திவாரி சதம்; கடைசி ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
சென்னை, டிச.11: ஐந்தாவது ஒரு தின கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வென்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் குவி


சென்னை, டிச.11: ஐந்தாவது ஒரு தின கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வென்றது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் குவித்தது. மனோஜ் திவாரி 104 ரன்கள் குவித்தார்.
பின்னர் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 44.1 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆட்டம் இழந்து தோல்வி கண்டது. மேற்கிந்தியத் தீவு வீரர் போலார்டு
10 சிக்ஸர்கள் விளாசி, அணியின் வெற்றிக்காக கடைசி வரை போராடினார். இதையடுத்து தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் சேவாக், அஸ்வினுக்கு ஓய்வளிக்கப்பட்டது. இதனால் மனோஜ் திவாரி, அஜிங்க்யா ரஹானேவுக்கு வாய்ப்பு கிடைத்தது. வினய் குமாருக்குப் பதிலாக இர்பான் பதான் சேர்க்கப்பட்டார். கம்பீர் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இந்தியா ஏற்கெனவே தொடரை வென்றுவிட்டதால், மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் சேவாக், அஸ்வினுக்கு ஓய்வளிக்கப்பட்டது.
வழக்கம்போல் இந்த ஆட்டத்திலும் இந்தியாவே டாஸ் வென்றது. இதையடுத்து கம்பீர் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
கெமர் ரோச் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் கம்பீர் ஒரு ரன் எடுக்க, இரண்டாவது பந்தில் அஜிங்க்யா ரஹானே (0), மூன்றாவது பந்தில் பார்திவ் படேல் (0) என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்தியாவுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.
இதையடுத்து கம்பீருடன் இணைந்தார் மனோஜ் திவாரி. இந்த ஜோடி நிதானமாக ஆடி அணியைச் சரிவிலிருந்து மீட்டது. இந்தியா 84 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. கம்பீர் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு திவாரியுடன் ஜோடி சேர்ந்தார் விராட் கோலி. மறுமுனையில் சிறப்பாக ஆடிய திவாரி 75 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். ஆரம்பம் முதலே சற்று வேகமாக ஆடிய கோலி 53 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து சிறப்பாக ஆடிய திவாரி ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 125 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார். அவர் 104 ரன்கள் எடுத்திருந்தபோது காயமடைந்திருந்ததால் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ரோஹித் சர்மா களம் புகுந்தார்.
இந்தியா 245 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மார்ட்டின் வீசிய 46-வது ஓவரின் முதல் பந்தை தூக்கி அடித்தார் கோலி. ஆனால் பந்து எல்லையில் இருந்த சாமுவேல்ஸின் கையில் தஞ்சம் புகவே கோலி ஆட்டமிழந்தார். 85 பந்துகளைச் சந்தித்த அவர் 5 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார். ரோஹித் சர்மா 26 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து நரேன் பந்துவீச்சில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.
இதன்பிறகு ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார் பதான். நீண்ட நாள்களுக்குப் பிறகு களமிறங்கிய பதான் சிறப்பாக ஆடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் ஏமாற்றினார். நரேன் வீசிய 49-வது ஓவரின் 6 பந்துகளையும் ரன் எடுக்காமல் மெய்டன் ஓவராக ஆக்கினார். கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுக்க இந்தியா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் குவித்தது. ஆட்டத்தின் கடைசி பந்தில் பதான் ரன் அவுட் ஆனார். 10 பந்துகளைச் சந்தித்த அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். ரெய்னா 16 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கெமர் ரோச், மார்ட்டின் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
மேற்கிந்தியத் தீவுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி: பின்னர் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சிம்மன்ஸ் பதான் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே நடையைக் கட்டினார். பாவெல் 15 ரன்களில் வீழ்ந்தார். சாமுவேல்ஸ் (6), ஜேசன் முகமது (2) ஆகியோரை மிதுன் வெளியேற்றினார். ராம்தினை 14 ரன் சேர்த்தார்.
இதன்பிறகு ஜோடி சேர்ந்த போலார்டும், ரஸ்ஸலும் அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். ரஸ்ஸல் 53, சமி 3, நரேன் 8 ரன்கள் சேர்த்து வீழ்ந்தனர். தனிநபராகப் போராடிய பொல்லார்டு 99 ரன்கள் எடுத்திருந்தபோது தூக்கி அடித்தார்.
அந்த பந்து கோலியின் கைக்கு சென்றபோதும், அவர் தவறவிட்டார். இதனால் போலார்டு 98 பந்துகளில் 8 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். அதன்பிறகும் அவர் சிக்ஸர்களாக விளாசினார். இறுதியில் ரெய்னா வீசிய 45-வது ஓவரை எதிர்கொண்ட போலார்டு முதல் பந்தை சிக்ஸருக்குத் தூக்கினார். ஆனால் அதை ரஹானே துள்ளிச் சென்று கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இதனால் போôர்டு 119 ரன்களில் ஆட்டமிழக்க, மேற்கிந்தியத் தீவுகளின் இன்னிங்ஸ் 233 ரன்களில் முடிவுக்கு வந்தது. போலார்டு 10 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார்.
நெகிழவைத்த சென்னை ரசிகர்கள்...
மேற்கிந்தியத் தீவுகளின் கெய்ரான் போலார்டு, ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோர் அரைசதமடித்தபோது மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் சிலர், எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தினாலும், சிறப்பாக ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களை பாராட்டத் தவறவில்லை சென்னை ரசிகர்கள். வழக்கமாக ஒரு வீரர் சிறப்பாக ஆடினால் எதிரணி வீரர்கள் பாராட்டுவார்கள்.
ஆனால் இங்கோ எதிரணி வீரர்களை ரசிகர்களும் பாராட்டியிருக்கிறார்கள். எப்போதுமே இந்த குணம் சென்னை ரசிகர்களுக்கு உண்டு. அதை மீண்டும் ஒருமுறை சென்னை ரசிகர்கள் உறுதிப்படுத்தினர்.
அதேபோல போலார்டு சதமடித்ததும் ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர்.
மைதானத்தின் அனைத்து வாயில்களிலும், தேசியக் கொடி, தொப்பி, டி-ஷர்ட்கள், ஊதுகுழல்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை படுஜோராக நடைபெற்றது.
ஏராளமான ரசிகர்கள் தங்களின் முகங்களில் தேசியக் கொடி உள்ளிட்ட பல்வேறு டிசைன்களை வரைந்து கொண்டு உற்சாகமாய் வந்திருந்தனர். சிலர் இசைக்கருவிகளோடு வந்து மைதானத்தை அதிரச் செய்தனர்.
திவாரி, கோலி ஆகியோர் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியபோது சென்னை ரசிகர்கள் ஏகோபித்த குரலில் கோஷம் எழுப்பி வீரர்களை உற்சாகப்படுத்தினர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஸ்டேடியம் நிரம்பியிருந்தது. ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் குழுமியிருந்தனர்.
ஸ்கோர் போர்டு
இந்தியா
கம்பீர் (எல்பிடபிள்யூ) (பி) மார்ட்டின் 31
ரஹானே (எல்பிடபிள்யூ) (பி) ரோச் 0
பார்த்திவ் படேல் (பி) ரோச் 0
திவாரி (காயமடைந்து ஓய்வு) 104
கோலி (சி) சாமுவேல்ஸ் (பி) மார்ட்டின் 80
ரோஹித் (பி) நரேன் 21
ரெய்னா (அவுட் இல்லை) 16
இர்பான் (ரன் அவுட்-மார்ட்டின்) 4
உபரி 11
மொத்தம் (50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு) 267
விக்கெட் வீழ்ச்சி: 1-1, 2-1, 3-84, 4-241, 5-250, 6-267
பந்துவீச்சு:
ரோச் 8 0 46 2
ரஸ்ஸல் 6 0 31 0
நரேன் 10 1 41 1
சம்மி 5 0 28 0
மார்ட்டின் 10 0 47 2
சாமுவேல்ஸ் 9 0 54 0
போலார்ட் 2 0 14 0
பந்துவீச்சு:
மேற்கிந்தியத் தீவுகள்
சிம்மன்ஸ் (எல்பிடபிள்யூ) (பி) பதான் 0
பாவெல் (பி) பதான் 15
சாமுவேல்ஸ் (சி) படேல் (பி) மிதுன் 6
முகமது (எல்பிடபிள்யூ) மிதுன் 2
ராம்தின் (எல்பிடபிள்யூ) (பி) ஜடேஜா 14
போலார்டு (சி) ரஹானே (பி) ரெய்னா 119
ரஸ்ஸல் ரன்அவுட் (கம்பீர்) 53
சம்மி (சி) ரஹானே (பி) ஜடேஜா 3
நரேன் (பி) ராகுல் சர்மா 8
ரோச் (பி) ஜடேஜா 0
மார்ட்டின் (அவுட் இல்லை) 0
உபரி 13
மொத்தம் (44.1ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு) 233
விக்கெட் வீழ்ச்சி: 1-0, 2-23, 3-29, 4-36, 5-78, 6-167, 7-181, 8-195, 9-213, 10-233.
பந்துவீச்சு:
பதான் 9 1 42 2
மிதுன் 7 1 32 2
ரெய்னா 6.1 0 24 1
ஜடேஜா 10 0 62 3
ராகுல் 10 0 45 1
திவாரி 1 0 15 0
கோலி 1 0 11 0
பதானின் ஆக்ரோஷம்...
2 ஆண்டுக்கு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்பிய பதான் முதல் ஓவரின் முதல் பந்திலேயே மேற்கிந்தியத்
தீவுகளின் சிம்மன்ûஸ ஆட்டமிழக்கச் செய்தார். தொடர்ந்து 3-வது ஓவரில் பாவெலை வீழ்த்தினார். அவரது பந்துவீச்சில் பழைய ஆக்ரோஷத்தைக் காண முடிந்தது.
கொல்கத்தா தீ விபத்தில் இறந்தவர்களுக்கு விருது அர்ப்பனிப்பு
கொல்கத்தா தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆட்டநாயகன் விருதை அர்ப்பணிப்பதாக இந்திய வீரர் மனோஜ் திவாரி கூறினார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் மேலும் கூறியதாவது: சென்னை ஆடுகளம் எனது பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் அமைந்தது. இங்கு பெற்ற ஆட்டநாயகன் விருதை கொல்கத்தா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். தீவிபத்து சம்பவம் துரதிருஷ்டவசமானது. இது நடந்திருக்கக்கூடாது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...