யுவராஜின் ஒலிம்பிக் கனவு!
யுவராஜ் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்தான். இன்று அவருக்கு நிகராக பேசப்படும் மற்றொருவர் மும்பையைச் சேர்ந்த இளம் ஹாக்கி வீரர் யுவராஜ் வால்


யுவராஜ் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்தான். இன்று அவருக்கு நிகராக பேசப்படும் மற்றொருவர் மும்பையைச் சேர்ந்த இளம் ஹாக்கி வீரர் யுவராஜ் வால்மீகி.
சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வெற்றி கண்ட இந்திய அணியில் விளையாடியதன் மூலம் இந்தியாவின் புதிய நாயகனாக அவதாரமெடுத்துள்ளார் இந்த யுவராஜ். மகாராஷ்டிர அரசு முதல் அரசியல்வாதிகள் வரை எல்லோரும் இன்று அவரைக் கொண்டாடுகின்றனர்.
சீனாவில் இருந்து மும்பை திரும்பிய அவருக்கு மும்பை விமான நிலையம் தொடங்கி வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு. மும்பையின் மூலை முடுக்குகளில்கூட யுவராஜ் பிரபலமாகியிருக்கிறார். மகாராஷ்டிர அரசு ரூ.10 லட்சம் வழங்கியதோடு, அவருக்கு வீடு வழங்கவும் முடிவு செய்துள்ளது.
பொதுவாகவே இந்தியாவில் விளையாட்டு வீரராக வரக்கூடியவர்கள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க முடியாது. செல்வச் சீமானாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்ற எண்ணம் இன்றளவிலும் நம் அனைவருக்கும் உண்டு. ஆனால் அதையெல்லாம் தகர்த்தெறிந்துள்ளார் யுவராஜ் வால்மீகி.
இவர் பணக்காரப் பின்னணியிலிருந்து வரவில்லை. மாறாக மின்சார வசதிகூட இல்லாத ஏழ்மையான பின்னணியில் இருந்துதான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். இவருடன் பிறந்தவர்கள் 3 பேர். வீட்டில் சிம்னி விளக்கின் வெளிச்சத்திலும், தெரு விளக்கிலும்தான் இவரின் படிப்பு. மழையோ, காற்றோ வந்துவிட்டால் வீட்டில் இருக்கிற விளக்கும், வெளிச்சம் கொடுக்க மறுத்துவிடும்.
தண்ணீர், கழிப்பறை வசதி என அடிப்படை வசதிகள்கூட வீட்டில் கிடையாது. ஏழ்மையான சூழலால் பாதிக்கப்பட்டிருந்தபோதும்கூட ஹாக்கி விளையாட்டின் மீது தீராத காதல் கொண்டிருந்தார். அபார நம்பிக்கை, விடா முயற்சியால், "ஏர் இந்தியா' அணியில் விளையாடுவதற்கு முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை மூலம் 2007-ம் ஆண்டு வாய்ப்புப் பெற்றார் இந்த வால்மீகி.
ஆசிய சாம்பியன்ஸ் போட்டிக்கான 18 பேர் அடங்கிய அணியைத் தேர்வு செய்யும் முகாம் பெங்களூரில் நடைபெற்றபோது 110 வீரர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற யுவராஜ், முழுத்திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் அணியில் இடம்பிடித்தார். ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை அப்போதே அவருக்குள் பிறந்தது.
பயிற்சியாளர் மைக்கேல் நாப்ஸýம் யுவராஜின் ஆட்டத்தால் கவரப்பட, அவரின் நம்பிக்கைக்குரிய ஆட்டக்காரரானார். ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலும் கணிசமான கோல்களை அடித்தார்.
இறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டபோது இந்தியாவின் சார்பில் கோல் அடிக்க தேர்வு செய்யப்பட்டவர்களில் யுவராஜும் ஒருவர். தனக்கு கொடுத்த வாய்ப்பை மிக அழகாக கோலாக மாற்றி, இந்தியா வெற்றிப் பாதையில் பயணிக்க முக்கியக் காரணமாக இருந்தார்.
பாகிஸ்தானுடான அனுபவம் குறித்துப் பேசிய யுவராஜ், "இறுதி ஆட்டத்துக்கு முந்தைய நாள் தூக்கமே வரவில்லை. இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான ஆட்டத்தில் விளையாட வேண்டும் என்பது கனவு. அது நனவாகியுள்ளது. பெனால்டி ஷூட் அவுட்டில் கோல் அடிப்பதற்கு முன்பு இந்த வாய்ப்பை வீணடித்துவிட்டால் இந்தியா தோற்றுவிடும் என்ற நெருடல் எனக்குள் இருந்தது. ஆனாலும் முழு நம்பிக்கையை மனதில் வரவழைத்துக் கொண்டு பந்தை அடித்தேன் அது கோலானது. இறுதி ஆட்டம் நடைபெற்ற தினம் என் வாழ்வில் மறக்கமுடியாத மிக இனிமையான நாள்' என்றார் இந்திய ஹாக்கியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாகி உருவெடுத்துள்ள 21 வயது யுவராஜ்.
மும்பை பாந்த்ராவில் உள்ள கல்லூரியில் படித்து வரும் அவருக்கு ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் இந்தியாவுக்கு தங்கம் வென்று தரவேண்டும் என்பதே இப்போதைய லட்சியம்.
"எனக்கும், பயிற்சியாளர் மைக்கேல் நாப்ஸýக்கும் ஆசிய சாம்பியன்ஸ் போட்டிதான் முதல் வெற்றி. எங்களுக்கு இது நல்ல தொடக்கம். அடுத்து வரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைக் குவிப்பதோடு, ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதிபெற்று, தங்கம் வெல்ல வேண்டும். நாங்கள் இப்போது ஆசிய சாம்பியன்ஸ் மட்டும்தான். ஒலிம்பிக்கிலும் சாம்பியனாவோம் என்கிறார் நம்பிக்கையோடு..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...