திருமணத் தடை நீக்கும் தலம் - மாகாளநாதர் கோவில், அம்பர் மாகாளம்

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 55-வது தலமாக இருப்பது அம்பர்
திருமணத் தடை நீக்கும் தலம் - மாகாளநாதர் கோவில், அம்பர் மாகாளம்
Published on
Updated on
5 min read

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 55-வது தலமாக இருப்பது அம்பர் மாகாளம். திருமணத் தடை நீக்கும் பல பாடல் பெற்ற சிவஸ்தலங்களை பற்றி நாம் இத்தொடரில் படித்திருக்கிறோம். அவ்வகையில் அம்பர் மாகாளமும் ஒரு திருமணத் தடை நீக்கும் தலமாக சிறப்பு பெற்று விளங்குகிறது. 

இறைவன் பெயர்: மாகாளநாதர், காளகண்டேஸ்வரர்

இறைவி பெயர்: பக்ஷயாம்பிகை, ராஜமாதங்கி

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தரின் மூன்று பதிகங்கள் உள்ளன.


எப்படிப் போவது

மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே அரிசிலாற்றின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. பேரளம் என்ற ஊரிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. அம்பர் பெருந்திருக்கோவில் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம், மாகாளநாதர் கோவிலுக்கு கிழக்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு மாகாளநாதர் திருக்கோயில்
அம்பர் மாகாளம், பூந்தோட்டம் அஞ்சல்,
நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் - 609 503.

இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மாகாளம் என்ற பெயர் பெற்ற சிவஸ்தலங்கள் இந்தியாவில் மூன்று இடங்களில் இருக்கின்றன. அவை, வடஇந்தியாவிலுள்ள உஜ்ஜயனி மாகாளம், தொண்டை நாட்டுத் தலமான இரும்பை மாகாளம், மற்றும் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான அம்பர் மாகாளம் என்ற இத்தலம்.

புராண வரலாறு 

மதங்க மகரிஷி தனக்கு புத்திரப்பேறு வேண்டி இத்தல இறைவனை நீண்ட காலம் வழிபட்டார். இறைவன் அருளால் பிறந்த பெண் குழந்தைக்கு ராஜமாகங்கி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். உரிய பருவம் வந்ததும், இவ்வாலயத்தில் உள்ள இறைவனுக்கு அவளை மணமுடித்து வைத்தார். திருமணக் கோலத்தில் வீற்றிருக்கும்போது, உனக்கு என்ன வரம் வேண்டும் என்று பார்வதியிடம் இறைவன் கேட்கிறார். அதற்கு பார்வதி, இத்தலம் வந்து நம் இருவரையும் வழிபடும் திருமணமாகாத ஆண், பெண் இருபாலாருக்கும் திருமணம் விரைவில் நடைபெற அருள செய்ய வேண்டும் என்ற வரம் கேட்டுப் பெற்றாள். எனவே. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இத்தலம் வந்து சிவப்பு அரளிப்பூ மாலைகள் இரண்டு தொடுத்து அதை இறைவன், இறைவிக்கு சார்த்தி ஐந்து வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டு, பின்பு ஒரு மாலையைப் பெற்று கழுத்தில் அணிந்துகொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது இவ்வாலயத்தின் சிறப்பாகும்.

63 நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாற நாயனார் நடத்திய யாகத்துக்கு இறைவனும் இறைவியும் நேரில் வந்த தலம் இதுவாகும். சோமாசியார் தான் நடத்தும் யாகத்துக்கு இறைவனை அழைத்து வரும்படி சுந்தரரிடம் வேண்டினார். சுந்தரரும் அதற்கு சம்மதித்து இறைவனிடம் வேண்ட, இறைவனும், வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடக்கும் யாகத்துக்கு வருவதாக வாக்களித்தார். இறைவனே நேரடியாக வருவதால், நாட்டில் பல பகுதியிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் சூழ யாகம் சிறப்பாக நடந்தது. சோமாசிமாற நாயனார் விரும்பியபடி, அவர் நடத்திய சோமயாகத்துக்கு இறைவன் பறையன் உருவில் நேரில் எழுந்தருளினார்.

நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாகப் பிடித்துக்கொண்டு தம்பட்டம், மதுக்குடம், மாட்டு இறைச்சி ஆகியவற்றை சுமந்துகொண்டு அவர் வருவதைப் பார்த்த அந்தணர்கள், பறையன் வந்ததால் யாகம் கெட்டுவிட்டது என்று கூறி ஓடிவிடுகின்றனர். தந்தைதான் இவ்வாறு வருகிறார் என்பதை சோமாசிமாற நாயனாருக்கு விநாயகர் குறிப்பாக உணர்த்தி அச்சத்தைப் போக்கினார். ஆகையால், வந்திருப்பது இறைவன் என்று தெரிந்துகொண்ட சோமாசிமாற நாயனார், தனது மனைவியுடன் பறையர் தம்பதிகளை எதிர்கொண்டு வரவேற்று அவிர்பாகம் கொடுக்கிறார்.

இறைவனும் தனது பறையன் உருவைக் களைந்து ரிஷப வாகனத்தில் சோமாசிமாற நாயனாருக்கும் அவர் மனைவிக்கும் காட்சி கொடுத்து அருளினார். மறுநாள் மக நாளில் அவரைக் கண்டு பயந்து யாகத்திலிருந்து ஓடியவர்களுக்கெல்லாம் காட்சி கொடுத்து அருளினார். சோமாசிமாற நாயனாருக்கு இறைவன் வந்திருப்பதைக் குறிப்பால் உணர்த்திய அவ்விநாயகரை அச்சந்தீர்த்த விநாயகர் என்று அழைக்கின்றனர்.

வைகாசி ஆயில்ய நட்சத்திரத்தில் சோமயாகப் பெருவிழா நடக்கிறது. இந்த விழாவில் காலில் செருப்பு, கையில் மத்தளம், அருகில் மதுக்குடம் ஏந்திய பார்வதியுடன் சிவன் அருள்பாலிப்பது சிறப்பு. திருவாரூரில் இருந்து தியாகராஜர் இவ்விழாவுக்கு எழுந்தருள்வதால், அன்றைய தினம் திருவாரூரில் தியாகராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் கிடையாது.
*
புலத்தியர் மரபில் வந்த சம்சாரசீலன் என்பவனிடம் தேவேந்திரன் தோற்று இத்தல இறைவனிடம் அடைக்கலம் அடைந்தான். சுவாமி பைரவ திருக்கோலம் தாங்கி சம்சாரசீலனைக் கொன்று சட்டைநாதராக எழுந்தருளி தேவேந்திரனை மீண்டும் அமராவதிக்கு அதிபதியாக்கினார். அதனால், இத்தலத்துக்கு இந்திரபுரி என்ற பெயரும் ஏற்பட்டது. சட்டைநாதருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது.


*
மன்மதன், தேவர்களால் ஏவப்பட்டு, விஸ்வாமித்தர முனிவரின் தவத்தைக் குலைக்க அவர் மீது மலர்க்கணைகளைத் தொடுத்தான். அதனால் சினம் கொண்ட முனிவர், இந்திரனை சபிக்க, அவன் மாகாளநாதரை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான். அதன் காரணமாக இத்தலம் மாரபுரி என்ற பெயரைப் பெற்றது.
*
அஷ்டநாகங்களில் ஒன்றாகிய வாசுகி என்ற நாகம் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக்கொள்ள இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப் பெற்றது. நாகதோஷம், புத்திரதோஷம், திருமணத்தடை உள்ளவர்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் வாசுகிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நற்பலன்கள் அடையலாம்.


*

அம்பர் பெருந்திருக்கோவில், அம்பர் மாகாளம் என்ற இரண்டு கோவில்களுக்கும் இடையில் சாலையோரமாக சோமாசிமார் நாயனார் செய்த யாககுண்டம் உள்ளது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரம் அன்று இங்கு யாக உற்சவம் நடைபெறும்.

இத்தலத்தில் மாகாள முனிவர், காளி ஆகியோர் இறைவன் மாகாளநாதரை வழிபட்டுள்ளனர். இறைவன் சோழ மன்னன் ஒருவனுக்கு தனது மணக்கோலத்தைக் காட்டியருளிய தலம். அம்பரனை அம்பாள் வதம் செய்ததும் இத்தலத்தில்தான். புன்னை மரம் தலவிருட்சமாகும். இறைவன், இறைவி இருவரும் பறையர் உருவத்தில் செப்புச் சிலை வடிவில் இக்கோவிலில் உள்ளனர். சோமாசிமாற நாயனார், அவர் மனைவி ஆகியோரின் உருவச் சிலைகளும் இக்கோவிலில் உள்ளன. ஆலயம் ஒரு கட்டுமலை மேல் அமைந்துள்ளது. சோழ மன்னன் கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களில் இதுவும் ஒன்று.

கோவில் அமைப்பு 

இவ்வாலயம் அரிசிலாற்றின் வடகரையில் 5 நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. அம்பரன் என்னும் அசுரனைக் கொன்ற பாவம் தீர, காளி இத்த தல இறைவனைப் பூசித்து வழிபட்ட தலம். எனவே, மாகாளம் என்று பெயர் பெற்றது. கோபுர வாயில் வழி உள்ளே சென்றால் விசாலமான முற்றம் உள்ளது. இறைவன் சந்நிதிக்கு நேரே பலிபீடமும் நந்தி மண்டபமும் உள்ளன. வடகிழக்கு மூலையில் கல்யாண மண்டபம் உள்ளது. முற்றவெளியை அடுத்து அதிகார நந்தி கோபுரம் என்றழைக்கப்படும் 3 நிலை இரண்டாம் கோபுரம் உள்ளது. உள்ளே மகாமண்டபத்தில் நாகநாதசுவாமி, லிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். எதிரில் நந்தியெம் பெருமான், அவருக்கு வலதுபுறம் அம்பிகை அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். நாகநாதசுவாமிக்குப் பின்புறம் நாக கன்னிகை யோகாசனத்தில் வீற்றிருக்கிறாள். நாக கன்னிகை இத்தலத்தில் இறைவனை வழிபட்டு நற்கதி பெற்றாள். காளம் என்றால் நாகம் என்ற பொருளுண்டு. காளம் வழிபட்டதால் மாகாளம் என்று இத்தலம் பெயர் பெற்றது என்றும் கூறுவர். வடக்குப் புறம் சோமாசிமாற நாயனாருக்குக் காட்சி கொடுத்த நாயகர், நடராஜர் மற்றும் பிற உற்சவமூர்த்திகளைக் காணலாம்.

மேலும் உள்ளே சென்றால், மாகாளநாதர் சந்நிதியை அடையலாம். கருவறையில் காளி தன் கையால் பிடித்துவைத்த சிறிய லிங்கத் திருமேனியுடன் இறைவன் சிறிய தோற்றத்தில் எழுந்தருளியுள்ளார். கருவறையை வலம் வரும்போது தெற்குப் புறத்தில் தியாகராஜர் சந்நிதி உள்ளது. அடுத்து 63 மூவர், பரிவார கணபதி, தட்சிணாமூர்த்தி, உதங்க, மதங்க முனிவர்கள், தனுசு சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டேஸ்வரர் ஆகியோரை தரிசிக்கலாம். இங்குள்ள தனுசு சுப்பிரமணியர் வடிவம் வில்லேந்தியவாறு மிக்க அழகாக உள்ளது. உள் பிராகாரத்தை வலம் வந்துவிட்டு வெளிப் பிராகாரம் வந்தால், அங்கு தென்மேற்கு மூலையில் காளி கோவில் உள்ளது. அன்னை, அம்பாசுரனை வதம் செய்தபின், அந்த தோஷம் நீங்க மாகாளநாதரை வழிபட்ட மாகாளியாவாள்.

அம்பர் மாகாளம் தலத்துக்கு சம்பந்தர் 3 பதிகங்கள் பாடியுள்ளார். அவற்றுள் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ள பதிகம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப் போழிள மதிசூடிப்
பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும் பிணையல்செய்                                             தவர்மேய
மல்கு தண்டுறை யரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
அல்லு நண்பகலும் தொழும் அடியவர்க் கருவினை யடையாவே.

அரவ மாட்டுவ ரந்துகில் புலியதள் அங்கையி லனலேந்தி
இரவு மாடுவ ரிவையிவர் சரிதைகள் இசைவன பலபூதம்
மரவந்தோய்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
பரவியும் பணிந்தேத்த வல்லார் அவர் பயன்றலைப் படுவாரே

குணங்கள் கூறியுங் குற்றங்கள் பரவியுங் குரைகழ லடிசேரக்
கணங்கள் பாடவுங் கண்டவர் பரவவுங் கருத்தறிந் தவர்மேய
மணங்கொள் பூம்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
வணங்கும் உள்ளமோடு அணைய வல்லார்களை வல்வினை                                        யடையாவே.

எங்கு மேதுமோர் பிணியிலர் கேடிலர் இழைவளர் நறுங்கொன்றை
தங்கு தொங்கலுந் தாமமுங் கண்ணியுந் தாமகிழ்ந் தவர்மேய
மங்குல் தோய்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
கங்குலும் பகலும் தொழும் அடியவர் காதன்மை யுடையாரே.

நெதிய மென்னுள போகமற் றென்னுள நிலமிசை நலமாய
கதிய மென்னுள வானவ ரென்னுளர் கருதிய பொருள்கூடில்
மதியந் தோய்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
புதிய பூவொடு சாந்தமும் புகையுங்கொண் டேத்துதல்                                                 புரிந்தோர்க்கே.

கண்ணு லாவிய கதிரொளி முடிமிசைக் கனல்விடு சுடர்நாகம்
தெண்ணி லாவொடு திலதமு நகுதலை திகழவைத் தவர்மேய
மண்ணு லாம்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
உண்ணி லாநினைப் புடையவ ரியாவரிவ் வுலகினி லுயர்வாரே.

தூசு தானரைத் தோலுடைக் கண்ணியஞ் சுடர்விடு நறுங்கொன்றை
பூசு வெண்பொடிப் பூசுவ தன்றியும் புகழ்புரிந் தவர்மேய
மாசு லாம்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
பேசு நீர்மையரி யாவரிவ் வுலகினிற் பெருமையைப் பெறுவாரே.

பவ்வ மார்கட லிலங்கையர் கோன்றனைப் பருவரைக் கீழூன்றி
எவ்வந் தீரவன் றிமையவர்க் கருள்செய்த விறையவ                                                 னுறைகோயில்
மவ்வந் தோய்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
கவ்வை யாற்றொழு மடியவர் மேல்வினை கனலிடைச் செதிளன்றே.

உய்யுங் காரண முண்டென்று கருதுமி னொளிகிளர் மலரோனும்
பைகொள் பாம்பணைப் பள்ளிகொ ளண்ணலும் பரவநின் றவர்மேய
மையுலாம்பொழி லரிசின் வடகரை வருபுனன் மாகாளம்
கையினால் தொழுத வலமும் பிணியுந்தங் கவலையுங் களைவாரே.

பிண்டி பாலரு மண்டைகொ டேரரும் பீலிகொண் டுழல்வாரும்
கண்ட நூலருங் கடுந்தொழி லாளாருங் கழறநின் றவர்மேய
வண்டு லாம்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
பண்டு நாம் செய்த பாவங்கள் பற்றறப் பரவுதல் செய்வோமே.

மாறு தன்னொடு மண்மிசை யில்லது வருபுனன் மாகாளத்
தீறு மாதியு மாகிய சோதியை யேறமர் பெருமானை
நாறு பூம்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன தமிழ்மாலை
கூறுவாரையும் கேட்கவல்லாரையும் குற்றங்கள் குறுகாவே.

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் சிவாகசி முருக.இரமேஷ்குமார் ஓதுவார்

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் சொ.சிவகுமார் ஒதுவார். செண்பக விநாயகர் ஆலயம், சிங்கப்பூர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com