முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!ரூபாய் மதிப்பு சரிவால் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு தள்ளிப்போக வாய்ப்புகடன் வாங்குவதை 21% குறைத்த தமிழ்நாடு அரசு!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக பெண் கவுன்சிலர் உள்பட 2 பேர் மீது வழக்குஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் இன்று இந்தியா வருகை!ரொனால்டோவை 30 நாள்களுக்கு இடைநீக்கம் செய்த போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு

கல்யாணம் கதவைத் தட்டுகிறது! - நவீனன்

உப்பிலி சொன்ன அந்தச் செய்தி உலகநாதத்தை ஓர் உலுக்கு என்ன, இரண்டு உலுக்கல் உலுக்கின. ஆங்கில தினசரி பத்திரிகை ஒன்றில் ஆழப்பதிந்திருந்த தன் விழிகளை அவர் வெறுப்போடு திருப்பி, ‘பாரு, இப்படி வாயேன்!

Updated On :

உப்பிலி சொன்ன அந்தச் செய்தி உலகநாதத்தை ஓர் உலுக்கு என்ன, இரண்டு உலுக்கல் உலுக்கின. ஆங்கில தினசரி பத்திரிகை ஒன்றில் ஆழப்பதிந்திருந்த தன் விழிகளை அவர் வெறுப்போடு திருப்பி, ‘பாரு, இப்படி வாயேன்! உன் பிள்ளையாண்டான் என்ன சொல்கிறான் என்று கேளேன்!’ என்று கூடம் கிடுகிடுக்கக் கூவினார்.

பாரு என்னும் பார்வதி கொஞ்சம் நிதானம். உலகநாதம் பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டு முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் புதிய ஆசாபாசங்களிலோ நவ நாகரிகச் சூழல்களிலோ சற்றும் சிக்காதவள். அவளுக்கென்று பிரத்யேகமான அமைந்திருந்த விசுக் விசுக் நடை நடந்து வந்து சேர்ந்தாள்.

‘என்னவாம்?’ என்று பார்வதி நடந்து வந்த சிரமத்தோடு பெருமூச்செறியக் கேட்டாள்.

‘உன்’ என்பதை உலகநாதம் மீண்டும் ஓர் அழுத்து அழுத்தி, ;அருமந்தச் செல்வன் சொல்வதைக் கேட்டுக் கொள்!’ என்றார். அவர் ஏற்படுத்திய பரபரப்பைப் பார்த்தால் உப்பிலி அமெரிக்காவிற்குச் சென்று ஓர் அப்போலாவில் ஏறி, சந்திரமண்டலத்திற்குப் போகும் ஆசையைச் சொல்லிவிட்டது போல் இருந்தது!

ஆனால் அது போன்ற வெளி உலக வாசனை எதையும் முகர்ந்திராத அவனது அன்னை பார்வதி தனக்கே உரிய நிதானத்தோடு, ‘என்னடா உப்பிலி, என்ன?’ அதிகாலையில் உன் அப்பா ஏன் இப்படி அலறுகிறார்?’ என்று கேட்டாள்.

உப்பிலி தன் கழுத்தில் கிடந்த மெல்லிய மைனர் செயினை இழுத்து உதடுகளுக்கு நடுவே செருகி அதை மெல்லத் தொடங்கினான்/ ஒரு கை அவனது கிராப்புத் தலையை அமுக்கி விட்டுக் கொண்டது. ஏதோ சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்டதைப்போல இந்த அப்பா அபாயச் சங்கு ஊதி அம்மாவைப் பாதுகாப்புக்கு அழைத்ததும் அம்மா வந்து தன்னை விசாரிக்கும் தோரணையும் அவனுக்குத் துளிக் கூடப் பிடிக்கவில்லை.

அப்படி என்னதான் சொல்லிவிட்டான் உப்பிலி?

‘டு டே எனக்கு இருப்பதெட்டு வயது பூர்த்தியடைகிறது. ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்? எனக்குக் கலியாணம் ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்? எனக்குக் கலியாணம் செய்து வைத்தால் என்னவாம்?’ – இதுதான் அவன் கேட்டது.

அதற்கு ஓர் கூச்சலா? கூக்குரலா? அவசர அழைப்பா? உப்பிலி கேட்டுக் கொண்டான்.

அம்மா கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டான். கடைசியில் உலகநாதம் பிள்ளையே அதை விண்டுரைக்க வேண்டியிருந்தது. அவன் சொன்னதை அவர் மிகவும் இளக்காரமாக ஒலிபரப்பினார். ‘உன்னுடைய திருக்குமாரனுக்குத் திருக்கலியாணம் செய்து கொள்ள வேண்டுமாம். இன்றைய முக்கியமான நியூஸ்!’

பார்வதியின் குரல் உலகநாதம் எதிர்பாராத முறையில் ஒலித்தது. ‘அவன் அப்படி என்ன கேட்கக் கூடாததைக் கேட்டு விட்டான்? ஏன் உப்பிலிக்கு என்ன அழகில்லையா? கலியாணம் செய்து கொள்ள வயசில்லையா?’

பார்வதி அப்படிப் பேசுவாள் என்று உப்பிலியின் தந்தை சிறிது கூட எதிர்பார்க்கவில்லை. பொறுப்பில்லாமல், எந்த வேலையில் வைத்தாலும் மூன்று மாதக் கெடுவில் வீட்டிற்கு வெற்றிகரமாக வந்துவிடும் தன் மகனுக்கு ஒரு கலியாணம் செய்து வைக்க உலகநாதம் விரும்பவில்லை. காலையில் வீட்டை விட்டுப் போனால், வீடு திரும்புவதற்குள் ஏதாவது வம்புச் சண்டை போடாமல் அவன் இருப்பதில்லை. ‘ஆள் அழகாக இருந்தால் மட்டும் போதுமா? பொறுப்புணர்ச்சி ஏற்பட வேண்டாமா? என்று ஆத்திரமும் எண்ணமும்தான் உப்பிலியின் தந்தையிடம் வெறுப்புணர்ச்சியை வளர்த்திருந்தன.

அவனுக்குக் கலியாணம் செய்து வைத்துஇவ்ட்டால் அவர் எதிர்ப்பார்ப்பது எல்லாம் வந்துவிடும் என்பது பார்வதியின் எண்ணம். ஆனால் தன் கணவனிடம் மனம்விட்டுச் சொல்ல அவளுக்கு அவ்வளவாகத் தைரியம் இல்லை. எப்பொழுது தன் திருமணப் பேச்சை உப்பிலி கிளப்பினாலும் சில கேலிக் குரல்கள் எழும்பி அவனை எரிச்சலோடு அங்கிருந்து போகச் செய்துவிடும். அப்பாவின் ஒரு குரல், அண்ணன் செந்திலின் கேலிப் பேச்சு, அவனுக்கு மனைவியாக வாய்த்திருக்கும் மாலதியின் சிறு சிரிப்பு எல்லாம் சேர்ந்து கூடத்திலே எதிரொலிக்கும்.

உப்பிலி நினைத்தால் படு சண்டை போட்டுவிட்டு பல நாட்கள் வீட்டுப் பக்கமே எட்டிப் பாராமல் போய்விடுவான். அப்படிப்பட்ட உள்ளம் அவனுக்கு உண்டு. ஆனால் இருட்டுவதற்குள் ஒரு தடவையாவது தன் அன்னையைப் பாராமல் அவனால் இருக்க முடியாது.

அவனுக்கு ஒன்று புரியவில்லை. தன் அண்ணன் செந்தில் திடீரென்று ஆபிஸிலிருந்து வீடு திரும்பியதும் தன் ஆசையை ஒரு நாள் அறிவித்தானே? அந்த உரிமை தனக்கு இல்லையா? ஏன் தன்னுடைய கலியாணப் பேச்சை எடுத்தால் ‘சிண்டிகேட்’ போல் சிலர் சேர்ந்துகொண்டு எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டும்? அதுதான் அவனுக்குப் புதிர்!

அண்ணன் செந்தில் வேலை பார்க்கும் ஆடிட்டர் ஆபிஸைச் சேர்ந்த ஒரு பெண்ணை – மாலதியை – தான் மணக்கப் போவதாக கால்கள் பின்ன அறிவிக்கவில்லையா? எவ்விதமான சீர் வகையும் இன்றி ஏற்றுக் கொண்டு விடவில்லையா? நான் அப்படியெல்லாம் திருமண ஸ்டண்ட் செய்யாமல், முறையாக ஆவலை வெளிப்படுத்தியதற்கு அப்பா என்ன சீறல் சீறுகிறார்? உப்பிலி அதை நினிஅக்க நினைக்க, கன்னங்கள் உப்பின மத்தாப்பூ இட்டிலி போல.

தன் மகன் உப்பிலி வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொள்ளவேண்டும் என்பது உலகநாதத்தின் திட்டமில்லை. ஏதாவதொரு வேலையில் பொறுப்போடு அமர்ந்து, ஊரில் நல்ல பிள்ளை என்ற பெயரை எடுத்து, கண்ணியமாக அவன் மாறுகிற வரை கலியாணப் பேச்சே எடுக்கக் கூடாது என்றுதான் அறிவித்திருந்தார்.

உப்பிலியின் வாதம், வேறுவிதமாக இருந்தது. தான் எந்த வேலையும் பார்க்கத் தயாராக இருந்தான். ஆனால் ஏதாவது ஒரு காரணம் முளைத்து, அதிலிருந்து வம்புச் செடி வளர்ந்து, பிறகு பெரிய அளவில் மோதல்கள் விளைந்து, அவைகளுக்கு எல்லாம் அவனே கதாநாயகனாக ஆகிவிடுவது ஏனோ அப்படி நடந்துவிடுகின்றன!

தன் மீது எவ்விதமான குற்றமும் இல்லை. அது அவனுடைய கருத்து. அந்தக் கருத்தை அவனைத் தவிர மற்றவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அதுபற்றி அவன் கவலைப்படுவதும் இல்லை.

ஒரு மாதத்திற்குப் பிறகு அன்று மீண்டும் உப்பிலி தன் கலியாணப் பேச்சைத் துவக்கிய போது, உலகநாதம் அளவுக்கதிகமாக ஆர்ப்பரித்தார்.

தந்தையைத் தவிர வேறு யாராவது அப்படிச் செய்திருந்தால் உப்பிலி தமிழ்ப்பட வில்லனைப் போல் மாறியிருப்பான். ஆனால் அப்படிப்பட்ட கோபதாபங்களை அவன் அவருக்கு முன் காட்டாமல் அடக்கிக் கொண்டது ஆச்சரியம் தான்!

அன்னை பார்வதி அவனைச் சமாதானப்படுத்துவது போல், ‘உப்பிலி. அப்பாவின் சுபாவம் உனக்குத் தெரியாதா? கலியாணத்துக்கு உனக்கு என்று ஒருத்தி எங்காவது பிறந்துதான் இருப்பாள். இப்பொழுது வேலைக்கு நேரமாகிவிட்டது, புறப்படு’ என்றாள்.

உப்பிலி ஒருவிதமான உக்கிரமாக தந்தையை நோக்கிவிட்டுத் தரையில்பாதங்கள் சப்திக்க சைக்கிளில் தாவியேறிக் கிளம்பினான். அவன் அங்கிருந்து போன பிறகு கூட உலகநாதம் தன் பிள்ளைக்கு கேலி கலந்த கோபம் குறையவில்லை. ‘ஆமாம் உப்பிலிக்கு ஒருத்தி எங்காவது பிறந்திருபாள். பிறந்துவிட்டோமே என்று குவா குவா என சதா அழுது கொண்டிருப்பாள்!’

2

சிடி சினிமாத் தியேட்டரில் உப்பிலி ஒரு ரூபாய் பதினான்கணா கவுண்டரில் கம்பீரமாக உட்கார்ந்து டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தான். அந்தத் தியேட்டரில் அவனுக்குத் தற்காலிகமாக வேலையாகியிருந்தது. வழக்கம் போல ரூபாய் நோட்டுகளை அலட்சியமாக வாங்கிப்போட்ட்டுக் கொண்டு அவன் டிக்கெட்டுகளை சர் சர்ரெப்ற்ய் ஜுழுட்க்ட்க்ய் வெளியே வீசிய போது ஓர் அழகிய பெண், கலகலவென்று கை வளையல்கள் குழுங்க, ஐந்து ரூபாய் நோட்டை நீட்டி டிக்கட் கேட்டதை நிமிர்ந்து பார்த்தான்.

அந்த அழகும் குரலும் அவனைக் கவர்ந்தன. இன்னொரு தடவை அவளை அவன் நோக்கினான். அந்த முகம் அவனுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். பக்கத்துத் தெருவில் ஸ்டைலாக அந்த முகத்துக்குரியவள் போவதை உப்பிலி கண்டு இருக்கிறான். அவள் பணக்கார வீட்டுப் பெண் என்று மட்டும் அவனுக்குத் தெரியும். பொதுவாக அவளைப் போன்ற செல்வந்தர் வீட்டுச் சிங்காரிகள் தமிழ்ப் படம் பார்க்க வருவதும், அவனுக்குக் கொஞ்சம் வேடிக்கையாகவே இருந்தது. இருந்தாலும் தன் கவுண்டரில் அந்த அழகிய கரம் நுழைந்திருந்த திருப்தியில் சற்று நேரம் திளைத்து இருந்துவிட்டு, வேண்டும் என்றே மீதிச் சில்லறையைக் கணக்கிட்டுக் கொடுக்கச் சிறிது தயக்கம் காட்டினான்.

சில்லறையை உடனே எடுத்து தந்துவிட்டால் அவள் கிளம்பிப் போய்விடுவாள். பதிலாக சற்றுத் தாமதமாக சில்லரையை எடுத்துப் போட்டால் அதுவரை அவளுடைய வனபுருவை விழிகளால் பருகிக் கொண்டிருக்கலாமே என்று திட்டமிட்டு அப்படிச் செய்தான்.

உப்பிலிக்கு சற்று முன் தன் வீட்டில் நடந்த நிகழ்ச்சியினால் மனம் முறுக்கிக் கொண்டு கிடந்தது. அந்தப் பெண் தியேட்டரை விட்டு வெளியே வந்தாள். விறுவிறுவென்று கைப் பையைச் சுழற்றிக் கொண்டு நடந்தாள். மேலே மோதுவதுபோல் அவளருகே வேண்டும் என்றே சிலர் நெருங்கி நடந்தார்கள். நடந்தவர்களில் ஒருவன் அவள் மீது இடிக்க ஓர் இன்ச்தான் இடைவெளியிருந்தது. அதனால் அங்கே சிறு சலசலப்பு மூண்டது. பெண் என்பதைக் கூட பாராமல் சிலர் அவளைக் கிண்டல் செய்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் ரவுடிகளாகவே காணப்பட்டார்கள்.

ஒரு பெண் அவளைச் சுற்றி ரவுடிகளின் கூட்டம். அதுவும் அந்தப் பெண் சில மணி நேரத்திற்கு முன் தன் கவுண்டரில் டிக்கெட் வாங்கிய வனப்பு மங்கை..உப்பிலி எழுந்தான். ஒரு கணம் நிற்கவில்லை. சினிமாப் படங்களில் கதாநாயகிக்கு வில்லனின் கையாள்களினால் ஆபத்து ஏற்படும் பொழுது, எங்கிருந்தோ கதாநாயகன் தாவிக் குதித்து, ‘கரெக்டாக’ அவர்களுக்கு நடுவே வந்து குதிப்பானே, அது போல உப்பிலி ரவுடிகளுக்கு நடுவே வந்து குதித்தான்!

பிறகு? அங்கே பிரமாதமான சண்டை மூண்டது. அதுபோன்ற வலுச்சண்டை என்றால் உப்பிலிக்கு பிரமாதமான கொண்டாட்டம்! ஒரு பெண்ணை ரவுடிக் கும்பலிலிருந்து காப்பாற்றவல்லவா அவன் லட்சியத் துடிப்போடு குதித்தோடி வந்திருக்கிறான். விட்டு விடுவானா? தன் வலுவான கைகளினால் நிஜமாகவே கும் கும் என்று சிலரைக் குத்தி அவளை அவர்களிடமிருந்து காப்பாற்றினான். சுமார் அரை டஜன் பேரை அவன் ஆச்சரியமாகச் சமாளித்து அவளது அனுதாபத்தைப் பெற்றான். ஒருவிதமாகக் கலாட்டாக்கள் ஓய்ந்த பிறகு அவள் அவனை ஆறுதலோடு ஒரு தடவை நோக்கி வீட்டு டாக்ஸியில் ஏறிக் கொண்டே, ‘தேங்க்ஸ்’ என்றாள்.

உப்பிலி, ‘தேவையில்லை, எங்களுடைய தியேட்டரில் பாடம் பார்க்க வருகிற பெண்களுக்கு நாங்கள் பாதுகாப்புப் கொடுக்க வேண்டும். அந்தக் கடமை உணர்ச்சிதான் உங்களுக்கு உதவியது’ என்றான்.

மீண்டும் அவள் அவனுக்கு ‘தேங்க்ஸ்’ தெரிவித்தாள். உப்பிலி சற்று நேரம் டாக்ஸியையும் அதில் ஒய்யாரமாக ஏறிச் சென்றவளையும் பார்த்துக் கொண்டே நின்றான். உள்ளே தியேட்டருக்குள் ஓடிய படத்தை விட சற்றுமுன் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் தான் அவனுக்குத் திருப்தியாக இருந்தன.

படம் பார்க்க வந்த யாரோ ஒரு பெண்ணிற்கு உதவி செய்யப்போய் அது வேறுவிதமாக முடிந்தது. அவனுக்கு அந்த தியேட்டரிலிருந்து வேலை போய்விட்டது. உப்பிலி வேண்டுமென்றே சில கலாட்டாக்களைச் செய்கிறான் என்று யாரோ தவறுதலாகத் தியேட்டர் முதலாளியிடம் சொல்ல, அவர் அதை நம்ப, அவன் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டான். அதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை. போனால் போகட்டும் போடா என்று பாடிக்கொண்டே சிவாஜி நடை நடந்து அலட்சியமாக வெளியேறினான்.

3

உப்பிலி ஓர் அச்சாபீஸில் வேலைக்குச் சேர்ந்தான். அச்சிட்டு முடிந்த ஆர்டர்களை டெலிவரி செய்வதும் அதற்குரிய பில் பணத்தை வசூல் செய்வதும் அவனுடைய வேலைகள். அவனுடைய குடும்பத்துக்கு எட்டிய உறவினர் ஒருவர் தாட்சண்யத்திற்கு கட்டுப்பட்டு அவனுக்கு அந்த வேலையை அரை மனதோடு தந்திருந்தார்.

ஒரு நாள் கலியாணப் பத்திரிகைக் கட்டு ஒன்றை டெலிவரி செய்ய அவன் சைக்கிளில் கிளம்பினான். அந்தப் பத்திரிகையின் டிசைனும் அச்சிடப் பட்டிருந்த பொன் எழுத்துக்களுக்கும் அவனை மிகவும் கவர்ந்தன. ஒன்றை எடுத்துப் படித்துப் பார்த்தான். மணமகளின் பெயர் காந்தா என்றும் மணமகனின் பெயர் செல்வராஜ் என்றும் பொன் எழுத்துக்களில் மின்னின. ‘காந்தா-செல்வராஜ்’ என்ற பெயர்களை அவன் முணு முணுப்போடு படித்துப் பார்த்துவிட்டு சைக்கிளில் விர்ரானான்.

உள்ளம் குமுறியது. ஊரில் யார் யாருக்கோ கலியாணம் நடக்கிறது. எனக்கு மட்டும அதைப் பற்றிய பேச்சையே காணோம் என்று அவன் பொருமிக்கொண்டே சைக்கிளைச் செலுத்தினான். காந்தாவுக்கு எதிரில் அச்சிடப்பட்டு இருந்த செல்வராஜ் என்ற பெயருக்குப் பதிலாக தன் பெயரை கற்பனையில் அச்சிடப்பட்டதாகக் கருதி ஒரு தடவை உச்சரித்துக் கொண்டான். அது அசட்டுத்தனம் என்று அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தாலும் அதே அசட்டுதனத்திலிருந்து அது போன்ற ஓர் ஆசை முளைக்கத்தான் முளைப்பேன் என்றது.

அந்த வீட்டு வாசலில் போய் சைக்கிளிலிருந்து இறங்கினான் வாசலில் உப்பிலி. ‘சார்’ என்று கூப்பிட்டபொழுது உள்ளிருந்து வந்த பெண் அவனை வியப்படைய வைத்தாள். அதே வியப்புஅவளுக்கும் உண்டாயிற்று.

உப்பிலி எடுத்துக் கொடுத்த கலியாண அழைப்பிதழ்களை அவள் கைகளில் வாங்கிக் கொண்டே விழிகளில் வியப்பு ஏற, ‘நீங்களா?’ என்று கேட்டாள்.

‘ஆமாம்,’ என்று முக மலர்ச்சியோடு பேசிய உப்பிலி அவளை அடையாளம் கண்டு கொண்டான். முன்பு ஒரு நாள் சிடி சினிமாத் தியேட்டரில் ரவுடிகளுக்கு நடுவே சூழப்பட்டிருந்த அதே பெண் காந்தா இவள் தான் என்று தெரிந்து கொண்டான்.

காந்த உற்சாகமாகக் குரலெழுப்பினாள். ‘டாடி! டாடி!’

பறங்கிப் பழம் போன்ற தலை, அதே வண்ண உடம்பு, கண்ணியமான ஒரு மூக்குக் கண்ணாடிக்காரர் வெளியே வந்தார். மகள் காந்தாவையும் அருகில் நின்றிருந்த வாலிபன் உப்பிலியையும் மாறி மாறி நோக்கினார்.

‘டாடி, சிடி சினிமா ‘அப்பேர்’ பற்றி சொன்னேனே. இவர்தான் அன்று என்னை ரவுடிகளிடமிருந்து காப்பாற்றியவர்!’ என்று குதூகலமாகக் கூறினாள் காந்தா.

‘அப்படியா!’ என்று காந்தாவின் தந்தை கேட்டுவிட்டு உப்பிலியை அன்போடு உள்ளே வருமறு அழைத்தார். அவன் சைக்கிளில் சாய்ந்து நின்றபடியே ஒரு பரவாயில்லை போட்டான்.

‘இவர்தான் மேரேஜ் இன்விடேஷன்ஸ் அச்சிட்டுக் கொண்டு வந்திருக்கிறார்’ என்று காந்தா தன் கையிலிருந்த பார்சலைத் தந்தையிடம் கொடுத்தாள். அவர் அதைப் பிரித்துப் பார்த்துவிட்டு, ‘தாங்கள் அச்சாபீஸ் வைத்திருக்கிறீர்களா? வெரி நீட் பிரிண்டிங்’ என்றார்.

‘என்னுடைய சொந்த அச்சாபீஸ் என்றே சொல்லலாம்’ என்று உப்பிலி பெருமையை விட்டுக் கொடுக்காமல் பேசினான். ஏதோ கலியாண அழைப்பிதழ்களை டெலிவரி செய்துவிட்டுப் போகிற சாதாரண ஊழியனைப் போல அவருக்கு முன்னால் நடந்துகொள்ள அவன் விரும்பவில்லை. காந்தாவிற்கு முன் தன் மதிப்பை உயர்த்திக் கொள்ளவேண்டும் போல ஓர் எண்ணம் அவனுக்கு உதித்தது.

காந்தாவும் சேர்ந்து வற்புறுத்தவே உப்பிலி வீட்டிற்குள் போனான். சோபாவில் சற்று நேரம் உட்கார்ந்துகொண்டான். பிஸ்கெட்டும் தேநீரும் கொடுத்து காந்தா உபசரித்தாள்.

அந்த வீடு இருந்த தோற்றமும் அவர்களுடைய தோரணைகளும் உப்பிலிக்கு பெரிய இடம் என்றே தோன்றியது. என்றோ சினிமாக் கொட்டகையில் சிறிது நேர ஸ்டண்ட் செய்ததற்கு நன்றிக் கடனாக இப்படி ஓர் உபசரிப்பா? அவனுக்கு மட்டில்லா மகிழ்ச்சி பொங்கியது.

உப்பிலியைப் பற்றி சில வவரங்களைக் காந்தாவின் தந்தை விசாரித்தார். உலகநாதத்தின் இரண்டாவது மகன் என்பதை அவன் தெரிவித்த பொழுது, ‘எந்த உலகநாதம்’ என்று அவர் தீர விசாரித்து, கடைசியில் உப்பிலியின் தந்தை அவருக்குத் தெரிந்தவராகவே இருப்பதைக் கண்டார்.

4

வாரம் ஒன்று சென்றது. ஒரு நள்ளிரவு நேரத்தில் உப்பிலியின் வீட்டுக் கதவை யாரோ படபடவென்று தட்டினார் நாதம் பிள்ளை. சிறிது திடுக்கிட்ட அவர் வாசற்பக்கம் பார்த்தார். வெளியே காந்தாவின் தந்தை நின்று கொண்டிருந்தார்.

‘என்னைத் தெரிகிறதா உலகநாதம்? நீங்கள் சேலத்தில் காட்டிலகா அதிகாரியாக இருந்த பொழுது அங்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்தேனே? அது கிடக்கட்டும், உங்களால் முக்கியமான உதவி எனக்கு ஆகவேண்டியதிருக்கிறது. என் குடும்ப கெளரவத்தை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்’ என்று குரல் தழுதழுக்க பேசினார் காந்தாவின் தந்தை.

உலகநாதம் பிள்ளைக்கு ஒன்றும் புரியவில்லை. தன் நண்பர் அவர் என்பது மட்டும் நினைவிற்கு வந்தது. அதே சமயம் புரியாத விழிப்போடு நின்று கொண்டிருந்த அவரிடம் நெருங்கிப் பேசினார் காந்தாவின் தந்தை.

விடிந்தால் என் மகள் காந்தாவிற்குத் திருமணம். மாப்பிள்ளை செல்வராஜும் அவனைச் சேர்ந்தவர்களும் வந்திருக்கிறார்கள். திடீரென்று திருமணம் நின்றுவிட்டது. மாப்பிள்ளையின் தந்தை பிடித்த பிடிவாதமே காரணம்’ என்று அவர் மனத்தாங்கலோடு பேசினார்.

இன்னும் அதே புரியாத நிலையில் உலகநாதம் இருந்தார். அவர் வீட்டுத் திருமணத்திற்குத் தான் உடஹ்வ என்ன இருக்கிறது என்று அவருக்கு விளங்கவில்லை! சஸ்பென்ஸ்!

நடுநிசியில் அவர்கள் இருவரும் பேசியதிருலிருந்து சில விவரங்கள் வெளிப்பட்டன. காந்தாவிற்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த செல்வராஜ் அமெரிக்கா போன்ற மேல் நாடெல்லாம் சென்று வந்தவன். அவனது தந்தையோ பழங்கால நாகரிகத்தைப் பெரிதாகக் கருதுபவர். நிச்சயதார்த்தத்தின் பொழுது தனக்கு நமஸ்கரிக்க வந்த பெண்ணின் மூக்கில் இரட்டை மூக்குத்திகள் போடப்படவில்லை என்பதை அவர் ஒரு குறையாகக் கருதி, மூக்கின் இரு பக்கங்களிலும் உடனே வைர மூக்குத்திகள் போடப்பட வேண்டும். இல்லையென்றால் தன் மகன் தாலி கட்டமாட்டான் என்ற திடீர் நிபந்தனையை விதித்தார்.

அந்த ஒரு சிறு குறைக்காகக் கலியாணம் நின்று போகும் என்று மாப்பிள்ளையின் தந்தை மூர்க்கத்தனமாகப் பேசியது காந்தா குடும்பத்தாருக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. பிறகு ஒரு சமயம் இரட்டை மூக்குத்திகள் போட்டு விடுவதாக காந்தாவின் தந்தை எவ்வளவோ எடுத்துச் சொன்னார். ‘திருமணம் நடக்க இன்னும் சில மணி நேரமே இருக்கிறது. அதற்குள் மூக்குக் குத்துவதோ வைர மூக்குத்திகள் அணிவிப்பதோ நடக்காத காரியம்’ என்று அவர் பணிவோடு சொல்லிப் பார்த்தார்.

சம்பந்தி கேட்கவில்லை. பிடிவாதம் நீடித்தது. மேனாடு சென்று பல பண்பாடுகளைப் பார்த்துத் திரும்பி வந்த மாப்பிள்ளை செல்வராஜ் இது போன்ற அற்பக் காரணங்களுக்காக கலியாணம் நின்று போகவேண்டாம் என்று தந்தையிடம் சொல்லாமல் பேசாமல் இருந்தான்.

அதைக் கண்ட காந்தாவிற்கும் பொறுமை பறந்தது. நிச்சயதார்த்த மணையில் அதுவரை அடக்க ஒடுக்கமாக உட்கார்ந்திருந்தவள், வெறி பிடித்தவள் போல் துள்ளி எழுந்தாள். அனைவருடைய காதுகளிலும் விழும்படி பேசினாள். ‘அப்பா, இந்த சம்பந்தம் வேண்டாம்! அவர்கள் என்னைவிட என்னுடைய வைர மூக்குத்திகளைத்தான் பெரிதாக மதிக்கிறார்கள். அந்த இடத்தில் நான் நிம்மதியாக வாழ முடியாது. வேண்டாம் இந்தச் சம்பந்தம்!’

பொங்கி வந்த கண்ணீர் கழுத்தில் கிடந்த ரோஜா மலர் மாலை மீது வழிந்தோட காந்தா உள்ளே ஓடிவிட்டாள்.

இந்த நிகழ்ச்சியை அவர் உலகநாதம் பிள்ளையிடம் துன்பம் தோய்ந்த குரலில் தெரிவித்துவிட்டு அவரது இரு கைகளையும் இழுத்துப் பற்றிக் கொண்டார். மேலும் சொன்னார் ‘நண்பரே! என் மகளின் திருமணம் நின்று போனதைக்கண்டு ஊரார் ஏதாவது பேசுவார்களே என்று கூட நான் அச்சப்படவில்லை. இவ்வளவு கீழ்த்தரமாக அவர்கள் நடந்து கொண்டார்களே என்று வேதனைதான் என்னை வாட்டுகிறது. அதற்குரிய பணத்தை அவர்களிடம் கொடுத்துவிடலாமா என்று கூட எண்ணினேன். காந்தா தடுத்து விட்டாள்.

‘அவள் என்னிடம் திடீரென்று ஒரு கருத்தை தெரிவித்தாள். அதற்காகவே இந்த நள்ளிரவில் ஓடிவந்திருக்கிறேன்.உங்கள் மகன் உப்பிலியை அவள் விரும்புகிறாள். அன்று ஒரு நாள் சினிமா கொட்டகையில் என் மகளின் மானத்தை உப்பிலிதான் காப்பாற்றினான் என்பதையும் அவள் தெரிவித்தாள். இப்பொழுதும் அவள் மானத்தை அவன்தான் காப்பாற்ற வேண்டும். விடிந்தால் திருமணம் நடந்தே ஆகவேண்டும். உங்கள் மகன் உப்பிலிதான் காந்தாவிற்குத் தாலி கட்ட வேண்டும். ப்ளீஸ்….ஹெல்ப் மீ!’

உலகநாதம் பிள்ளைக்கு ஏதோ கனவு காண்பது போல் இருந்தது. ‘உப்பிலிக்கும் ஒருத்தி எங்கேயோ பிறந்திருக்கிறாள்’ என்று அன்று தன் மனைவி பார்வதி சொன்னாளே, அது உண்மைதான் என்பதை அவர் எண்ணியபொழுது உடம்பு சிலிர்த்தது.

நள்ளிரவில் கலியாணம் கதவை வந்து தட்டியதைக் கேட்டு அவர் ஆச்சரியம் மேலிட அசந்து போனார். அந்த அசதியோடு நின்றிருந்த அவரை காந்தாவின் தந்தை மீண்டும் தூண்டினார்.

உலகநாதம் கூவினார் : ‘டேய் உப்பிலி! எழுந்திருடா! உன்னைத் தேடிக் கொண்டு கலியாணம் வந்திருக்கிறது, எழுந்திருடா!’

தினமணி கதிர் 13.2.70

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.