Enable Javscript for better performance
துன்பங்களில் இருந்து விடுபட பரிகாரத் தலம் மதுவனேஸ்வரர் கோவில், நன்னிலம்- Dinamani

சுடச்சுட

  

  துன்பங்களில் இருந்து விடுபட பரிகாரத் தலம் மதுவனேஸ்வரர் கோவில், நன்னிலம்

  By என்.எஸ். நாராயணசாமி  |   Published on : 17th May 2018 02:31 PM  |   அ+அ அ-   |    |  

  DSCN2050

   

  பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 71-வது தலமாக இருப்பது நன்னிலம். தேவர்களால் உருவாக்கப்பட்ட தேவ தீர்த்தத்தில் மாசி மாதத்தில் நீராடி இத்தல இறைவனை வழிபடுவோர், தங்களுடைய துன்பங்களில் இருந்து விடுபட்டு இன்பமாக வாழ்வார்கள். மேலும், ஏகாதசி மற்றும் பிரதோஷ காலத்தில் வழிபடுவோர் எல்லா செல்வங்களும் பெற்று இனிது வாழ்வர் என்று தலபுராணம் கூறுகிறது. இத்தலத்துக்கு சுந்தரர் எழுதிய பதிகம் ஒன்று உள்ளது. 

  இறைவன் பெயர்: மதுவனேஸ்வரர், பிரஹதீஸ்வரர்

  இறைவி பெயர்: மதுவனநாயகி, பிரஹதீஸ்வரி
   

  எப்படிப் போவது

  கும்பகோணம் - நாகூர் சாலை மார்க்கத்தில் நன்னிலம் ஊர் இருக்கிறது. மயிலாடுதுறை மற்றும் திருவாரூரில் இருந்தும் நன்னிலம் வரலாம். நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்து திருவாரூர் போகும் பாதையில், அரசு மருத்துவமனை எதிரில் செல்லும் வழியில் சென்றால் கோயிலை அடையலாம்.

  ஆலய முகவரி

  அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோவில்
  நன்னிலம், நன்னிலம் வட்டம்
  திருவாரூர் மாவட்டம் - 610 105.

  இவ்வாலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

  கோச்செங்கட் சோழன் தனது முன்பிறவியில் யானையினால் ஏற்பட்ட இடர் காரனமாக, யானை ஏறமுடியாத மாடக் கோவில்கள் 70 கட்டினான் என்று வரலாறு கூறுகிறது. நன்னிலம் மதுவனேஸ்வரர் திருக்கோவிலும் அத்தகைய ஒரு மாடக் கோவில். 

  முடிகொண்டான் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இத்திருக்கோவில், 270 அடி நீளமும், 135 அடி அகலமும் கொண்டது. கோவிலின் ராஜகோபுரம் 2 நிலைகளைக் கொண்டது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்து வெளிப் பிராகாரத்தை அடையலாம். நேர் எதிரில் பிரம்மன் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர் சந்நிதியும், பக்கத்தில் அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் சந்நிதியும் உள்ளன. இந்தப் பிராகாரத்தை வலம் வரும்போது சித்தி விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், சூரியன், நவகிரகங்கள் ஆகியவற்றிற்கு தனி சன்னதிகள் இருப்பதைக் காணலாம். நன்னிலத்து துர்க்கை அம்மன் சக்தி வாய்ந்தவளாகப் போற்றப்படுகிறாள்.

  மூலவர் சந்நிதி ஒரு கட்டுமலை மீது அமைந்துள்ளது. படிகளேறி மேலே செல்ல வேண்டும். கட்டுமலை மீதுள்ள பிராகாரத்தில் சோமாஸ்கந்தர் சந்நிதி அழகாக உள்ளது. மூலவர் மதுவனேஸ்வரர், சதுர ஆவுடையார் மீது சற்றுயர்ந்த பாணத்துடன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கருவறை கிழக்கு நோக்கி உள்ளது. விசேஷ காலங்களில் குவளை, நாகாபரணம் சார்த்தப்படுகிறது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சூரியனின் அருகில் பைரவர் அருள்பாலிப்பதும், அனைத்து நவகிரகங்களும் சூரியனை பார்த்திருப்பதும், சூரியனும் குருவும் நேருக்கு நேர் பார்த்திருப்பதும், சனி பகவான் தனி சன்னதியில் அருள் பாலிப்பதும், சித்ரகுப்தர் தனி சன்னதியில் அருள்பாலிப்பதும் தலத்தின் சிறப்பம்சமாகும். தெற்கில் எமனும், மேற்கில் வருணனும், கிழக்கில் இந்திரனும், வடக்கில் குபேரனும் லிங்கம் அமைத்து பூஜை செய்துள்ளார்கள். இந்திரன் முதலான தேவர்கள், சூரியன், பிருஹத்ராஜன் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.

  பிருஹத்ராஜனின் கோரிக்கைக்கு இணங்கி, சிவபெருமான் ஆலயத்தின் வடக்கே தனது சூலாயுதத்தால் ஒரு குளத்தை உருவாக்கி, தன் தலையில் உள்ள கங்கையை அதில் நிரப்பினாராம். இது சூலதீர்த்தம், பிருஹத் தீர்த்தம், மது தீர்த்தம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஜலந்திரன் என்ற அசுரனை எம்பெருமான் வதம் செய்தபோது வீசிய சக்கரம், இத்தலத்தினருகில் விழுந்ததாம். அங்கு உருவான தீர்த்தம் சக்கரக்குளம் என்று தற்போது அழைக்கப்படுகிறது. இது ஆலயத்தின் கிழக்கே சற்று தொலைவில் உள்ளது.


  தல வரலாறு 

  துவாபர யுகத்தில் விருத்திராசூரன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அசுரனின் கொடுமைகளுக்கு பயந்த தேவர்கள் சிவனிடம் தஞ்சம் புகுந்தனர். அசுரர்களை ஏமாற்ற இத்தல இறைவன் தேவர்களை தேனீக்களாக மாற்றிவிட்டார். அத்துடன் இங்குள்ள கர்ப்பகிரகத்தில் தேனீக்களை கூடுகட்டி வசிக்கச்செய்து லிங்க வழிபாடு செய்யும்படி கூறினார். தேவர்கள் தேனீக்கள் வடிவம் கொண்டு வழிபட்டதால், இறைவன் மதுவனேஸ்வரர் என்றும் அம்மன் மதுவன நாயகி என்றும் பெயர் பெற்றனர். தேவர்கள் தேனீக்களாய் மாறியிருந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால், இத்தலம் மதுவனம் என்று பெயர் பெற்றது. இப்போதும் சுவாமியின் கர்ப்பகிரகத்திலும், கோயிலின் சுற்றுப்புறங்களில் உள்ள மறைவிடங்களிலும் யாருக்கும் தீங்கு செய்யாமல் தேனீக்கள் வசித்து வருகின்றன.

  ஒரு சமயம் தேவர்களின் சபையில் ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேடன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப் பற்றிக்கொள்ள, வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு பலத்த காற்றை வீசினார். வாயு பகவானால் மகா மேருவை அசைக்க முடியவில்லை. இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஆதிசேடன் தன் பிடியைச் சிறிது தளர்த்தினார். வாயு பகவான் மகா மேருவின் ஒரே ஒரு சிகரத்தை பெயர்த்து தெற்கில் உள்ள கடலில் போட எடுத்துச் செல்லும்போது, அந்தச் சிகரத்தின் சிறிய துளி இந்தத் தலத்தில் விழுந்ததாக தலபுராணம் கூறுகிறது. சமவெளியாக இருந்த இப்பகுதியில், சிகரத்தின் துளி விழுந்த பகுதி சிறிய மலையாக மாறி அதன் மீது கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

  சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சுந்தரர் தனது பதிகத்தில் இக்கோவிலை பெருங்கோயில் என்று அடைமொழி கொடுத்து சிறப்பித்துப் பாடியுள்ளார். தனது பதிகத்தின் கடைசிப் பாடலில் இக்கோவில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்டது எனபதையும் குறிப்பிட்டுள்ளார்.

  1. தண்ணியல் வெம்மையி னான்றலை 
  யிற்கடை தோறும்பலி
  பண்ணியல் மென்மொழி யார்இடக் 
  கொண்டுழல் பண்டரங்கன்
  புண்ணிய நான்மறை யோர்முறை 
  யாலடி போற்றிசைப்ப
  நண்ணிய நன்னிலத்துப் பெருங் 
  கோயில் நயந்தவனே. 

  2. வலங்கிளர் மாதவஞ் செய்மலை 
  மங்கையோர் பங்கினனாய்ச்
  சலங்கிளர் கங்கைதங் கச்சடை 
  யொன்றிடை யேதரித்தான்
  பலங்கிளர் பைம்பொழில் தண்பனி 
  வெண்மதி யைத்தடவ
  நலங்கிளர் நன்னிலத்துப் பெருங் 
  கோயில் நயந்தவனே. 

  3. கச்சிய னின்கருப் பூர்விருப் 
  பன்கரு திக்கசிவார்
  உச்சியன் பிச்சையுண் ணியுல 
  கங்களெல் லாமுடையான்
  நொச்சியம் பச்சிலை யான்நுரை 
  தீர்புன லாற்றொழுவார்
  நச்சிய நன்னிலத்துப் பெருங் 
  கோயில் நயந்தவனே. 

  4. பாடிய நான்மறை யான்படு 
  பல்பிணக் காடரங்கா
  ஆடிய மாநடத் தானடி 
  போற்றியென் றன்பினராய்ச்
  சூடிய செங்கையி னார்பல 
  தோத்திரம் வாய்த்தசொல்லி
  நாடிய நன்னிலத்துப் பெருங் 
  கோயில் நயந்தவனே. 

  5. பிலந்தரு வாயினொ டுபெரி 
  தும்வலி மிக்குடைய
  சலந்தரன் ஆகம் இருபிள 
  வாக்கிய சக்கரமுன்
  நிலந்தரு மாமகள் கோன்நெடு 
  மாற்கருள் செய்தபிரான்
  நலந்தரு நன்னிலத்துப் பெருங் 
  கோயில் நயந்தவனே. 

  6. வெண்பொடி மேனியி னான்கரு 
  நீல மணிமிடற்றான்
  பெண்படி செஞ்சடை யான்பிர 
  மன்சிரம் பீடழித்தான்
  பண்புடை நான்மறை யோர்பயின் 
  றேத்திப்பல் கால்வணங்கும்
  நண்புடை நன்னிலத்துப் பெருங் 
  கோயில் நயந்தவனே. 

  7. தொடைமலி கொன்றைதுன் றுஞ்சடை 
  யன்சுடர் வெண்மழுவாட்
  படைமலி கையன்மெய் யிற்பகட் 
  டீருரிப் போர்வையினான்
  மடைமலி வண்கம லம்மலர் 
  மேல்மட வன்னம்மன்னி
  நடைமலி நன்னிலத்துப் பெருங் 
  கோயில் நயந்தவனே. 

  8. குளிர்தரு திங்கள்கங் கைகுர 
  வோடரக் கூவிளமும்
  மிளிர்தரு புன்சடை மேலுடை 
  யான்விடை யான்விரைசேர்
  தளிர்தரு கோங்குவேங் கைதட 
  மாதவி சண்பகமும்
  நளிர்தரு நன்னிலத்துப் பெருங் 
  கோயில் நயந்தவனே. 

  9. கமர்பயில் வெஞ்சுரத் துக்கடுங் 
  கேழற்பின் கானவனாய்
  அமர்பயில் வெய்திய ருச்சுன 
  னுக்கருள் செய்தபிரான்
  தமர்பயில் தண்விழ வில்தகு 
  சைவர் தவத்தின்மிக்க
  நமர்பயில் நன்னிலத்துப் பெருங் 
  கோயில் நயந்தவனே. 

  10. கருவரை போலரக் கன்கயி 
  லைம்மலைக் கீழ்க்கதற
  ஒருவிர லாலடர்த் தின்னருள் 
  செய்த உமாபதிதான்
  திரைபொரு பொன்னிநன் னீர்த்துறை 
  வன்றிகழ் செம்பியர்கோன்
  நரபதி நன்னிலத்துப் பெருங் 
  கோயில் நயந்தவனே. 

  11.கோடுயர் வெங்களிற் றுத்திகழ் 
  கோச்செங்கணான் செய் கோயில்
  நாடிய நன்னிலத்துப் பெருங் 
  கோயில் நயந்தவனைச்
  சேடியல் சிங்கிதந் தைசடை 
  யன்றிரு வாரூரன்
  பாடிய பத்தும் வல்லார் புகு 
  வார் பரலோகத்துள்ளே. 

  சுந்தரர் அருளிய பதிகம் - பாடியவர் இரா.குமரகுருபரன் ஓதுவார் 

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai