பாடல் பெற்ற பாண்டிய நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 2-வது தலமாக இருப்பது திருஆப்பனூர். இத்தல இறைவனை வழிபடுவர்களுக்கு வினைப் பயன்கள் பற்றாது என்று சம்பந்தர் தனது பதிகத்தின் பாடல்களில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். வாத நோய்களுக்கும் இத்தலம் ஒரு சிறந்த பரிகாரத்தலமாக விளங்குகிறது. இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.
இறைவன் பெயர்: ஆப்புடையார், அன்னவிநோதர்,
இறைவி பெயர்: குரவங்கமழ் குழலம்மை, சுகந்த குந்தளாம்பிகை
எப்படிப் போவது
இந்த சிவஸ்தலம், மதுரை நகரின் ஒரு பகுதியான செல்லூர் என்ற இடத்தில் உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து தடம் எண் 17, 17A, 17C பேருந்துகளில் ஏறி திருவாப்புடையார் கோவில் நிறுத்தம் என்று கேட்டு இறங்கினால், கோவில் மிக அருகில் உள்ளது. மதுரை நகரின் ஒரு பகுதியான சிம்மக்கல் என்ற இடத்தில் இருந்து வைகை ஆற்றைக் கடந்து சென்றும் அக்கரையிலுள்ள இக்கோவிலை எளிதில் அடையலாம்.
ஆலய முகவரி
அருள்மிகு ஆப்புடையார் திருக்கோவில்
ஆப்புடையார் திருக்கோவில் அஞ்சல்,
செல்லூர்,
மதுரை - 625 002.
தல வரலாறு
சோழாந்தகன் என்ற பாண்டிய மன்னன் ஒரு சிவபக்தன். இவன் எப்போதும் சிவபூஜை செய்த பின்புதான் சாப்பிடுவான். ஒருமுறை வேட்டையாட காட்டுக்குச் சென்ற அரசன், வேட்டையாடிய களைப்பால் நடுக்காட்டில் விழுந்துவிட்டான். பயந்துபோன அவனது பாதுகாப்பு வீரர்கள், மன்னனின் களைப்பு தீர உணவை அருந்தக் கூறினர். ஆனால் சிவபூஜை செய்யாமல் சாப்பிடமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தான்.
புத்திசாலி அமைச்சர் ஒருவர், அந்தக் காட்டில் கிடைத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து தரையில் ஆப்பு அடித்தார். அதைக்காட்டி, ‘மன்னா, இங்கே ஒரு சுயம்பு லிங்கம் உள்ளது. நீங்கள் அதை பூஜை செய்தபின் உணவருந்தலாமே’ என்று யோசனை கூறினார். களைப்புடன் இருந்த மன்னனும் அந்த ஆப்பை சுயம்புலிங்கம் என நினைத்து வணங்கி உணவருந்திவிட்டான். களைப்பு நீங்கிய பிறகுதான், தாம் வணங்கியது லிங்கம் அல்ல, அது ஓர் ஆப்பு என்பதை உணர்ந்து மிக வருந்தினான்.
சிவபூஜை செய்யாமல் உணவருந்திய வருத்தத்தில், இறைவனிடம் தான் இதுநாள் வரை இறைவனை பூஜித்தது உண்மையானால், இந்த ஆப்பில் வந்து என்னை அருள்பாலிக்க வேண்டும் என்று வேண்டினான். அப்படி இல்லாவிட்டால், உயிர் துறக்கவும் தயாரானான். மன்னனின் பக்திக்கு மகிழ்ந்த இறைவன் அந்த ஆப்பிலே தோன்றி அருள்பாலித்தார். சிவன், ஆப்பு உடையார் ஆனார். அந்த ஊர் ஆப்பனூர் ஆனது. கோவிலும் ஆப்புடையார் கோவில் என்று சிறப்பு பெற்றது.
*
ஒருமுறை பாண்டிய நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் உணவின்றி தவித்தனர். ஆப்புடையார் கோவில் அர்ச்சகர் சிவபூஜைக்காக சிறிது நெல் பயிர் செய்து நிவேதனம் செய்துவந்தார். ஊர் மக்கள் உணவின்றி வாடும்போது இறைவனுக்கு மட்டும் நிவேதனமா என்று அர்ச்சகரை சிலர் துன்புறுத்தினர். கோவில் அர்ச்சகர் வருத்தப்பட்டு இறைவனிடம் முறையிட்டார். இறைவன் அசரீரியாக வைகை ஆற்று மணலை உலையிலிட்டு சமைக்கும்படியும், அது அன்னமாக மாறும் என்றும் அர்ச்சகரிடம் கூறினார். அர்ச்சகரும் அவ்வாறே செய்து இறைவனுக்கும் நிவேதனம் செய்து ஊர் மக்களின் பசியையும் போக்கினார். இதனால், இத்தல இறைவனுக்கு அன்னவிநோதன் என்ற பெயர் ஏற்பட்டது.
கோவில் அமைப்பு
இவ்வாலயத்துக்குக் கோபுரம் இல்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் ரிஷபாரூடராக சிவன், பார்வதி, முருகர் மற்றும் விநாயகர் சுதை வடிவில் காணப்படுகின்றனர். வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் காணப்படும் மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தியைக் காணலாம். இறைவன் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
அம்பாள் சந்நிதிக்கும், சுவாமி சந்நிதிக்கும் இடையில் சுப்பிரமணியருக்கு சந்நிதி உள்ளது. இறைவன், அம்பாள், சுப்பிரமண்யர் மூவரும் கிழக்குத் திசை நோக்கி காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பை சோமஸ்கந்த அமைப்பு என்பர். பிராகாரம் சுற்றி வரும்போது தலவிருட்சம் குரவ மரம், இறைவன் சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கிறது.. மரத்தடியில் விநாயகர் தரிசனம் தருகிறார். வள்ளி தெய்வானை அருகிலிருக்க, முருகர் மயில் அமர்ந்து காட்சி தருகிறார்.
இத்தலத்தில் கல்லால் ஆன சுமார் 5 அடி உயரமுள்ள நடராஜர் - சிவகாமி அம்மன் சிலை, நந்திதேவர் மத்தளம் வாசிக்கும் நிலையில் நந்திதேவர் தனி சந்நிதியில் காட்சி கொடுக்கின்றனர். சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த இந்த சிலா உருவங்கள் இத்தலத்தின் சிறப்பம்சம். இதைத்தவிர நடராஜரும் சிவகாமியுடன் உள்ளார். மண்டபத்தில் உள்ள தூண்களில் அழகிய சிற்பங்கள் உள்ளன. நவகிரக சந்நிதியும் உள்ளது.
இத்தலத்துக்கான சம்பந்தரின் பதிகம் முதலாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. இப்பதிகத்தின் 2-வது பாடலில், இறைவியை குரவங்கமழ் குழலாள் என்று குறிப்பிடுகிறார். இத்தலத்திலுள்ள பெருமானை வழிபடுவோரை வினைப் பயன் பற்றாது என்று போற்றுகிறார் சம்பந்தர். தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் இதை குறிப்பிடுகிறார்.
முற்றுஞ் சடைமுடிமேன் முதிரா இளம்பிறையன்
ஒற்றைப் படவரவம் அதுகொண் டரைக்கணிந்தான்
செற்றமில் சீரானைத் திருஆப்ப னூரானைப்
பற்று மனமுடையார் வினை பற்று அறுப்பாரே.
குரவங் கமழ்குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர்
விரவுந் திருமேனி விளங்கும் வளையெயிற்றின்
அரவம் அணிந்தானை அணி ஆப்பனூரானைப்
பரவும் மனமுடையார் வினை பற்று அறுப்பாரே.
முருகு விரிகுழலார் மனங்கொள் அநங்கனைமுன்
பெரிது முனிந்துகந்தான் பெருமான் பெருங்காட்டின்
அரவம் அணிந்தானை அணி ஆப்பனூரானைப்
பரவும் மனமுடையார் வினை பற்று அறுப்பாரே.
பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் பெருங்காட்டில்
துணியின் உடைதாழச் சுடரேந்தி யாடுவான்
அணியும் புனலானை அணி ஆப்பனூரானைப்
பணியும் மனமுடையார் வினை பற்று அறுப்பாரே.
தகர மணியருவித் தடமால்வரை சிலையா
நகர மொருமூன்றும் நலங்குன்ற வென்றுகந்தான்
அகர முதலானை அணி ஆப்பனூரானைப்
பகரு மனமுடையார் வினை பற்று அறுப்பாரே.
ஓடுந் திரிபுரங்கள் உடனே யுலந்தவியக்
காட திடமாகக் கனல்கொண்டு நின்றிரவில்
ஆடுந் தொழிலானை அணி ஆப்பனூரானைப்
பாடு மனமுடையார் வினை பற்று அறுப்பாரே.
இயலும் விடையேறி எரிகொள் மழுவீசிக்
கயலி னிணைக்கண்ணாள் ஒருபால் கலந்தாட
இயலும் இசையானை எழில் ஆப்பனூரானைப்
பயிலு மனமுடையார் வினை பற்று அறுப்பாரே.
கருக்கு மணிமிடறன் கதநாகக் கச்சையினான்
உருக்கும் அடியவரை ஒளிவெண் பிறைசூடி
அரக்கன் றிறலழித்தான் அணி ஆப்பனூரானைப்
பருக்கு மனமுடையார் வினை பற்று அறுப்பாரே.
கண்ணன் கடிக்கமல மலர்மே லினிதுறையும்
அண்ணற் களப்பரிதாய் நின்றங் கடியார்மேல்
எண்ணில் வினைகளைவான் எழில் ஆப்பனூரானைப்
பண்ணின் னிசைபகர்வார் வினை பற்று அறுப்பாரே.
செய்ய கலிங்கத்தார் சிறுதட் டுடையார்கள்
பொய்யர் புறங்கூறப் புரிந்தவடியாரை
ஐயம் அகற்றுவான் அணி ஆப்பனூரானைப்
பைய நினைந்தெழுவார் வினை பற்று அறுப்பாரே.
அந்தண் புனல்வைகை அணியாப்ப னூர்மேய
சந்த மலர்க்கொன்றை சடைமேல் உடையானை
நந்தி யடிபரவும் நல ஞானசம்பந்தன்
சந்த மிவைவல்லார் தடுமாற்று அறுப்பாரே.
ஆப்பில் இருந்து வெளிப்பட்டு சோழ மன்னனுக்கு அருள் செய்தவனும், வைகை ஆற்று மணலை அன்னமாக்கி அருள் செய்தவனுமான இத்தல இறைவனை வழிபட்டு நமக்குள்ள வினைகள் அற்று நாம் வாழ்வில் வளம் பெறுவோம்.
சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் மதுரை பொன்.முத்துக்குமரன் ஓதுவார்