பாடல் பெற்ற நடுநாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் முதல் தலம் திருநெல்வாயில் அரத்துறை. இன்றைய நாளில் திருவட்டுறை, திருவட்டத்துறை என்ற பெயர்களில் வழங்குகிறது
இறைவன் பெயர்: தீர்த்தபுரீஸ்வரர், அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர்
இறைவி பெயர்: திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி, ஆனந்தநாயகி
இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பந்திகம் ஒன்றும், சுந்தரர் பதிகம் ஒன்றும் என மொத்தம் மூன்று பதிகங்கள் உள்ளன. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப்பெற்ற சிவஸ்தலங்கள் 44-ல் இத்தலமும் ஒன்றாகும்.
எப்படிப் போவது
விருத்தாசலம் - தொழுதூர் சாலையில் விருத்தாசலத்தில் இருந்து தென்மேற்கே 26 கி.மீ. தொலைவில் கொடிகளம் என்ற இடத்தில் பிரியும் மண் சாலையில் ஒரு கி.மீ. சென்று இத்தலத்தை அடையலாம். மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான பெண்ணாடகத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் திருநெல்வாயில் அரத்துறை தலம் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் (அரத்துறைநாதர்) திருக்கோவில்,
திருவட்டுறை அஞ்சல்,
திட்டக்குடி வட்டம்,
கடலூர் மாவட்டம் – 606 111.
இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்
தலப் பெருமை
இத்தலம், திருவரத்துறை என்றும் வழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தருக்கு, அரத்துறைநாதர் முத்துச் சிவிகையும், முத்துக் குடையும், முத்துச் சின்னங்களையும் வழங்கி அருளிய தலம் இதுவாகும். திருஞானசம்பந்தர் சீர்காழியில் உமையம்மை கையால் ஞானப்பால் பெற்று பதிகம் பாடி, சைவ சமயத்தை சிறப்பிக்க சிவபெருமான் குடிகொண்டிருக்கும் தலங்களுக்கெல்லாம் திருயாத்திரை தொடங்கினார். சம்பந்தர் சிறு பாலகனாக இருந்ததால் அவருடைய தந்தையார், சம்பந்தரைத் தூக்கிக்கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது.
திருதூங்காணைமாடம் சிவஸ்தலத்தை தரிசித்து திருநெல்வாயில் அரத்துறை நோக்கிச் செல்லும்போது, தந்தை தோள்மீது எழுந்தருள்வதை விட்டு நடந்தே சென்றார். சம்பந்தர் தன் சிற்றடிகள் நோக நடந்து செல்வதைக் கண்டு யாவரும் வருந்தினர். திருநெல்வாயில் அரத்துறை செல்லும் வழியில் மாறன்பாடி என்ற இடத்தில் இரவு தன் அடியார்களுடன் சம்பந்தர் தங்கினார்.
அன்றிரவு, திருநெல்வாயிலிலுள்ள அடியார்கள், மற்றும் கோவில் பணியாளர்கள் கனவில் இறைவன் தோன்றி சம்பந்தர் கால்கள் நோகாமல் இருக்க தான் முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் அளிப்பதாகவும், அவற்றை சம்பந்தரிடம் சேர்த்து அவரை ஆலயத்திற்கு அழைத்து வரும்படியும் ஆணையிட்டார். இதேபோன்று, சம்பந்தர் கனவிலும் தோன்றி இவ்விவரங்களைக் கூறி, முத்துச் சிவிகையில் ஏறிக்கொண்டு தன்னை தரிசிக்க வருபடியும் ஆணையிட்டர்.
மறுநாள் காலை, திருநெல்வாயில் அரத்துறை அடியார்கள், கோவில் பணியாளர்கள் ஆலயத்தை திறந்து பார்க்க அங்கு முத்துச் சிவிகை, முத்துக் குடை, முத்துச் சின்னங்கள் ஆகியவை இருக்கக் கண்டு, இறைவனை கைகளைக் கூப்பி வணங்கினர். பின்னர் அவற்றை எடுத்துக்கொண்டு மாறன்பாடி சென்று சம்பந்தரிடம் கொடுத்து, அவரை முத்துச் சிவிகையில் உட்கார வைத்து, முத்துக் குடை நிழலில் அரத்துறைநாதர் ஆலயம் அழைத்து வந்தனர். சம்பந்தரும் ஆலயம் வந்து இறைவனைத் தொழுது பதிகம் பாடி வணங்கினார்.
தீர்த்தபுரீஸ்வரர் ஆலயம் கிழக்கு நோக்கிய முகப்பு வாயிலுடன் அமைந்துள்ளது. முகப்பு வாயில் கடந்து உட்சென்றால் வெளிப் பிராகாரத்தில் விநாயகர், நால்வர், வான்மீகி முனிவர், சப்த கன்னியர்கள், பூத, பவிஷ்ய, வர்த்தமான லிங்கங்கள், மகாவிஷ்ணு, ஜோதிலிங்கம் முதலிய சந்நிதிகள் உள்ளன. அடுத்து அண்ணாமலை, ஆதிசேஷன், வள்ளி தெய்வயானை சமேத முருகன், தண்டாயுதபாணி சந்நிதிகளையும், சேர சோழ பாண்டிய மன்னர்கள் பெயரில் உள்ள லிங்க மூர்த்திகளையும் தரிசிக்கலாம். காசி விஸ்வநாதரும் விசாலாட்சியுடன் காட்சி தருகிறார். கஜலட்சுமி, பைரவர், சூரியசந்திரர் சந்நிதிகளும் அடுத்துள்ளன. இங்கு ஆலமரம் தலவிருட்சமாகவும் வெள்ளாறும், நீலமலர்ப் பொய்கையும் தீர்த்தங்களாகவும் உள்ளன.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கிய சந்நிதியில் அருள்பாலிக்கிறார். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் உள்ளனர். நடராசர் சிவகாமி தரிசனம், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், சண்டேஸ்வரர், பைரவர் ஆகியோரின் மூர்த்தங்களைத் தரிசித்தபின் உள்ளே சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம். உள்சுற்றில் இடதுபுறம் நவக்கிரக சந்நிதி, சனி பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித்தனியே கொடிமரமும் பலிபீடமும் நந்தியும் உள்ளன.
வெள்ளாறு நதியில் வெள்ளப்பெருக்கெடுத்தபோது, அதனால் சேதம் உண்டாகாதிருக்க நந்தி தலையை திருப்பிப் பார்க்க வெள்ளம் வடிந்தது என்றும், இதனால் இத்தலத்தில் நந்தியின் தலை சற்று திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. மகாவிஷ்ணு, ஆதிசேஷன், சனி, செவ்வாய், வால்மிகி முனிவர், சனகர், சேர, சோழ, பாண்டியர்கள் ஆகியோர் வழிபட்ட தலம். வெள்ளாற்றின் கரையில் உள்ள புண்ணியத் துறைகளில் இத்தலமும் ஒன்றாகும். இத்தலம் நிவாநதியின் கரையின் மேல் இருப்பதாக ஞானசம்பந்தர் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது பதிகத்தில் பல பாடல்களில் இத்தலம் நிவா நதிக்கரையில் உள்ளது என்பதைக் குறிப்பிடுகிறார். சம்பந்தர் குறிப்பிடும் நிவா நதி, இன்றைய நாளில் வடவெள்ளாறு என்று அழைக்கப்படுகிறது. மக்களின் பாவங்களை நீக்க இறைவன் இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது.
திருப்புகழ் தலம்
அருணகிரிநாதர், இத்தலத்திலுள்ள முருகனை தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தல முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தல முருகப் பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு, இரு தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மயில் பின்புறம் உள்ளது
ஒருமுறை, சந்திரனும் செவ்வாயும், சூரிய சந்திரர்களால் சபிக்கப்பெற்று, அதன் காரணமாக எலும்புருக்கி நோய்க்கு செவ்வாயும், பெருநோய்க்கு சனியும் ஆளாகினர். செவ்வாய், சனி இருவரும் பிரம்மாவிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்ட நிலைக்கு விமோசனம் கிடைக்க வழி கூறும்படி கேட்டனர். பிரம்மாவின் அறிவுறைப்படி, இருவரும் பூலோகம் வந்து பல சிவஸ்தலங்களில் சிவபெருமானை வழிபட்டனர். இறுதியாக, இத்தலம் வந்து கடும் தவம் புரிந்து இறைவனை வழிபட்டு தங்கள் தோஷமும், சாபமும் நீங்கப் பெற்றனர்.
சனியும் செவ்வாயும் தங்கள் தோஷம் நீங்க இத்தலத்தில் சிவ பூஜை செய்து வழிபட்டதால், சனி தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இத்தலத்து தீர்த்தங்களில் நீராடி ஈசனை வழிபட்டால், அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதிகம். இத்தல விருட்சமான ஆலமரம் மக நட்சத்திரத்துக்கு உரிய மரமாகும், ஆகவே, மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தல இறைவனை வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்.
இத்தலத்துக்கு சம்பந்தர் பாடியருளிய பதிகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
எந்தை ஈசன் எம் பெருமான் ஏறு அமர் கடவுள் என்று ஏத்திச்
சிந்தை செய்பவர்க்கு அல்லால் சென்றுகை கூடுவது அன்றால்
கந்த மாமலர் உந்திக் கடும்புனல் நிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே
ஈர வார்சடை தன்மேல் இளம்பிறை யணிந்தவெம் பெருமான்
சீருஞ் செல்வமும் ஏத்தாச் சிதடர்கள் தொழச்செல்வது அன்றால்
வாரி மாமலர் உந்தி வருபுனல் நிவாமல்கு கரைமேல்
ஆருஞ் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே.
பிணி கலந்தபுன் சடைமேற் பிறையணி சிவன் எனப் பேணிப்
பணி கலந்து செய்யாத பாவிகள் தொழச் செல்வது அன்றால்
மணி கலந்து பொன் உந்தி வருபுனல் நிவாமல்கு கரைமேல்
அணி கலந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே.
துன்ன ஆடை ஒன்று உடுத்துத் தூயவெண் நீற்றின ராகி
உன்னி நைபவர்க்கு அகல்லால் ஒன்றும்கை கூடுவது அன்றால்
பொன்னு மாமணி உந்திப் பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
அன்னம் ஆரும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே
வெருகு உரிஞ்சு வெங்காட்டில் ஆடிய விமலன் என்று உள்கி
உருகி நைபவர்க்கு அல்லால் ஒன்றும்கை கூடுவது அன்றால்
முருகு உரிஞ்சுபூஞ் சோலை மொய்ம்மலர் சுமந்திழி நிவாவந்து
அருகு உரிஞ்சு நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே.
உரவு நீர்சடைக் கரந்த ஒருவன் என்று உள்குளிர்ந்து ஏத்திப்
பரவி நைபவர்க்கு அல்லால் பரிந்துகை கூடுவது அன்றால்
குரவ நீடுயர் சோலைக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அரவமு ஆரும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே.
நீல மாமணி மிடற்று நீறு அணி சிவன் எனப் பேணும்
சீல மாந்தர்கட்கு அல்லால் சென்றுகை கூடுவது அன்றால்
கோல மாமலர் உந்திக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
ஆலுஞ் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே.
செழுந்தண் மால்வரை யெடுத்த செருவலி இராவணன் அலற
அழுந்த ஊன்றிய விரலான் போற்றி என்பார்க்கு அல்லது அருளான்
கொழுங்கனி சுமந்து ஏந்திக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அழுந்துஞ் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே.
நுணங்கு நூலு அயன் மாலும் இருவரும் நோக்க அரியானை
வணங்கி நைபவர்க்கு அல்லால் வந்துகை கூடுவது என்றால்
மணம் கமழ்ந்துபொன் உந்தி வருபுனல் நிவாமல்கு கரைமேல்
அணங்குஞ் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே
சாக்கியப்படுவாரும் சமண்படுவார்களும் மற்றும்
பாக்கியப்படகில்லாப் பாவிகள் தொழச் செல்வது அன்றால்
பூக் கமழ்ந்து பொன் உந்திப் பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
ஆர்க்குஞ் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே
கறையினார் பொழில் சூழ்ந்த காழியுண் ஞானசம்பந்தன்
அறையும் பூம்புனல் பரந்த அரத்துறை அடிகள் தம் அருளை
முறைமையார் சொன்ன பாடல் மொழியும் மாந்தர்தம் வினைபோய்ப்
பறையும் ஐயுறவு இல்லை பாட்டு இவை பத்தும் வல்லார்க்கே.
சுந்தரர் அருளிய தேவாரம் - பாடியவர்கள் முத்துக்குமரன், கரூர் சுவாமிநாதன்
அப்பர் அருளிய தேவாரம் - பாடியவர்கள் முத்துக்குமரன், கரூர் சுவாமிநாதன்
சம்பந்தர் அருளிய தேவாரம் - பாடியவர்கள் முத்துக்குமரன், கரூர் சுவாமிநாதன்