ஒரே ஒருநாள் மட்டும் வாங்கும் ஜோடிக் கரும்பு; அம்பையில் அமோக விளைச்சல்

ஆண்டு முழுவதும் கரும்பு விளைவிக்கப்பட்டாலும், மக்கள் என்னவோ ஆண்டின் ஒரே ஒரு நாளில் மட்டுமே ஒரு ஜோடிக் கரும்பை வாங்கிச் செல்கிறார்கள். அது தான் பொங்கல் திருவிழா.
ஒரே ஒரு நாள் மட்டும் வாங்கும் ஜோடிக் கரும்பு; அம்பையில் அமோக விளைச்சல்
ஒரே ஒரு நாள் மட்டும் வாங்கும் ஜோடிக் கரும்பு; அம்பையில் அமோக விளைச்சல்

ஆண்டு முழுவதும் கரும்பு விளைவிக்கப்பட்டாலும், மக்கள் என்னவோ ஆண்டின் ஒரே ஒரு நாளில் மட்டுமே ஒரு ஜோடிக் கரும்பை வாங்கிச் செல்கிறார்கள். அது தான் பொங்கல் திருவிழா.

பொங்கல் பானை வாங்காத மக்கள் கூட பொங்கலன்று நிச்சயம் கரும்பை வாங்கி வந்து வீட்டின் வாயிலில் வைத்து வழிபாடு செய்வார்கள். கரும்பை அதன் இலையுடன் வாங்கி வரும்போதுதான் பொங்கல் பண்டிகையின் குதூகலம் வீடு முழுவதும் நிறைகிறது.

பொங்கல் பண்டிகையன்று புத்தாடை வாசத்துடன் பொங்கிவரும் சர்க்கரைப் பொங்கல் தரும் அறுசுவையுடன் இந்த இனிப்பான செங்கரும்பு சேரும்போதுதான் அந்த திருவிழாவே தித்திக்கிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செங்கரும்பு விளைவிக்கப்படுகிறது. அதில் அம்பையும் ஒன்று. பொங்கலை முன்னிட்டு அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் பயிரிட்டுள்ள கரும்பு அறுவடை விறுவிறுப்படைந்துள்ளது. கரும்பு நல்ல விளைச்சல் கண்டுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழர் திருநாளான தைப் பொங்கல் திருவிழாவில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து மக்களும் காய்கறிகள், பழங்கள், கரும்பு உள்ளிட்டவற்றை சூரியனுக்குப் படையல் வைத்து வழிபடுவது வழக்கம். 

தை மாதப் பிறப்பைக் கொண்டாடப்படும் பொங்கல் விழாவிற்கு அறுவடை செய்யும் வகையில் விவசாயிகள் சித்திரையில் கரும்புப் பயிரிடுகிறார்கள். 9 மாதங்கள் வளர்ந்த நிலையில் மார்கழி மூன்றாவது வாரத்தில் கரும்பு அறுவடையைத் தொடங்குகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் சுமார் 28 ஹெக்டேரில் கரும்பு பயிரிடப்படுகிறது. பாபநாசம் பொதிகையடி, டாணா, அனவன்குடியிருப்பு பகுதிகளில் விவசாயிகள் பெரும்பாலும் கரும்பு பயிரிடுகின்றனர். பாபநாசம் பகுதியில் விவசாயிகள் கரும்பு அறுவடையை தொடங்கியுள்ளனர். 

இது குறித்து விவசாயி அழகர் கூறும்போது, ஆண்டுதோறும் பொங்கலுக்கு அறுவடை செய்யும் வகையில் சித்திரையில் கரும்பு பயிரிடுகிறோம். மார்கழி கடைசியில் கரும்பு அறுவடை செய்கிறோம். கடந்த ஆண்டு கரும்புப் பயிருக்கு போதிய தண்ணீர் இல்லாமல் சிரமமான நிலை இருந்தது. நிகழாண்டு தண்ணீர் பிரச்னை இல்லை. கரும்பும் நன்கு விளைச்சல் வந்துள்ளது. சென்ற ஆண்டை விட அதிக விளைச்சல் இருப்பதால் விலை குறைந்துள்ளது. சென்ற ஆண்டு ஒரு கட்டுக்கு ரூ.315 வரை விற்ற கரும்பு நிகழாண்டு ரூ.270 ரூபாய் வரை மட்டுமே விலை போகிறது. கரும்பு விளைச்சல் அதிகரித்து உள்ளதால் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் நல்ல பலன் தருவதாக உள்ளது. 

இங்கு விளையும் கரும்பு திருநெல்வேலி மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com