முன்ஜென்ம தீவினைகள் நீங்க ஆடானைநாதர் கோவில், திருவாடானை

பாண்டிய நாட்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் 9-வது தலமாக இருப்பது திருவாடானை.
முன்ஜென்ம தீவினைகள் நீங்க ஆடானைநாதர் கோவில், திருவாடானை
Published on
Updated on
4 min read

பாண்டிய நாட்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் 9-வது தலமாக இருப்பது திருவாடானை. சம்பந்தர் தனது பதிகத்தில், இத்தல இறைவனை வழிபடுவதால் நமது வினைகள் யாவும் நீங்கும் என்று ஒவ்வொரு பாடலிலும் குறிப்பட்டுப் பாடியுள்ளார். சுக்கிர தோஷ நிவர்த்தி தலமாகவும் இருப்பது மற்றொரு சிறப்பாகும். 

இறைவன் பெயர்: ஆடானைநாதர், ஆதிரத்தினேசுவரர், அஜகஜேஸ்வரர்

இறைவி பெயர்: சிநேகவல்லி, அம்பாயிஅம்மை

இத்தலத்துக்கு சம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது. 

எப்படிப் போவது

காரைக்குடியில் இருந்து தேவகோட்டை வழியாக சுமார் 42 கி.மீ. தொலைவிலும், சிவகங்கையில் இருந்து தொண்டி சாலையில் காளையார்கோவில் வழியாக சுமார் 50 கி.மீ. தொலைவிலும் திருவாடானை தலம் உள்ளது. பேருந்து வசதிகள் காரைக்குடி, சிவகங்கை மற்றும் தேவகோட்டையில் இருந்து இருக்கின்றன. திருப்புனவாசல் தலத்தில் இருந்தும் இங்கு வர சாலை வசதி உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு ஆதிரத்தினேசுவரர் திருக்கோவில்

திருவாடானை அஞ்சல்

திருவாடானை வட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் - 623 407.

இவ்வாலயம், தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இத்தலம் நான்கு யுகங்களிலும் இருப்பதாகவும், தேவலோகத்தில் உள்ள அமிர்தத்தில் இருந்து ஒரு துளி பூமியில் விழுந்ததால் இவ்வூர் உண்டாகியது எனவும் திருவாடானை தலபுராணம் கூறுகிறது. இத்தலத்து இறைவனை வணங்குவோருக்கு முக்தி அளிப்பதால் முக்திபுரம் எனவும், சூரியன் வணங்கியதால் ஆதிரத்தினேசுவரம் எனவும், வாருணி சாபம் நீக்கியதால் ஆடானை எனவும் இத்தலம் அழைக்கப்படுகிறது. 

ஒருமுறை, வருணனின் மகன் வாருணி, நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவரை மதிக்காமல் சென்றதால் கோபமுற்ற முனிவர், வாருணி ஆட்டுத்தலையும் யானை உடலும் பெறுமாறு சாபமிட்டார். வாருணியும் அவ்வாறே ஆக, தவறை உணர்ந்து முனிவரிடம் மன்னிப்புக் கேட்க, சூரியனால் வழிபடப்பட்ட இத்தலத்து மூர்த்தியான சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டால் சாபம் நீங்கும் என்று கூறினார். வாருணியும் இத்தலம் வந்து சூரிய தீர்த்தத்தில் நீராடி இத்தலத்து இறைவனை வணங்கி சுயரூபம் பெற்றான். வாருணி சாபம் நீக்கியதால் இத்தலம் ஆடானை என்று பெயர் பெற்றது. இத்தலத்து இறைவன் ஆடானைநாதர் என்று பெயர் பெற்றார்.

சூரியன், தானே மிகுந்த ஒளி உடைவன் என்று மிகவும் கர்வத்துடன் இருந்தான். அதன் காரணமாக, நந்தியால் அவனது ஒளி ஈர்க்கப்பட்டு சூரியன் ஒளி குன்றினான். பிரம்மதேவர் கூறியபடி சூரியன் இத்தலத்துக்கு வந்து தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி, நீலமணியால் ஆவுடையார் மற்றும் லிங்கம் ஸ்தாபித்து, ரத்தினமயமான லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு தனது ஒளியை மீண்டும் பெற்றான். ஆதியாகிய சூரியன் நீல நிறமுள்ள ரத்தினமயமான இறைவனை வழிபட்டதால், இத்தலத்து இறைவன் ஆதிரத்தினேசுவரர் என்றும் பெயர் பெற்றார். இன்றும் உச்சிக்காலத்தில் பாலாபிஷேகம் செய்யும்போது இறைவன் நீல நிறமாக காட்சி அளிப்பதாகக் கூறப்படுகிறது.

சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோவில், 130 அடி உயரம் உள்ள 9 நிலைகளை உடைய அழகிய சுதைச் சிற்பங்களோடு கூடிய ராஜகோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. நீண்ட மதில் சுவர்களும், பெரிய வெளிப் பிராகாரமும், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களை உடைய மண்டபமும் உடைய இக்கோவில் பாண்டிய நாட்டு தேவார சிவஸ்தலங்களில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இறைவன், இறைவி இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மாசி மாதத்தில், மூலவர் மற்றும் அம்பாள் மீது சூரிய ஒளி விழும்படி கோவில் அமைக்கப்பட்டுள்ளது. உள் பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், 63 நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, வருணலிங்கம், விஸ்வநாதர், சண்டிகேஸ்வரர், நடராஜர், நால்வர், பைரவர், கார்த்திகை ரோகிணியுடன் சந்திரன், அருகில் சனீஸ்வரர் முதலிய சந்நிதிகள் உள்ளன. இத்தலத்தின் தீர்த்தங்கள் க்ஷீரகுண்டம், வருணதீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம் ஆகியவை.

இத்தல முருகப் பெருமான், ஒரு திருமுகமும் நான்கு கரங்களும் கொண்டு இரு தேவியர் உடனிருக்க மயிலுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இவர் சுமார் 5 அடி உயரத்துடன் கம்பீரமாக உள்ளார். மயிலின் முகம் தெற்கு நோக்கி உள்ளது. திருப்புகழில் ஒரு பாடல் உள்ளது.

சுக்கிர தோஷ நிவர்த்தித் தலமாக விளங்குவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். வெள்ளிக்கிழமைதோறும் இத்தலத்தில் சுக்கிர தோஷ நிவர்த்திக்காக விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. ஜாதகத்தில் சுக்கிர தோஷம் இருப்பவர்கள் சுக்கிர தசை அல்லது சுக்கிர புத்தி நடைபெறும் சமயத்தில் இத்தலம் வந்து வழிபடுவதால் நன்மை உண்டாகும்.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இத்தல இறைவனை வழிபடுவதால் நமது வினைகள் நீங்கும் என்று குறிப்பிடும் சம்பந்தர், நோய் பிணிகள் ஆகியவற்றில் இருந்தும் விடுபடுவோம் என்று 3-வது, 11-வது பாடலில் குறிப்பிடுகிறார்.

1. மாதோர் கூறுகந் தேற தேறிய
ஆதியா னுறை ஆடானை
போதினாற் புனைந் தேத்து வார்தமை
வாதியா வினை மாயுமே. 

2. வாடல் வெண்டலை அங்கை யேந்திநின்
றாடலா னுறை ஆடானை
தோடுலா மலர் தூவிக் கைதொழ
வீடும் நுங்கள் வினைகளே. 

3. மங்கை கூறினன் மான்ம றியுடை
அங்கை யானுறை ஆடானை
தங்கை யாற்றொழு தேத்த வல்லவர்
மங்கு நோய்பிணி மாயுமே. 

4. சுண்ண நீறணி மார்பிற் றோல்புனை
அண்ண லானுறை ஆடானை
வண்ண மாமலர் தூவிக் கைதொழ
எண்ணுவார் இடர் ஏகுமே. 

5. கொய்ய ணிம்மலர்க் கொன்றை சூடிய
ஐயன் மேவிய ஆடானை
கைய ணிம்மல ரால்வ ணங்கிட
வெய்ய வல்வினை வீடுமே. 

6. வானி ளம்மதி மல்கு வார்சடை
ஆனஞ் சாடலன் ஆடானை
தேன ணிம்மலர் சேர்த்த முன்செய்த
ஊன முள்ள வொழியுமே. 

7. துலங்கு வெண்மழு வேந்திச் சூழ்சடை
அலங்க லானுறை ஆடானை
நலங்கொள் மாமலர் தூவி நாடொறும்
வலங்கொள்வார் வினை மாயுமே. 

8. வெந்த நீறணி மார்பிற் றோல்புனை
அந்த மில்லவன் ஆடானை
கந்த மாமலர் தூவிக் கைதொழுஞ்
சிந்தையார் வினை தேயுமே. 

9. மறைவல் லாரொடு வானவர் தொழு
தறையுந் தண்புனல் ஆடானை
உறையும் ஈசனை யேத்தத் தீவினை
பறையும் நல்வினை பற்றுமே. 

10. மாயனும் மலரானும் கைதொழ
ஆய அந்தணன் ஆடானை
தூய மாமலர் தூவிக் கைதொழ
தீய வல்வினை தீருமே. 

11. வீடி னார்மலி வேங்க டத்துநின்
றாட லானுறை ஆடானை
நாடி ஞானசம்பந்தன் செந்தமிழ்
பாட நோய் பிணி பாறுமே.

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் திருவாதவூர் குமார. இராமச்சந்திரன் ஓதுவார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.