சிங்கப்பூரில் தமிழர் பாரம்பரிய உணவின் மகத்துவம் பற்றிய நிகழ்ச்சி

சிங்கப்பூர் வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் பதினோராவது ஆண்டாக நடைபெறும் தமிழ் மொழி விழா
சிங்கப்பூரில் தமிழர் பாரம்பரிய உணவின் மகத்துவம் பற்றிய நிகழ்ச்சி
Updated on
2 min read

சிங்கப்பூர் வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் பதினோராவது ஆண்டாக நடைபெறும் தமிழ் மொழி விழா 2017ல் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் பங்கெடுப்பது இது நான்காவது ஆண்டாகும்.
மாணவர்களிடையே மொழி ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும், பண்பாடு தொன்மையை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாக உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கான நிகழ்ச்சியை நடத்தியது. தொடக்க கல்லூரி மாணவர்களையும் சேர்த்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தமிழ்மொழி விழா 2017ல் உயர் நிலை பள்ளி மாணவர்களையும் தொடக்க கல்லூரி மாணவர்களையும் பங்கெடுக்க வைப்பதென்று முடிவு செய்தது செயற்குழு.

ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டு, அவர்கள் அந்த தலைப்பை ஒட்டி ஆய்வு செய்து படைக்க வேண்டும். மாணவர்களின் ஆய்வின் ஆழம், குரல் வளம், படைக்கும் திறன், பார்வையாளர்களை தொடர்பு படுத்தும் திறன் போன்றவைகளை அடிப்படையாகக்கொண்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்ய படுகிறார்கள். அதே தலைப்பை ஒட்டி அந்த தலைப்பில் நிபுணத்துவம் பெற்ற ஒரு சிறப்பு பேச்சாளர் சிறப்புரை ஆற்றுவார்.

இவ்வாண்டு 'உணவை' கருப்பொருளாக வைத்து 'தமிழர் பாரம்பரிய உணவும் ஆரோக்கியமும்' என்ற தலைப்பினை மாணவர்கள் படைப்புக்காகவும் 'உணவுக்கும் அமுதென்று பெயர்' என்ற தலைப்பினை சிறப்பு பேச்சாளர் மருத்துவர் கு. சிவராமன் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துவருகிறது.இந்த ஆண்டு முன் இறுதிச்சுற்றில் 60 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆய்வினை படைத்தது சிறப்புக்குரியதாகும். பெற்றோர்களும், பள்ளி ஆச்சிரியர்களும் மாணவர்களும் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை பறைசாற்றுவதாகவே இந்நிகழ்வு அமைந்தது.

ஏப்ரல் 15 மாலை உமறுப்புலவர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட உயர் நிலை பள்ளி மாணவர்கள் இருவரும் தொடக்க கல்லூரி மாணவர்கள் இருவரும் தங்கள் ஆய்வினை சிறப்பாக படைத்தனர். அதில் தமிழர்கள் அதிகம் பயன்படுத்திய எள், மஞ்சள்,மிளகு போன்ற பல  பொருட்களின் முக்கியத்துவத்தை தற்கால வாழ்க்கைமுறைக்கேற்றவாறு எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார்.

இந்த போட்டியில் இந்திய அனைத்துலக பள்ளியின் மாணவிகளாகிய வைஷ்ணவி ஹரிஹர வெங்கடேசன் ஆகியோர் உயர்நிலைப் பள்ளிகள் பிரிவிலும், செயிண்ட் ஆண்ட்ருஸ் தொடக்கக் கல்லூரியைச் சார்ந்த மீனலோச்சனி முத்துக்குமார் மற்றும் சிம்மரோஷினி மகேந்திரன் ஆகியோர் தொடக்கல்லூரி பிரிவிலும் முதல் பரிசைப் பெற்றனர்.
 

சிறப்புரை ஆற்றிய மருத்துவர் கு.சிவராமன் தமிழர் பாரம்பரிய உணவின் சிறப்பையும் சிறந்த உணவு வகைகளையும் உணவு பழக்கங்களையும் எடுத்து கூறியதோடு உணவு தொடர்பாக உலக அளவில் நடத்த ஆய்வுகளையும், அந்த ஆய்வுகளோடு ஒப்பிட்டு பார்க்கையில் தமிழர்களின் உணவுமுறை சிறந்து விளங்குவதையும் எளிமையாக விளக்கினார். மேலும் தமிழர்களின் உணவுமுறை சாதாரணமாக தோன்றியது அல்ல,அது பல ஆயிரம் ஆண்டுகளின் அறிவியல் என்றும் மிக நீண்ட உரையை நேர்த்தியோடுத்த தந்தார் மருத்துவர் கு. சிவராமன். விழாவில் வளர் தமிழ் இயக்கத்தின் தலைவர் ராஜாராம் உட்பட பல்வேரு தமிழ் அமைப்புகளை சார்ந்தவர்களும், ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்க உறுப்பினர்களின் குடும்பத்தார் என 600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் அ. இளங்கோவன் வரும் ஆண்டுகளில் இதே போன்ற மாணவர்களை ஈடுபடுத்தும் நிகழ்ச்சிகள் தொடரும் என்றும், ஆதரவு அளித்துவரும் வளர்தமிழ் இயக்கத்திற்கு நன்றியையும் தெரிவித்துக்கொண்டார். சங்கத்தின் செயலாளர் ரா.சங்கர் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது. அறுநூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னிலையில் அரங்கேறிய இவ்விழா தமிழர்களின் உணவுமுறைகளை பற்றிய சிறு விழிப்புணர்வை உருவாக்கியது என்றுதான் சொல்லவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com