பொங்கலுக்குச் சுவையூட்டும் பரமத்தி வேலூர் வெல்லம்

பொங்கல் பண்டிகை என்றாலே புத்தாடைகளுடன், புதுப்பானையில் சுவையான பொங்கலிட்டு, சூரியனுக்குப் படைப்பதுதான் பண்டிகையின் சிறப்பே.
பரமத்திவேலூரில் நடைபெறும் வெல்லம் தயாரிக்கும் பணி.
பரமத்திவேலூரில் நடைபெறும் வெல்லம் தயாரிக்கும் பணி.

பொங்கல் பண்டிகை என்றாலே புத்தாடைகளுடன், புதுப்பானையில் சுவையான பொங்கலிட்டு, சூரியனுக்குப் படைப்பதுதான் பண்டிகையின் சிறப்பே. பொங்கல் பண்டிகைக்கு சில வாரங்களுக்கு முன்பே வீடுகளுக்கு வெள்ளைப் பூசி தயாராகி, புத்தாடைகள் எடுத்து, பொங்கலன்று நல்ல நேரம் பார்த்து வீட்டின் வாயிலில் பொங்கலிடுவோம். 

பொங்கலுக்கு மிக முக்கியமானது புதிதாக விளைந்த அரிசியும், புது வெல்லமும்தான். பொங்கலுக்கு சுவையூட்டும் அந்த வெல்லம் தமிழகத்தின் பரமத்திவேலூர் பகுதியில் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.

எப்போதும் வெல்லம் தயாரிப்புப் பணி நடைபெற்று வந்தாலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரமத்திவேலூர் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விற்பனைக்குத் தயாராகும் வெல்லம்.
விற்பனைக்குத் தயாராகும் வெல்லம்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டத்தில் சோழசிராமணி, ஜமீன் இளம்பள்ளி, ஜேடர்பாளையம், அய்யம்பாளையம். பிலிக்கல்பாளையம், பாண்டமங்கலம், கபிலர்மலை, பொன்மலர் பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. 

இங்கு விளையும் கரும்புகள்  அனைத்தும் பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள ஜேடர்பாளையம், சோழசிராமணி, கொத்தமங்கலம், அய்யம்பாளையம், அண்ணாநகர், கபிலர்மலை  உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட வெல்லம் தயார் செய்யப்படும் ஆலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அச்சுவெல்லம், குண்டு வெல்லம், மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவை தயார் செய்யப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகளவில் வெல்லத்தின் தேவை இருக்கும் என்பதால், வெல்லம் தயாரிக்கும் பணியில் ஆத்தூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளிலேயே தங்கி வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயார் செய்யப்பட்ட வெல்லங்களை ஆலை உரிமையாளர்கள் 30 கிலோ கொண்ட மூட்டைகளாக (சிப்பங்களாக) கட்டப்பட்டு பிலிக்கல்பாளையத்தில் உள்ள 'விவசாயிகள் வெல்லம் சர்க்கரை விற்பனை சந்தை'க்கு கொண்டு செல்கின்றனர். 

இங்கு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும் ஏலத்தில் தரத்திற்கு தகுந்தார்போல் வெல்லங்கள் ஏலம் விடப்படும். இந்த சந்தைக்கு வரும் வெல்ல மூட்டைகள், தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தனது பயணத்தை இங்குதான் தொடங்குகின்றன.

வெல்லத்தை ஏலம் எடுக்க நாமக்கல், கரூர், சேலம், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் இந்த சந்தைக்கு வந்து, வெல்லத்தை ஏலம் எடுத்து செல்கின்றனர். ஏலத்தில் எடுக்கப்பட்ட வெல்லங்களை ஏலம் எடுத்த வியாபாரிகள்  தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைப்பதோடு, பிற மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரம், கேரளம், ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்புகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரமத்திவேலூர் வட்டார பகுதியில் உள்ள வெல்ல ஆலைகளில் வெல்லம் தயாரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்  ஈடுபட்டு வருகின்றனர். 

'உற்பத்தியாளர்களுக்கு இனிக்காத வெல்லம்'

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய போது பிலிக்கல்பாளையம் வெல்லம் சர்க்கரை ஏல சந்தையில் இருந்து வெல்லத்தை மொத்தமாக கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்தது. 

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பொருள்களில் வெல்லம் வழங்காமல் சர்க்கரை, ஏலக்காய், பச்சரிசி, திராட்சை, செங்கரும்பு உள்ளிட்ட பொருள்களை மட்டும் வழங்கிவருகின்றனர். 

இதனால் வெல்லம் தயாரிப்புத்  தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் பொருளாதார அளவில் பின்னடைவை சந்தித்துள்ளனர். எனவே, தமிழக அரசு, வரும் பொங்கல் பண்டிகை காலங்களில் வெல்லத்தை மொத்தமாக கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் போது சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்த்து  வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வெல்ல உற்பத்தியாளர்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால், வெல்லம் போல வெல்லம் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வும் இனிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com