பித்ருக்கள் வழிபாடு செய்ய - சித்தப்பிரமை நீங்க ஒரு தலம் ஏடகநாதேஸ்வரர் கோவில், திருவேடகம்

பாண்டிய நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 4-வது தலமாக இருக்கும் திருவேடகம், காசிக்கு நிகராக கருதப்படும் தலங்களில் ஒன்று.
பித்ருக்கள் வழிபாடு செய்ய - சித்தப்பிரமை நீங்க ஒரு தலம் ஏடகநாதேஸ்வரர் கோவில், திருவேடகம்
Published on
Updated on
4 min read

பாண்டிய நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 4-வது தலமாக இருக்கும் திருவேடகம், காசிக்கு நிகராக கருதப்படும் தலங்களில் ஒன்று. சிவபெருமான், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்தின்போது வந்தவர்களின் தாகம் தீர்ப்பதற்காக தனது கையை தரையில் வைத்து வைகை நதியை உண்டாக்கினார். அத்தகைய சிறப்பு பெற்ற வைகை நதியின் கரையோரம் அமைந்த தலம் திருவேடகம்.

     இறைவன் பெயர்: ஏடகநாதேஸ்வரர்
     இறைவி பெயர்: ஏலவார்குழலி அம்மை
இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது
 


மதுரையில் இருந்து சோழவந்தான் செல்லும் சாலை வழியில் திருவேடகம் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து சோழவந்தான் செல்லும் நகரப் பேருந்துகள் திருவேடகம் வழியாகச் செல்கின்றன. கோவில் அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் சோழவந்தான் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஆலய முகவரி
அருள்மிகு ஏடகநாதேஸ்வரர் திருக்கோவில்,
திருவேடகம் அஞ்சல்,
வாடிப்பட்டி வட்டம்,
மதுரை மாவட்டம் – 625 234.

இவ்வாலயம், காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

மதுரையை அரசாண்டு வந்த கூன்பாண்டியன், சமண சமயத்தைச் சார்ந்தவன். அவன் மனைவி மங்கையர்க்கரசி ஒரு சிறந்த சிவ பக்தை. 63 நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்பவள். சைவத்தைக் காப்பாற்ற, மங்கையர்க்கரசி அழைப்பின் பேரில் திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்தபோது, திருநீறு பூசி அரசன் கூன்பாண்டியனின் வெப்ப நோய் நீங்க உதவினார். அங்கிருந்த சமணர்கள் ஆத்திரமுற்று, சம்பந்தருடன் அணல் வாதம் புணல் வாதம் புரிந்தனர். சமணர்கள் தங்கள் ஏட்டை தீயில் இட்டபோது அது எரிந்து சாம்பல் ஆயிற்று. ஆனால், சம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்டபோது அது எரிந்து சாம்பல் ஆகாமல் பச்சையாகவே இருந்தது. பின்பு புணல் வாதத்தின்போது, சமணர்கள் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்டபோது அது ஆற்றுடன் சென்றது. ஆனால் சம்பந்தர், வாழ்க அந்தணர் என்று தொடங்கும் பதிகம் எழுதிய ஏட்டை வைகை ஆற்றில் விட்டபோது, அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்துச் சென்றது. மதுரை பாண்டிய மன்னனின் மந்திரி குலச்சிறையார் என்பவர் குதிரையின் மீதேறி வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்துச் செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து செல்ல, சம்பந்தர் பின்பு "வன்னியும் மத்தமும்" என்னும் திருப்பதிகம் பாடியவுடன், அந்த ஏடு ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. பாண்டிய மன்னன் ஏடு ஒதுங்கிய இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான். அதுவே திருவேடகம் என்ற இந்த பாடல் பெற்ற ஸ்தலம்.
 

சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளுக்கு தனித் தனியாக கோபுரங்களுடன், இவ்வாலயம் வைகை நதியின் வடகரையில் அமைந்துள்ளது. சுவாமி சந்நிதி 5 நிலை ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் கம்பத்தடி மண்டபம் உள்ளது. இங்கு கொடிமரம், பலிபீடம் ஒரு உயர்ந்த மேடையில் நந்தி இருப்பதைக் காணலாம். உள் வாயில் வழியே இறைவன் கருவறையை அடையலாம். கருவறை சுற்றுப் பிராகாரத்தில் 63 மூவர், சப்தமாதர்கள், இரட்டை விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர் ஆகிய சந்நிதிகள் உள்ளன. மூலவர் ஏடகநாதர் கருவறையில் சுயம்புலிங்கத் திருமேனியாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கழுவறை சுற்றுச் சுவரில் கோஷ்டமூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, பிரம்மா ஆகியோர் உள்ளனர்.
 

அம்பாள் சந்நிதி தனியே உள்ளது. அம்பாள் கோவில் வாயிலில் உள்ள மணி மலேயாவிலிருந்து வரவழைக்கப்படதாக தல வரலாறு குறிப்பிடுகிறது. அம்பாள் கருவறை சுற்றுப் பிராகாரத்தில் சண்டிகேஸ்வரி சந்நிதி உள்ளது. அம்பாள் சந்நிதியிலுள்ள ஒரு கல் தூணில் திருஞானசம்பந்தர் சிற்பம் இருப்பதைக் காணலாம்.

மதுரையில் இருந்து வடக்கே வைகை நதியின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தில், வைகை நதி தெற்கு வடக்காக ஓடுவதால், காசிக்கு நிகரான சிறப்பு உடையதாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை, அர்ச்சனை முதலியன செய்து வழிபட்டால், காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.. பிரம்மா, திருமால், ஆதிசேஷன், கருடன், பராசரர், வியாசர் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். 


இக்கோவிலில் உள்ள காலபைரவர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது. வைகை நதிக்கரையில் பிதுர் காரியங்கள் அவர்கள் இறந்த திதி, அமாவாசை போன்ற நாட்களில் செய்வது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. காசிக்கு நிகராக இத்தலம் கருதப்படுவதால், காசிக்கு சென்று முன்னோர்களுக்குச் செய்யப்படும் வழிபாடுகளை இத்தலத்திலேயே செய்யலாம் என்ற பெருமையை திருவேடகம் தலம் பெற்றுள்ளது. மேலும், இறந்த நம் முன்னோர்கள் முக்தி அடைய இத்தலத்தில் மோட்சதீபம் ஏற்றும் வழக்கமும் உள்ளது. மேலும், இத்தலத்தில் உள்ள பிரம்மதீர்த்தக் குளத்தில் நீராடி, இறைவனை வழிபட்டு வந்தால் 'சித்தப்பிரமை' நீங்குவது இத்தலத்தின் தனிப் பெருமையாகும்.


சம்பந்தர் இயற்றியுள்ள இத்தலப் பதிகம், 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. வன்னியு மத்தமு மதிபொதி சடையினன்
பொன்னிய றிருவடி புதுமல ரவைகொடு
மன்னிய மறையவர் வழிபட வடியவர்
இன்னிசை பாடல ரேடகத் தொருவனே. 

2. கொடிநெடு மாளிகை கோபுரங் குளிர்மதி
வடிவுற வமைதர மருவிய வேடகத்
தடிகளை யடிபணிந் தரற்றுமி னன்பினால்
இடிபடும் வினைகள்போ யில்லைய தாகுமே. 

3. குண்டலந் திகழ்தரு காதுடைக் குழகனை
வண்டலம் பும்மலர்க் கொன்றைவான் மதியணி
செண்டலம் பும்விடைச் சேடனூ ரேடகம்
கண்டுகை தொழுதலுங் கவலைநோய் கழலுமே. 

4. ஏலமார் தருகுழ லேழையோ டெழில்பெறும்
கோலமார் தருவிடைக் குழகனா ருறைவிடம்
சாலமா தவிகளுஞ் சந்தனஞ் சண்பகம்
சீலமா ரேடகஞ் சேர்தலாஞ் செல்வமே.

5. வரியணி நயனிநன் மலைமகண் மறுகிடக்
கரியினை யுரிசெய்த கறையணி மிடறினன்
பெரியவன் பெண்ணினோ டாணலி யாகிய
எரியவ னுறைவிட மேடகக் கோயிலே. 

6. பொய்கையின் பொழிலுறு புதுமலர்த் தென்றலார்
வைகையின் வடகரை மருவிய வேடகத்
தையனை யடிபணிந் தரற்றுமின் னடர்தரும்
வெய்யவன் பிணிகெட வீடெளி தாகுமே. 

இப்பதிகத்தின் 7-ம் பாடல் சிதைந்து போயிற்று.

8. தடவரை யெடுத்தவன் றருக்கிறத் தோளடர்
படவிர லூன்றியே பரிந்தவற் கருள்செய்தான்
மடவர லெருக்கொடு வன்னியு மத்தமும்
இடமுடைச் சடையினன் ஏடகத் திறைவனே. 

9. பொன்னுமா மணிகளும் பொருதிரைச் சந்தகில்
தன்னுளார் வைகையின் கரைதனிற் சமைவுற
அன்னமா மயனுமா லடிமுடி தேடியும்
இன்னவா றெனவொணான் ஏடகத் தொருவனே. 

10. குண்டிகைக் கையினர் குணமிலாத் தேரர்கள்
பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்
வண்டிரைக் கும்மலர்க் கொன்றையும் வன்னியும்
இண்டைசேர்க் குஞ்சடை யேடகத் தெந்தையே.

11. கோடுசந் தனமகில் கொண்டிழி வைகைநீர்
ஏடுசென் றணைதரு மேடகத் தொருவனை
நாடுதென் புகலியுண் ஞானசம்பந்தன
பாடல் பத்து இவை வல்லார்க்கு இல்லையாம் பாவமே.

சம்பந்தரின் பதிகம் - பாடியவர் மதுரை முத்துக்குமரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.