில் ஒருவரான நக்கீரர் திருமுருகாற்றுப்படை இயற்றி, தன்னுடன் சிறை வைக்கப்பட்டிருந்த 999 புலவர்களையும் காப்பாற்றிய சிறப்புபெற்ற தலம் திருப்பரங்குன்றம். இத்தலம் இமயமலைக்கு நிகரானதாகக் கருதப்படுகிறது.

சுந்தரர் அருளிய பதிகம் - பாடியவர் பொன்.மு.முத்துவிநாயகம் ஓதுவார் 

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - பாடியவர் குமார வயலூர் பாலச்சந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.