திருமணத்தடை நீக்கும் தலம் இடையாற்றுநாதர் கோவில், திருவிடையாறு

பாடல் பெற்ற நடுநாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 13-வது தலமாக விளங்கும் திருவிடையாறு, தற்போது டி.எடையார் என்று அறியப்படுகிறது.
திருமணத்தடை நீக்கும் தலம் இடையாற்றுநாதர் கோவில், திருவிடையாறு
Published on
Updated on
3 min read

பாடல் பெற்ற நடுநாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 13-வது தலமாக விளங்கும் திருவிடையாறு, தற்போது டி.எடையார் என்று அறியப்படுகிறது. இறைவன் சந்நிதியும், இறைவி சந்நிதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கும் வகையில் இத்தலத்தில் வீற்றிருப்பதால், இத்தலம் ஒரு திருமணத் தலமாகப் போற்றப்படுகிறது. 

இறைவன்: இடையாற்றுநாதர், இடையாற்றீஸ்வரர், மருதீஸ்வரர் 
இறைவி : சிற்றிடைநாயகி
இத்தலத்துக்கு சுந்தரர் பதிகம் ஒன்று உள்ளது. 

எப்படிப் போவது?

திருக்கோவிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் பாதையில் (SH68) சித்தலிங்க மடத்தையடுத்து இடையாறு உள்ளது. சாலையோரத்திலேயே கோவில் உள்ளது. மற்றொரு சிவஸ்தலமான திருவெண்ணெய்நல்லூர், இங்கிருந்து தென்கிழக்கே 5 கி.மீ. தொலைவில். அரசூர் செல்லும் பாதையில் உள்ளது.

விழுப்பரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் (NH45) அரசூரை அடைந்து, அங்கிருந்து வலதுபுறம் மாநில நெடுஞ்சாலை SH68-ல் சென்றும் திருவெண்ணெய்நல்லூர் வழியாக திருவிடையாறு தலத்தை அடையலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு மருதீஸ்வரர் திருக்கோவில், 
மருதீஸ்வரர் தேவஸ்தானம்.
டி.எடையார் அஞ்சல்.
திருக்கோவிலூர் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம் -  607 203.

இவ்வாலயம், தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மூன்று நிலைகளை உடைய கோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால், நேரே 2 பலிபீடம் மற்றும் நந்தி ஆகியவற்றைக் காணலாம். கொடிமரம் இல்லை. இறைவன் மேற்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். 

ஆலயத்தின் உள்ளே இருக்கும் மண்டபத்தில் வள்ளி தெய்வயானை சமேத ஷண்முக சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. இங்குள்ள முருகனின் (சண்முகர்) பெயரை கலியுகராமப் பிள்ளையார் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. இத்தலத்தில் முருகர், ஷண்முக சுப்பிரமணியர் என்று பெயருடன் தன் தேவியர் இருவருடன் ஆறு முகங்களுடன் மயில் மீது அமர்ந்து காட்சி அளிக்கிறார்.


உள்சுற்றில் பெரிய மருத மரம் உள்ளது. நவக்கிரக சந்நிதி, அகத்தீஸ்வர லிங்கம், சண்டேஸ்வரர், சப்தமாதாக்கள், பாலாம்ருத விநாயகர் முதலிய சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும் துர்க்கையும் உள்ளனர். அம்மன் கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
 

சுவாமி சந்நிதி மேற்கு நோக்கியும், அம்மன் சந்நிதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ள தலங்கள் திருமணத்தடை நீக்கும் தலம் என்ற சிறப்பைப் பெற்றவையாகும். அத்தகைய அமைப்பு அமைந்துள்ள இத்தலத்தில், நெடுநாளைய திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து மாலை மாற்றி எடுத்துச் சென்றால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் சுக முனிவர், பிரமன், அகத்தியர், சுந்தரர், மறைஞான சம்பந்தர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால், இத்தலத்தில் எப்போதும் கிளிகள் பறந்துகொண்டே இருக்கும். அகத்தியர் இத்தலத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டார். இந்த லிங்கம் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறது. அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது. மாசி மாதம் 15, 16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக் கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.

தல வரலாறு 

கயிலையில், உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை சிவபெருமான் உபதேசிக்கும்போது, அதை கிளி முகம் கொண்ட சுகப்பிரம்ம முனிவர் ஒட்டுக் கேட்டார். இதையறிந்த சிவன், முனிவரை பூமியில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த முனிவர், ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார். பூவுலகில் வேதவியாசருக்கு மகனாகப் பிறந்து, பெண்ணை நதியின் தென்பகுதியில் அமைந்துள்ள இத்தலத்தில் இறைவனை பூஜித்து பூலோக வாழ்வு நீங்கப்பெற அவர் வரமளித்தார். சுகப்பிரம்ம முனிவரும் அவ்வாறே இத்தலம் வந்து மருத மரத்தின் கீழ் தவமிருந்து மருதீஸ்வரரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார்.

சுந்தரர் பாடிய இத்தலத்துக்கான பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அநேக திருத்தலங்களை வைப்புத்தலமாக வைத்து, பதிகம் பெற்ற தலங்களையும் குறிப்பிட்டு, இத்தகைய தலங்களுக்கு இணையானது இடையாறு என்று பாடியுள்ளார்.

முந்தையூர் முதுகுன்றங் குரங்கணின் முட்டம்
சிந்தையூர் நன்றுசென் றடைவான் திருவாரூர்
பந்தையூர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி
எந்தையூர் எய்தமான் இடையா றிடைமருதே.

சுற்றுமூர் சுழியல் திருச்சோ புரந்தொண்டர்
ஒற்றுமூர் ஒற்றியூர் திருவூறல் ஒழியாப்
பெற்றமேறிப் பெண்பாதி யிடம்பெண்ணைத் தெண்ணீர்
எற்றுமூர் எய்தமான் இடையா றிடைமருதே. 

கடங்களூர் திருக்காரிக்கரை கயிலாயம்
விடங்களூர் திருவெண்ணி அண்ணாமலை வெய்ய
படங்கள் ஊர்கின்ற பாம்பரையான் பரஞ்சோதி
இடங்கொளூர் எய்தமான் இடையா றிடைமருதே. 

கச்சையூர் காவங் கழுக்குன்றம் காரோணம்
பிச்சையூர் திரிவான் கடவூர் வடபேறூர்
கச்சியூர் கச்சி சிக்கல் நெய்த்தானம் மிழலை
இச்சையூர் எய்தமான் இடையா றிடைமருதே.

நிறையனூர் நின்றியூர் கொடுங்குன்றம் அமர்ந்த
பிறையனூர் பெருமூர் பெரும்பற்றப்புலியூர்
மறையனூர் மறைக்காடு வலஞ்சுழி வாய்த்த
இறைவனூர் எய்தமான் இடையா றிடைமருதே.

திங்களூர் திருவாதிரையான் பட்டினம் ஊர்
நங்களூர் நறையூர் நனிநா லிசைநாலூர்
தங்களூர் தமிழான் என்றுபா விக்கவல்ல
எங்களூர் எய்தமான் இடையா றிடைமருதே. 

கருக்க நஞ்சமுது உண்ட கல்லாலன் கொல்லேற்றன்
தருக்கருக் கனைச்செற் றுகந்தான்றன் முடிமேல்
எருக்கநாண் மலர் இரண்டையும் மத்தமும் சூடி
இருக்கும் ஊர் எய்தமான் இடையா றிடைமருதே. 

தேசனூர் வினைதேய நின்றான் திருவாக்கூர்
பாசனூர் பரமேட்டி பவித்திர பாவ
நாசனூர் நனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்த
ஈசனூர் எய்தமான் இடையா றிடைமருதே. 

பேறனூர் பிறைச்சென் னியினான் பெருவேளூர்
தேறனூர் திருமா மகள்கோன் றிருமாலோர்
கூறனூர் குரங்காடுதுறை திருக்கோவல்
ஏறனூர் எய்தமான் இடையா றிடைமருதே. 

ஊறிவா யினநாடிய வன்றொண்டன் ஊரன்
தேறுவார் சிந்தைதேறு மிடஞ்செங்கண் வெள்ளே
றேறுவார் எய்தமான் இடையா றிடைமருதைக்
கூறுவார் வினையெவ் விடமெய் குளிர்வாரே.

சுந்தரர் அருளிய பதிகம் - பாடியவர் இரா. குமரகுருபரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com