தேவி சொல்வாளா? - வி.பார்த்திபன்

கடிகாரம் ‘டங்’கென்று ஒலித்தது. பார்த்தாயா! மணி ஒன்பதரை! என்று முகத்தைச் சுணக்கிய ராஜேந்திரன் பரபரப்புடன் சோற்றைப் பிசையலானான்.
Updated on
8 min read

கடிகாரம் ‘டங்’கென்று ஒலித்தது. பார்த்தாயா! மணி ஒன்பதரை! என்று முகத்தைச் சுணக்கிய ராஜேந்திரன் பரபரப்புடன் சோற்றைப் பிசையலானான். அவன் எதிரே நின்று மோர் வார்த்துக் கொண்டிருந்த ரேவதி ஆயாசத்துடன் சொன்னாள்” ‘பரக்கப் பரக்க அள்ளிப் போட்டுக் கொண்டால் உங்கள் உடம்பிற்கு ஒத்துக் கொள்ளவில்லையே என்பதற்காக விடியற்காலையிலேயே எழுந்து அலுவல்களைத் தொடங்குகிறேன். ஆனால் நீங்களோ? காண வருகிறவர்கள் பேச்சை முடித்துக் கொண்டு கிளம்பினாலும் அவர்களை விடாமல் மொச்சு மொச்சென்று பேசிப்பொழுதைக் கழிக்கிறீர்கள். யாரும் பேச வராவிட்டால் ஏதாவது காகிதங்களை எடுத்துப் புரட்ட ஆரம்பித்து விடுகிறீர்கள். பல முறை நான் குரல் கொடுத்தாலும் ஒன்பது மணிக்குத்தான் குளிக்க வருகிறீர்கள். எல்லாமாகச் சேர்ந்து வயிற்றுக்கு சோற்றுப்பாடுதான் குட்டிச்சுவர் ஆகிறது! இப்படி அள்ளிப் போட்டுக் கொண்டு ஓட்டமும் நடையுமாக ஆபிசுக்குப் போகிறது; சாயங்காலம் வந்து ’அப்பாடா’ என்று நாற்காலியிலே சாய்ந்து கொண்டு, இன்று ஆபிசிலே ‘எனக்கு உடம்பு இப்படி இருந்தது, அப்படி இருந்தது’ என்றெல்லாம் வரிசையாகச் சொல்கிறது. இதுவே உங்கள் வழக்கமாகப் போய் விட்டது. ஏன் தான் இப்படி வினாத் தெரியாத பிள்ளையைப் போல் நடந்து கொள்கிறீர்களோ? ஒவ்வொரு நாளும் நீங்கள் ஆபிசிலிருந்து எந்த நிலையில் வருவீர்களோ என்று நான் வயிற்றிலே நெருப்பைக் கட்டிக் கொண்டு திகில் படுவது எனக்கல்லவா தெரியும்?’ என்றாள்.

ராஜேந்திரனிடமிருந்து சற்றே ஹாஸ்ய உணர்ச்சி தலை நீட்டிற்று. ‘பெண்ணாய்ப் பிறந்தவர்கள் அந்த வார்த்தையைச் சொல்லக் கூடாது என்பார்கள் போலிருக்கிறதே!’

‘எந்த வார்த்தையை?’

வயிற்றிலே நெருப்பைக் கட்டிக் கொள்வது’.

‘ஆமாம், பிள்ளை குட்டிகளைப் பெற்ற மகராஜிகளுக்கல்லவா அந்த அச்சானியமெல்லாம்!’ என்று ரேவதி மோர்ப் பாத்திரத்துடன் உள்ளே போய்விட்டாள்.

‘பாவம் ரேவதி!’ என்றது ராஜேந்திரனின் உள்ளம்.

**

உணவு கொண்டு எழுந்த அவன் சற்று உட்காரக் கூட இல்லாமல் சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினான். ரேவதி படி முனையில் நின்று தெருவிலே அவன் செல்வதைப்பார்த்துக் கொண்டே இருந்தாள். அவன் தெரு முனை சென்று திரும்பி விட்டான். அவனுடைய உருவம் மறைந்த பின்னும் அவள் அந்தத் திசையிலேயே பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தாள்.

‘என்ன ரேவதி அங்கே அப்படி பார்த்துக் கொண்டிருக்கிறாய்?’ பின்புறத்தில் பெண்குரல் ஒன்று ஒலிக்கவும் ரேவதி சட்டென்று திரும்பிப் பார்த்தாள். சோகம் நிறைந்த முகத்திலே மலர்ச்சியை தோற்றுவித்துக் கொண்டு ‘வா சுகுணா!...’ என்று அழைத்தாள். அவள் தன் முகத்தை உற்று நோக்குவதைக் கண்டதும் சட்டென்று கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

சுகுணா உள்ளே வந்து கொண்டே, ‘லாவகமாக கண்ணைத் துடைத்துக் கொண்டாலும், எனக்குத் தெரிந்து விட்டது ரேவதி, எதைப் பற்றி வருத்தப்பட்டுக் கொண்டு கண் கலங்கி நின்று கொண்டிருந்தாய்?’ என்று கேட்டாள்.

ரேவதி அவளுக்கு ஒன்றும் பதில் சொல்லாமல் கணவன் உண்ட தட்டை எடுத்துக் கழுவி அந்த இடத்தை சுத்தம் செய்யலானாள். சுகுணா அவளையே இமையாது நோக்கியபடி ஊஞ்சலில் அமர்ந்து லேசாக அதை அசைத்துக் கொண்டிருந்தாள். ரேவதி அலுவலை முடித்துக் கொண்டு அவள் அருகே வந்து அமர்ந்தாள்.

‘சுகுணாவும் நானும் ஈருடல் ஓருயிரும் என்று வாய்க்கு வாய் சொல்லிக் கொள்கிறாய். ஆனால் சில விஷயங்களை என்னிடம் மறைத்து விடுகிறாய்’ என்று சுகுணா குத்தலாகப்பேசவும் ரேவதி சோகச் சிரிப்பு சிரித்தாள். ‘புதிதாக ஏதாவது செய்தி இருந்தால் அல்லவா சொல்வதற்கு? எப்போதும் உள்ள கதை தான்’. என்றாள்.

சுகுணா அவள் முகத்தை ஊடுருவி நோக்கினாள். அந்தப் பார்வையில் கேள்விக்குறி தொக்கி நின்றது.

இவரைப்பற்றித்தான் சொல்கிறேன். எங்களுக்கு இப்போது என்ன குறைவு? பிக்கல் பிடுங்கல் இல்லை. கை நிறையச் சம்பளம் வருகிறது. வேளா வேளையில் ஓரளவு உண்கிறார். உறங்குகிறார். உத்தியோகத்தையும் குற்றம் குறையின்றிப் பார்க்கிறார். ஆனால் நாளுக்கு நாள் அவர் உடல் நிலை மோசமடைந்து கொண்டே வருகிறது. ஆடிக்கடி சோர்ந்து ஓய்ந்து போகிறார். சில சமயம் பேசக் கூடத் திறன் அற்று ஜாடை செய்கிறார். பார்க்காத டாக்டர் இல்லை. சாப்பிடாத மருந்து இல்லை. பயனும் ஒன்றும் இல்லை. இதை விட என் மனக் குறைவுக்கு வேறு என்ன வேண்டும் என்கிறாய்?’

‘உண்மை தான். சுவரை வைத்துச் சித்திரம். குழந்தை குட்டி இல்லாத ஒரு குறை போதுமே! என்றாவது அந்தப்பேறும் கிட்டலாமோ என்று கனவு காணும் நிலையில், சிட்டுக் குருவிகளைப் போலக் கவலையற்று, உல்லாசமாக இருக்க வேண்டிய காலத்திலே அவருடைய உடல்நிலை இப்படி இருந்தால் உன் மனம் துயரில் மூழ்குவது சகஜந்தான். ஆனால் உன்னிடம் ஒரு முரட்டுப் பிடிவாதம் இருப்பதையும் இந்த இடத்திலே நான் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. பக்கிரிசாமியின் சோதிடத்தைப் பற்றி நான் பலமுறை உனக்குச் சொல்லி இருக்கிறேன். நீ அதைப் பொருட்படுத்தவே இல்லை’.

ரேவதி பெருமூச்செறிந்தாள். ‘உம்! சோதிடம்…இந்தப் பிறப்பில் அந்தக் கலையை என்னால் ஒப்புக் கொள்ளவே முடியாது சுகுணா!’

‘ஆபத்து வேளையில் கொள்கை குறிக்கோள் என்றெல்லாம் பிடிவாதம் செய்வது மெச்சத் தகுந்ததல்ல. மணி மந்திர ஒளஷதம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். படைவன் வந்து கதவைத் தட்டுகிற போது….’

‘சுகுணா, என் பிடிவாதத்தின் காரணத்தைச் சொல்கிறேன். கேட்டுவிட்டு உன் தீர்ப்பைச் சொல்லு. என் பிறந்த ஊரில் எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் மங்களம் என்ற ஒரு பெண், அங்கே அவள் தான் என் ஆருயிர்த் தோழி. அவள் தகப்பனார் வேதம், சாஸ்திரம் இவற்றோடு சோதிடக் கலையையும் கரைத்துக் குடித்தவர். சோதிட வருவாயினால் ஏறக்குறையக் கால் லட்சத்துக்கும் மேல் சம்பாதித்தவரும் கூட. ஊருக்கெல்லாம் சோதிடம் சொல்பவர், தம் குடும்ப விஷயத்தில் அசட்டையாக இருப்பாரா? பெண் மங்களத்திற்குப் பல காலம் தேடி மிகச் சிறந்த வரனாக ஒரு வாலிபனை தேர்ந்தெடுத்தார். பொருந்தாத நிமித்தங்களில் ஒன்று கூடக் குறையக் கூடாதென்று ஜாதகங்களைப் போட்டுப் புரட்டி புரட்டி ஆராய்ந்தார். சற்று கூடுதலான வயதாகித் திருமணம் ஆகாமல் இருந்த மங்களம் ஒரு மண்டலம் சங்கல்பம் செய்து கொண்டு காலையிலும் மாலையிலும் ஆலயத்திற்குச் சென்று நெய் விளக்கேற்றி வலம் வந்து தேவியை வழிபட்டாள். அதன் பிறகே கல்யாணம் குதிர்ந்தது. அதனாலேயே அவளுடைய சங்கல்பத்தையும் வழிபாட்டையும் அனைவரும் பாராட்டினார்கள். ஆனால், சுகுணா, என்ன நடந்தது தெரியுமா? திருமணம் நடந்த மறுநாள் காலையில் மணமகன் பிணக் கோலத்தில் கிடந்தான். அந்த நிகழ்ச்சி அறிந்தவர் தெரிந்தவர் அனைவரிடமுமே கண்ணீர் தாரையை வருவித்தது. உயிர்த்தோழியாகிய என் மனம் என்ன பாடுபட்டிருக்குமென்று நீயே ஊகித்துக் கொள். சோதிடம் கை விட்டாலும் தெய்வ வழிபாடாவது மாங்கல்யத்தின் மங்கல நிலையைக் காத்துக் கொடுக்கக் கூடாதா? அது முதல் சோதிடத்தில் மட்டுமன்றி, தெய்வ வழிபாட்டிலும் என் நம்பிக்கை வறண்டு போய்விட்டது. வெறுப்பே மிகுந்து விட்டது. இல்லாவிட்டால் நீ இவ்வளவு தூரம் சொல்கிற போது…’

‘சோதிடமும் தெய்வ வழிபாடும் பலன் அளிக்காமல் போவதற்குக் காரணங்கள் பல உண்டு. குதிரைக்கு ‘குர்ரம்’ என்றால் ஆனைக்கு ‘அர்ரம்’ என்பது சரியா? பல பல வளர்த்துவானேன்? நாளைக்கு இந்நேரத்துக்குப் பக்கிரிசாமியை இங்கே வரச் சொல்கிறேன். உங்கள் இருவரின் ஜாதகங்களையும் அவரிடம் காண்பி. அவர் தான் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமே!’

‘அப்படியானால் நாளை நீயும் வா.’

சுகுணா விடைபெற்றுச் சென்றாள். ரேவதி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.

**

மறுநாள் அதே நேரத்திற்கு சுகுணா சோதிடருடன் வந்துவிட்டாள். சோதிடர் ஜாதகங்களைப் பரிசீலனை செய்தார். பெண்கள் இருவரும் அவருடைய முகத்தையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தனர்.

அவர் முகத்திலே தோன்றிக் கொண்டு வந்த மாறுதல்கள் திருப்தி அளிக்கக் கூடியவையாக இல்லை.

சோதிடர் நிமிர்ந்தார். ஒரு வினாடி அவர்கள் முகத்தை உற்று நோக்கினார். பின்னர் சுகுணாவை நோக்கி ‘என்ன அம்மா உங்களுக்குத் தெரிய வேண்டும்?’ என்று கேட்டார். அவள் சாதுரியமாக, ‘நீங்கள் சொல்லக் கூடிய பொதுப்பலன்களைச் சொல்லுங்கள். பின்னர் கேட்க வேண்டியதைக் கேட்கிறோம்.’ என்றாள். உடனே சோதிடர் பளிச்சென்று சொன்னார்.

‘இந்த இரு ஜாதகங்களும் எல்லா வகையில் அதிர்ஷ்டம் உடையவை ஆனால் ஆண் ஜாதகத்திற்கு ஆயுள் பாவம் மிகவும் பலவீனமாக இருக்கிறது.’ சோதிடர்கள் கெடுதல்களை அப்பட்டமாகச் சொல்ல மாட்டார்கள். பெண்கள் ஒருவர் முகத்தை ஒருவர் குறிப்பாகப் பார்த்துக் கொண்டார்கள். சுகுணா கேட்டாள்:

‘கண்டம் போல் ஏதாவது….’

‘இவருடைய உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வரலாம். இன்னும் சில காலத்தில் படுத்த படுக்கையாகவும் ஆகிவிடலாம். மருத்துவ விடுதியில் சேர்க்கும்படியும் நேரலாம்.’

‘அப்புறம்?’

சோதிடர் வருத்தம் தோன்றச் சிரித்தார். ‘அப்புறம் என்ன அம்மா? இது ஏதாவது கதையா?’ இப்படிச் சொல்லிக் கொண்டே அவர் ஜாதகக் குறிப்பை மடித்து வைத்து விட்டார். அவருடைய சொல்லும், செயலும் சுகுணாவின் உள்ளத்தையே வாட்டி எடுத்தன. ரேவதியைத் திரும்பிப் பார்த்தாள். அவள் கண்களில் நீர் தளும்புவதைக் கண்டாள். அடைக்கும் தொண்டையைச் சீர் செய்துகொண்டு சோதிடரிடம் கேட்டாள்:

‘மார்க்கண்டேயனுக்கு ஆயுள் காலம் நீண்டது போல இவருடைய நிலைக்கும் ஏதாவது பரிகாரம்….;

‘அது புராணக் கால மார்க்கண்டேயன். மனப்பூர்வமாக கடவுளை வழிபட்டான். நன்மையை அடைந்தான். இது கலி காலம். இக்காலத்தவர்களுக்கு நாளுக்கு நாள் தெய்வ நம்பிக்கையே வழிபாட்டு முறைகளோ எதுவும் இல்லை.’

‘ஒப்புக் கொள்கிறேன். ஆனால் எங்கள் விஷயத்தில் அப்படி நினைக்க வேண்டாம். ஏதாவது பரிகாரம் உண்டானால் சொல்லுங்கள். முழு நம்பிக்கையோடு அதில் ஈடுபடுகிறோம் என்று சோதிடரிடம் கூறிய சுகுணா ரேவதியின் பக்கம் திரும்பி, ‘என்ன ரேவதி?’ என்று கேட்டாள். கலக்கமான நிலையில் இருந்த ரேவதி ‘சரி’ என்று தலையசைத்தாள்.

‘பிரமாதமாக நான் எதுவும் சொல்லிவிடப் போவதில்லை. தேவி கருணை உள்ளவள். சாவித்திரி அவளை குறித்து நோன்பிருந்து சத்தியவானின் உயிரை மீட்டாள். நாள் தோறும் காலை மாலை இரு வேளைகளிலும் ஆலயம் சென்று தேவியை வணங்கி மனம் உருகி மாங்கல்யப் பிச்சை கேட்டால் ஒருவேளை இந்த உயிர் மீளலாம்’.

‘ஹா! பெண்கள் இருவரும் திடுக்கிட்டுப் போயினர். ஒருவேளை இந்த உயிர் மீளலாம்…இருவர் உள்ளங்களிலும் இந்த சொற்கள் இடையறாமல் ஒலித்தன.

சோதிடர் எழுந்துவிட்டார். ரேவதி சுகுணா சொன்னபடி அவளுக்கு மரியாதை செய்தாள். அவர் விடைபெற்றுச் சென்றார்.

**

சற்று நேரம் பெண்களிடையே மெளனம் நிலவியது. சுகுணா சொன்னாள்: ‘ரேவதி குற்றம் அற்ற நீ இத்தகைய நேரத்தில் உன் புத்தி சக்திகளை கொண்டு தான் சமாளித்துக் கொள்ள வேண்டும். மனதைத் தளர விடுவதில் பயனில்லை. நம்பிக்கை அற்ற முறிஅயில் செயல்படுவதிலும் பயனில்லை. தெய்வத்தின் மேல் பாரத்தைப் போட்டு இன்று மாலை முதலே நீ தேவி வழி பாட்டில் முழு மனத்தோடு ஈடுபடு. தேவி உனக்கு நன்மையே புரிவாள்.’

மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அவளும் விடைபெற்றுச் சென்றாள். ரேவதி சோர்ந்து படுத்தாள்.

**

சோதிடர் வாக்கு அன்றே பலித்துவிட்டது. கணவன் வந்ததும் உரிய பணிகளைமுடித்துக் கொண்டு ஆலயம் செல்ல வேண்டும் என்ற நினைவோடு அதற்குத் தயாராக இருந்தாள் ரேவதி. ஆனால், ராஜேந்திரன் வழக்கம் போல் வீடு திரும்பவில்லை. டாக்ஸியிலே வந்தான். நண்பனின் உதவியோடு வண்டியினின்று இறங்கி வீட்டினுள் சென்றான். அவனால் பேசக் கூட முடியவில்லை. படுக்க வேண்டும் என்று ஜாடை செய்தான். பதறிய ரேவதி படுக்கையை விரித்தாள். உடன் வந்த நண்பன் விடை பெற்றுச் சென்றான்.

‘காப்பி கொண்டு வரட்டுமா?’ என்று அழுகையால் உதடு துடிக்கக் கேட்டாள் ரேவதி. அவன் தலை அசைக்கவே, காப்பி கொண்டு வந்து கொடுத்தாள். டாக்டரிடம் போவோமா? அல்லது அவரை வீட்டுக்கு அழைப்போமா? என்று அவள் மறுபடியும் கேட்டாள்.

‘இரண்டுமே வேண்டாம். எனக்கு இப்போது ஒன்றும் இல்லை. வெறும் பலவீனம் தான். படபடவென்று வந்தது. இப்பொழுது சரியாகிவிட்டது. நீ மனத்தை அலட்டிக் கொள்ளாதே’. என்று நலிந்த குரலில் சொன்னான் ராஜேந்திரன்.

‘ரேவதிக்கு கவலை விட்டுப்போமா? இந்த விஷயத்தில் இவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பது சரியன்று’ என்று முடிவு கொண்டாள். கோவிலுக்குப் போகலாம் என்று இருந்தேன்’ என்றாள் மெதுவாக.

ராஜேந்திரன் வியப்புத் தோன்ற அவளை நோக்கினான். இதழ்க் கடையில் குறும்பு நகை நெளிய, ‘கோயிலுக்கா!...நீயா?... என்றான். ‘உலகத்தின் ஒன்பதாவது அதிசயம் என்றால் அது என் ரேவதி ஆலயம் தொழுவதுதான்!’ என்றவன், ‘ஏன்? இப்பொழுது என்ன தடை? போய் வாயேன்!’ என்று தன் பேச்சை முடித்தான்.

ரேவதி நெய்யும் திரியும் கையில் ஏந்திப் பையைப் பையத் தெருவிலே நடந்தாள். சுகுணா மூலம் சோதிடர் கொடுத்த முன்னறிவிப்பை எண்ணினாள். சோதிடம் பொய்யில்லை என்று எண்ணினாள். தேவியின் ஆலயத்தை நண்ணினாள். நம்பிக்கை அவள் உள்ளத்தில் வேர் விட்டது. முளை விட்டது. மளமளவென்று வளரலாயிற்று.

கணவன் தடுத்தாலும் கேளாமல் முதல் நாள் அன்றே ஆலயத்திலிருந்து திரும்புகிறபோது குடும்ப டாக்டர் ராமசந்திரனை அவள் கூட்டி வந்தாள். அவர் ராஜேந்திரனைப் பரிசீலனை செய்துவிட்டுப் பழைய பல்லவியையே பாடினார். ‘உடம்பில் ஒரு கோளாறும் இல்லை.’

கேட்டுக் கேட்டு அலுத்துப் போன பல்லவி. ‘ஜெனரல்-வீக்னஸ்’ உச்சி போட்டார். மிக்ஸ்சரும் மாத்திரையும் அனுப்புவதாகச் சொல்லிச் சென்றார்.

அன்று முதல் ரேவதி மிகுந்த பக்தியுடனும் சிறந்த முறையுடனும் ஆலயம் சென்று தேவியை வழிபடலானாள். ஆனால் பலன் நேர்மாறாக இருந்தது.

மூன்றே நாட்கள்! டாக்டரின் மாத்திரை, மிக்ஸர், ஊசி அனைத்தையும் பொருட்படுத்தாமல் ராஜேந்திரனின் உடல் நிலை படிப்படியாக மோசமாகிவிட்டது. இனி வீட்டிலே வைத்துக் கொண்டிருப்பது அவ்வளவு சரியன்று என்று டாக்டரே சொன்ன பிறகு என்ன செய்வது? ரேவதி ராஜேந்திரனை மருத்துவ விடுதியில் சேர்த்தாள். அங்கே பெரிய பெரிய மருத்துவ நிபுணர்கள், விலை உயர்ந்த மருந்து வகைகள், வினாடிக்கு வினாடி கவனிக்க ஏராளமாக சிப்பந்திகள்.

ரேவதிக்கு ஒரு பக்கம் கவலை; மற்றொரு பக்கம் நிம்மதி. கணவனின் உடல் நிலை குறித்து உள்ளம் கவன்றாலும் சரியான இடத்திலே சேர்ந்திருப்பது குறித்துச் சற்றே நிம்மதி. காலையிலும் மாலையிலும் ஆலயம் சென்று அதிகமான நேரத்தை அங்கே செலவிடலானாள். தேவியின் திருவடிகளை மனத்திலே பதித்துத் திருவருள் வேண்டித் தவமே கிடந்தாள். நாட்கள் சென்று கொண்டிருந்தன.

**

ஒரு நாள் காலை நேரம். அவள் வழக்கம் போல் நம்பிக்கையின் சன்னிதியிலே நின்று ஆர்வத்துடன் அருள் முகம் நோக்கி மனமுருகிப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது…

திடீரென்று பின்புறத்திலே ஓர் ஆரவாரம். ரேவதி தவ நிலை கலைந்து திரும்பிப் பார்த்தாள். பரங்கிப்பழம் போல் சிவந்த மேனியும், சந்திர மண்டலம் போல் விளங்கும் முகமும், தலை நிறைய நரை முடியும், நுதல் நிறை குங்குமமுமாய், ஐம்பது ஆண்டுகளைக் கடந்த மூதாட்டி ஒருத்தி தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் பின்னாலே விரைந்து வந்தவர்கள் அவளை அணுகிப் பற்றிக் கொண்டனர்.

‘விடுங்கள்! விட்டுவிடுங்கள் என்னை! அங்கே நிற்கும் கருங்கல்லை என் கைக் கல்லால் அடித்து உடைத்துவிட்டுத் தான் மறுவேலை!’ கிழவி திமிறினாள்.

அப்போதுதான் ரேவதி கவனித்தாள். கிழவியின் கையிலே கல் ஒன்று இருந்தது. அவள் அருகிருந்தோர் அதைப் பிடுங்கிக் கொண்டனர். உடனே கிழவி இரு கைகளாலும் மடேர், மடேர் என்று தலையில் அறைந்து கொண்டாள். இடையிடையே தேவியின் புறமாகக் கைகளை நீட்டி, ‘நீ தெய்வமா? உனக்கொரு பூஜையா?’ என்று பல்லைக் கடித்தாள்.

‘தெய்வம் என்று தான் நம்பி வழிபட்டேன். குழந்தையையும் உன் காலடியில் தள்ளினேன். பணத்தை பணம் என்று பார்த்தேனா? உன்னைத் தவிர வேறு ஒன்றை நினைத்தேனா? என்னுடைய பொருளையும் வழிபாடுகளையும் கணக்கின்றி ஏற்றுக் கொண்டு என் தலையிலே கல்லைத் தூக்கிப் போட்டு விட்டாயே! இனி எனக்கு வாழ்வென்ன? வகையென்ன? என்றவள் ‘பட்பட்’ என்று முகத்திலும் அறைந்து கொண்டாள். அந்தோ! அறைகள் சில வாயிலும் விழ, பற்கள் தெறித்து ரத்தம் பீறிட்டது! அங்கே பெரும் கூட்டமும் கூடிவிட்டது.

ரேவதி உடம்பைச் சிலிர்த்துக் கொண்டாள். அதே நேரத்தில் அர்ச்சகர் அம்மனிடம் தீபாராதனைத் தட்டைச் சுற்றினார். ரேவதி அம்மனைத் திரும்பிப் பார்த்தாள். அவள் உள்ளம் கொதித்தது. இயல்பாகக் கரங்கள் கூம்ப இணைந்தன. அவள் வலிய அவற்றை உதறினாள். ‘சே! என்ற ஒரு சொல் அவளிடமிருந்து தெறித்து விழுந்தது. இழிவு தோன்ற அம்பிகையை ஒரு முறை பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அங்கிருந்தும் அகன்றாள்.

**

மாலையில் அவள் ஆஸ்பத்திரி சென்ற போது அன்றுவரை இல்லாத நற்செய்தி அங்கே காத்திருந்தது. முதல் நாள் வரை நடமாட்டம் அற்றிருந்த ராஜேந்திரன் அப்பொழுது கட்டிலிலே அமர்ந்திருந்தான். சாளரத்தின் வழியே ரேவதி வருவதைப் பார்த்ததும் எழுந்து எதிர் கொண்டு வராந்தாவுக்கு வந்து நின்றான்.

அவள் அவனை அணுகியதும், அவன் அவள் தோள் மீது தன் கரத்தை வைத்து, ‘ரேவதி இன்று காலை எட்டு மணி அளவில் என்னுடைய நோய் ‘பட்’டென்று தெறித்துவிட்டது. அடாடா! எப்பேர்ப்பட்ட டாக்டர்கள்! எத்தகைய மருந்துகள்! எவ்வளவு கவனிப்பு என்று வாய் நிறையச் சிரிப்பைச் சிந்தியபடி சொன்னான்.

ரேவதிக்குத் தன்னுடைய கண், காது முதலிய புலன்களிடமே ஐயம் பிறந்தது. ஆயினும் காண்பதும் கேட்பதும் உண்ஐ என்ற உறுதியும் நிலைத்தது.

‘இன்று காலை எட்டு மணி அளிவிலா?..’ என்று அவனிடம் கேட்டுவிட்டு, உள்ளுக்குள் ‘ஆம்’ எட்டு அளவில் தான் என்று சொல்லிக் கொண்டாள். மேலும் சற்று நேரம் கணவனோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு வீடு திரும்பினாள்.

**

நாள் தவறாமல் வந்து ராஜேந்திரனின் உடல் நலம் பற்றி விசாரித்து, ரேவதிக்கு வேண்டிய உதவிகளைப் புரிந்து வந்த சுகுணா, மறுநாள் வழக்கம் போல வந்தபோது ரேவதி அவளிடம் தன் கணவனின் உடல் நலம் பற்றிப் பலுக்கிப் பலுக்கிச் சொன்னாள். ‘அனேகமாக இன்னும் ஒரு வாரத்தில் அவர் வீடு வந்து சேர்ந்து விடுவார். தெம்பும் திடமுமாய் வளைய வருவார்’ என்று அவள் சொன்னபோது தன் உடன் பிறந்த தமையன் ஒருவன் சாவிலிருந்து மீண்டதைப் போன்ற ஒரு மகிழ்ச்சி சுகுணாவுக்கு ஏற்பட்டது. ‘தேவியின் திருவருள் பழுதுபடுமா?’ என்றவள் அந்த இடத்திலேயே தேவையை நினைத்து கரம் குவித்தாள்.

ரேவதி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.

**

ஒரு வாரம் சென்றது. நாளுக்கு நாள் கணவனிடம் தோன்றி வரும் உடல்நல முன்னேற்றம் கண்டு ரேவதி பூரித்துப் போனாள். அறிமுகம் கொண்ட நாள் முதல் அவனிடம் கண்டறியாத சுறுசுறுப்பையும், உற்சாகத்தையும் உல்லாசத்தையும் கண்டு குதூகலம் அடைந்தாள். கடற்கரை, பூங்கா, நாடகம், திரைப்படம் என்று இது நாள்வரை இருவரும் இணைந்து எங்குமே சென்றறியாத குறை தீர, இனி உல்லாசமாக எங்கும் செல்லலாம். இன்பம் நுகரலாம் என்று எண்ணி எண்ணி மகிழ்ந்தாள்.

அன்றைக்கு எட்டாம் நாள். ராஜேந்திரன் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டான்.

ரேவதியும் அவனுடம் ‘டாக்ஸி’ ஏறி வீட்டுக்குப் புறப்பட்டனர். அப்போது அவர்களிடையே தோன்றி வளர்ந்த குதூகல உணர்விற்கு எல்லையே இல்லை.

‘ரேவதி! இன்றைய நம்முடைய உல்லாச நிலைக்குக் காரணம் யார் தெரியுமா? உன்னுடைய அருமைத் தோழி சுகுணாதான். பிடிவாதமாக அவள் சோதிடரை அழைத்து, ஜாதகம் பார்த்து, உன்னைத் தேவி வழிபாட்டில் ஈடுபத்தாமல் இருந்திருந்தால் நமக்கு இன்று இந்த நிலை ஏது? அந்தக் கதைகளையும், அதன் பின்னர் நாள் தோறும் நீ ஆலயம் சென்று வழிபட்டு வந்ததையும் கூறக் கூற, அதே நேரத்தில் என் உடல் நிலை முன்னேற்றம் காணக் காண, என் உள்ளமெல்லாம் சகோதரி சுகுணாவையே வாத்திற்று. வள்ளுவர் சொன்னபடி கடவுளின் திருத்தாளைப் பற்றியவர் நன்மையைத் தவிர வேறு காண்பதில்லை; இல்லையா?’

ரேவதிக்கு உள்ளுக்குள் சிரிப்பு குமிழியிட்டது. அவள் அதை அடக்க முயன்றாள். ஆயினும் அதன் சுவடு அவள் இதழ்க் கடையில் சற்றே தெரிந்தது.

‘என்ன ரேவதி?’

‘ஒன்றும் இல்லை’..

‘எதற்கு சிரித்தாய்?’

‘திடீரென்று உங்கள் உள்ளத்தில் வளர்ந்துவிட்ட தெய்வ நம்பிக்கையை நினைத்துத் தான்’.

‘திடீரென்றா?..யாரைப் பார்த்து அவ்வாறு சொல்கிறாய்? என் உள்ளத்தில் எப்போதும் தெய்வ பக்திக்குப் பஞ்சமே இருந்ததில்லை. திடீரென்று மாறியவள் நீ தான். சாஸ்திரம் பொய், சோதிடம் பொய், தெய்வம் பொய்! என்று பேசத் தொடங்கினாயானால், அப்பப்பா! அப்பேர்ப்பட்டவள் கொண்டவனின் உயிருக்கு ஊறு நேருமோ என்றதும் தெய்வத்தை வேரொடு கல்லத் தொடங்கிவிட்டாய்! எப்படியானாலும் அந்தத் தெய்வம் உன் பங்கிலே அருளையே பாவித்துவிட்டது.’

கணவனின் இந்தப் பேச்சு அவள் மனக் கண் எதிரே கணப்பொழுதில் அந்த அப்பாவிக் கிழவியைக் கொண்டு வந்து நிறுத்திற்று. உடனே அவள் நெஞ்சம் எரிமலையாயக் குமுறிற்று. குரலில் நிஷ்டூரம் தோன்ற, ‘உம், உம்! பாலிக்கும், பாலிக்கும்!..தெய்வம் என்ற ஒன்று! அதனிடம் சக்தி என்று ஒன்று!..அதிலே அருள் வேறு; மருள் வேறு!...கதை!’ என்று சீறினாள்.

**

டாக்ஸி பல வீதிகளைக் கடந்து பல தெருக்களைக் கடந்து, அவர்கள் இல்லத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

ஆலயத்தின் எதிரே டாக்ஸி வந்த போது பக்கவாட்டில் வந்து குறுக்கிட்டது ஒரு லாரி. டாக்ஸி அதிலே மோதிற்று. இமைப்பொழுதுக்குள்…

டாக்ஸி ஒரு புறமாகத் தூக்கி எறியப் பெற்றது. அதனுள்ளிருந்து வெளியே விழுந்த ரேவதி அரும்பாடுபட்டுத் தலை தூக்கிப்பார்த்த போது தாறுமாறான நிலையில் ராஜேந்திரன் கிடப்பதைக் கண்டாள். அவன் மீது செந்நீரைக் கண்டதும், ‘ஆ’ என்று பதறி எழுந்தாள். தன் காயங்களையும் வலியையும் மறந்து அவன் அருகில் விரைந்தாள். அங்கே அவளுடைய ‘அவன்’ இல்லை. அவனுடைய உடல் தான் கிடந்தது.

‘ஐயோ…..’ என்று வீரிட்ட வண்ணம் நின்ற நிலையிலே தடாலென்று அவன் உடல் மீது அவள் விழுந்தாள். எதிரே இருந்த ஆலயத்தினுள் அருள் வடிவாய் நின்று கொண்டிருந்த தேவியை அவள் காணவில்லை. தேவி அவளைக் கண்டாள்.

நடந்தது, நடப்பது, நடக்கப் போவது அனைத்தையும் எண்ணி நகைக்கும் நகைப்பு….அன்றும் உள்ளது. இன்றும் உள்ளது. என்றும் உள்ளது.

‘பாவம் ரேவதி!’ என்று சுகுணா சொல்வாள்; தேவி சொல்வாளா?’

(தினமணி கதிர் 27.5.1966 இதழில் வெளிவந்த சிறுகதை)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com