பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 31-வது தலமாக விளங்கும் தென்குரங்காடுதுறை, தற்போது ஆடுதுறை என்று அழைக்கப்படுகிறது. செல்வ வளம் பெருகிட, தந்தை மகன் உறவில் ஏற்படும் விரிசல்கள் நீங்க, நினைத்த காரியம் கைகூட இத்தல இறைவனை வழிபடுவது சிறந்தது.
இறைவன் பெயர்: ஆபத்சகாயேஸ்வரர்
இறைவி பெயர்: பவளக்கொடி அம்மை
இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் என 2 பதிகங்கள் உள்ளன. திருஞானசம்பந்தர், தனது பதிகத்தைப் பாடி இத்தல இறைவனைத் தொழுபவர்கள், வானவர்களோடு உறையும் சிறப்பைப் பெறுவார்கள் என்று குறிப்பிடுகிறார். இத்தலத்து இறைவனைத் தொழுதால் பற்றுகின்ற தீவினைகள் யாவும் கெட்டுவிடும் என்றும் தனது பதிகத்தில் திருநாவுக்கரசர் குறிப்பிடுகிறார்.
எப்படிப் போவது
கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் கும்பகோணத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது. அருகில் உள்ள ரயில் நிலையம் ஆடுதுறை. இது கும்பகோணம் - மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் இருக்கிறது. மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள ஆடுதுறை பேருந்து நிறுத்தத்தில் இருந்து கும்பகோணம் சாலையில் சிறிது தொலைவு சென்றால், சாலையோரத்தில் உள்ள குளத்தையொட்டி இடப்புறமாகத் திரும்பிச் செல்லும் சாலையில் சென்று வலப்பக்க வீதியில் திரும்பினால் ஆலயம் உள்ளது. ஆடுதுறை பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவு.
ஆலய முகவரி
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்
ஆடுதுறை, ஆடுதுறை அஞ்சல்,
திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் - 612 101.
இவ்வாலயம் தினமும் காலை 7.30 முதல்12 மணி வரையிலும் மாலை 5.30 முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
காவிரி நதியின் தென்கரையில் அமைந்துள்ளதாலும், ராமாயணத்தில் வரும் சுக்ரீவன் இங்கு இறைவனை வழிபட்டதாலும், இத்தலம் தென்குரங்காடுதுறை என்று பெயர் பெற்றது. சோழ மன்னன் கண்டராதித்ய சோழனின் மனைவியான செம்பியன் மாதேவியால் கற்றளியாகக் கட்டுவிக்கப்பட்ட இந்த ஆலயம், கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடனும் 2 பிராகாரங்களுடனும் விளங்குகிறது. கோபுர வாயிலைக் கடந்து சென்றால், கொடிமரத்து விநாயகரையும் பலிபீடத்தையும் சிறிய மண்டபத்துள்ளே அமைந்துள்ள நந்தியையும் காணலாம்.
அகன்ற வெளிப் பக்கத்துப் பெரிய பிராகாரத்தை வலம்வந்து உள்ளே சென்றால் மணிமண்டபத்தைக் காணலாம். அம்மண்டபத்தின் தென்புறச் சுவரில் இத்தலத்தின் தேவாரப் பதிகங்களையும் திருப்புகழ்ப் பாடல்களையும் கல்லெழுத்துகளில் வடித்துள்ளதைக் காணலாம்.
வெளிப் பிராகாரத்தில் விஸ்வநாதர், அம்பாள் விசாலாட்சி, விநாயகர், சூரியன், சந்திரன், நவக்கிரகம் மற்றும் முருகன் ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. அம்பாள் பவளக்கொடி அம்மையின் சந்நிதியும் வெளிப் பிராகாரத்தில் இரண்டாவது வாயிலுக்கு முன்னே தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அதன் எதிரில் எழுந்தருளியுள்ள பிள்ளையாரையும் தரிசிக்கலாம். உள்ளே சென்றால், எதிரில் தோன்றும் மண்டபத்தின் மேல் மாடத்தில் ஆபத்சகாயேசுரரை சுக்ரீவன் வணங்கும் காட்சியும், சுக்ரீவனை இறைவன் அன்னப்பறவையாவும் அவன் தேவியை பாரிஜாத (பவழமல்லி) மரமாகவும் உருமாற்றியருளிய தல வரலாற்றுக் காட்சி, சுதை வேலைப்பாட்டில் அழகுற அமைந்துள்ளன.
அடுத்துள்ள மூன்றாம் வாயிலைக் கடந்து சென்றால், நேரே பலிபீடமும் நந்தியும் உள்ளன. கருவறை வாயிலில் கம்பீரமாகக் காத்து நிற்கும் புடைச் சிற்பமாக விளங்கும் இரண்டு துவாரபாலகர்களையும் காணலாம். இறைவன் ஆபத்சகாயேஸ்வரரின் சந்நிதி இரண்டாவது உள் பிராகாரத்தில் உள்ளது. இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவர் குடிகொண்டுள்ள கருவறைச் சுற்றிலும் அகழி போன்ற அமைப்பு இருக்கிறது. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இக்கோயிலைக் கற்கோயிலாக அமைத்த கண்டராதித்தியர் தேவியரான செம்பியன் மாதேவியார், சிவபிரானை வழிபடுவதாக அமைந்துள்ள புடைச்சிற்பத்தையும் கருவறைச் சுற்றில் காணலாம்.
கருவறை சுற்றுப் பிராகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான் சந்நிதி, கஜலட்சுமி சந்நிதி ஆகியவை உள்ளன. வடக்கு நோக்கிய சந்நிதியில் எட்டுத் திருக்கரங்களோடு காட்சி தரும் துர்கா தேவியும், அருகில் கங்கா விசர்ஜன மூர்த்தியும் பைரவ மூர்த்தியும் இருக்கின்றனர். அவற்றின் அருகில் விஷ்ணு துர்க்கை சந்நிதி உள்ளது.
அம்பாள் பவளக்கொடியம்மை சந்நிதியை வலம் வரும்போது, பின்புறச் சுவரில் சுக்ரீவன் சிவபூஜை செய்யும் புடைப்புச் சிற்பத்தையும், செம்பியன் மாதேவி சிவபூஜை செய்யும் புடைப்புச் சிற்பத்தையும் காணலாம்.
இத்தலத்தின் தலவிருட்சமாக பவழமல்லி மரமும், தீர்த்தங்களாக சகாய தீர்த்தமும், கோவிலுக்கு எதிரிலுள்ள சூரிய தீர்த்தமும் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் 5, 6, 7 தேதிகளில், சூரியனது ஒளிக்கிரணங்கள் சந்நிதிக்கு எதிரில் உள்ள சூரிய தீர்த்தத்தில் பிரதிபலித்துக் கடந்து சுவாமி மீது படுகின்றன. சூரியன், சனி பகவானுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபட்டால் தந்தை மகன் உறவில் உள்ள பிரச்னைகள் தீரும் என்றும், தொழில் மற்றும் பொருளாதாரம் மேம்பட இங்கு பிரார்த்தனை செய்தால் நல்லதே நடக்கும் என்றும் பக்தர்கள் கருதுகின்றனர். பௌர்ணமியில் அகத்தியருக்கு சந்தனாதி தைலம் சாற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.
தென்குரங்காடுதுறைக்கு (ஆடுதுறைக்கு) அருகாமையில் உள்ள மருத்துவக்குடி என்னும் ஊரின் பெயரும் இத்தல கல்வெட்டில் காணப்படுகிறது. இம்மருத்துவக்குடியே திருஇடைக்குளம் என்னும் தேவார வைப்புத் தலமாகும். தென்குரங்காடுதுறை சிவனை தரிசித்தபின் மருத்துவக்குடி சென்று அங்கு அருள் புரியும் சிவனையும் வழிபடுங்கள். திருஞானசம்பந்தர் பாடியுள்ள இத்தலத்துக்கான பதிகம் -
பரவக் கெடும்வல் வினைபா ரிடஞ்சூழ
இரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடி
அரவச் சடையந் தணன்மே யவழகார்
குரவப் பொழில்சூழ் குரங்காடுதுறையே.
விண்டார் புரம் மூன்றும் எரித்த விமலன்
இண்டார் புறங்காட் டிடைநின்றெரி யாடி
வண்டார் கருமென் குழன் மங்கை ஓர்பாகம்
கொண்டா னகர்போல் குரங்கா டுதுறையே.
நிறைவில் புறங்காட் டிடைநே ரிழையோடும்
இறைவில் லெரியான் மழுவேந்தி நின்றாடி
மறையின் னொலிவா னவர்தா னவரேத்தும்
குறைவில் லவனூர் குரங்காடுதுறையே.
விழிக்குந் நுதன்மே லொருவெண் பிறைசூடித்
தெழிக்கும் புறங்காட் டிடைச்சேர்ந் தெரியாடிப்
பழிக்கும் பரிசே பலிதேர்ந் தவனூர்பொன்
கொழிக்கும் புனல்சூழ் குரங்காடுதுறையே
நீறார் தருமே னியனெற் றியொர்கண்ணன்
ஏறார் கொடியெம் மிறையீண் டெரியாடி
ஆறார் சடையந் தணனா யிழையாளோர்
கூறா னகர்போல் குரங்காடுதுறையே.
நளிரும் மலர்க்கொன் றையுநா றுகரந்தைத்
துளிருஞ் சுலவிச் சுடுகாட் டெரியாடி
மிளிரும் மரவார்த் தவன்மே வியகோயில்
குளிரும் புனல்சூழ் குரங்காடுதுறையே.
பழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும்
முழவங் குழன்மொந் தைமுழங் கெரியாடும்
அழகன் னயின்மூ விலைவேல் வலனேந்தும்
குழகன் னகர்போல் குரங்காடுதுறையே.
வரையார்த் தெடுத்தவ் வரக்கன் வலியொல்க
நிரையார் விரலா னெரித்திட் டவனூராம்
கரையார்ந் திழிகா விரிக்கோ லக்கரைமேல்
குரையார் பொழில்சூழ் குரங்காடுதுறையே.
நெடியா னொடுநான் முகனுந் நினைவொண்ணாப்
படியா கியபண் டங்கனின் றெரியாடி
செடியார் தலையேந் தியசெங்கண் வெள்ளேற்றின்
கொடியா னகர்போல் குரங்காடுதுறையே.
துவரா டையர்வே டமலாச் சமண்கையர்
கவர்வாய் மொழிகா தல்செய்யா தவனூராம்
நவையார் மணிபொன் னகில்சந் தனமுந்திக்
குவையார் கரைசேர் குரங்காடுதுறையே.
நல்லார் பயில்காழி யுண்ஞான சம்பந்தன்
கொல்லே றுடையான் குரங்கா டுதுறைமேல்
சொல்லார் தமிழ்மாலை பத்துந் தொழுதேத்த
வல்லார் அவர் வானவரோடு உறைவாரே.
சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் கரிவலம் வந்த நல்லூர் முருக.சுந்தர் ஓதுவார்