இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
கடந்த 3 போட்டிகளிலும் வெற்றி கண்டு தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, கடைசிப் போட்டியிலும் வென்று ஆஸ்திரேலியாவை "ஒயிட் வாஷ்' ஆக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் 81 ஆண்டுகால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஓர் அணிக்கு எதிராக 4-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிய பெருமையை தோனி தலைமையிலான இந்திய அணி பெறும்.
இதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி கண்ட படுதோல்விக்கு பழிதீர்ப்பதாகவும் அமையும். ஆனால் ஆஸ்திரேலிய அணியோ கடைசிப் போட்டியில் வென்று ஆறுதல் வெற்றியோடு நாடு திரும்ப வேண்டும் என்ற கனவோடு களமிறங்குகிறது.
அஜிங்க்யா ரஹானே அறிமுகமாவாரா? இந்திய அணியில் கடந்த 15 மாதங்களாக அறிமுகப் போட்டியில் விளையாடுவதற்காக காத்திருக்கும் அஜிங்க்யா ரஹானேவுக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஷிகர் தவன் காயம் காரணமாக விலகிவிட்டதால், முரளி விஜயுடன் அஜிங்க்யா ரஹானே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ஆரம்பம் முதலே அவரை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே பயன்படுத்துவோம் என்று தேர்வுக் குழுவினர் கூறி வருகின்றனர். அதனால் இந்தப் போட்டியில் ரஹானேவுக்கு தொடக்க வீரராக வாய்ப்பு கிடைக்காவிட்டால், விஜயும், புஜாராவும் இணைந்து இந்தியாவின் இன்னிங்ûஸ தொடங்குவார்கள். விராட் கோலி 3-வது வீரராக களமிறக்கப்படலாம்.
ஒருவேளை புஜாரா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினால் மிடில் ஆர்டரில் 6-வது பேட்ஸ்மேனுக்கான இடத்தைப் பிடிப்பதில் ரஹானே, ஷிகர் தவனுக்குப் பதிலாக இடம்பெற்றுள்ள ரெய்னா ஆகியோரிடையே போட்டி நிலவும். எனினும் கேப்டன் தோனி, ரெய்னாவுக்கே முன்னுரிமை கொடுப்பார் என்பதால் அவர் விளையாட அதிக வாய்ப்புள்ளது.
சச்சினுக்கு கடைசி வாய்ப்பு? மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு தில்லி டெஸ்ட் போட்டியே தாய் நாட்டு மண்ணில் விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடருக்குப் பிறகு அடுத்த ஓர் ஆண்டுக்கு இந்திய மண்ணில் எந்த டெஸ்ட் தொடரும் இல்லை. மேலும் அடுத்த மாதம் சச்சின் 40 வயதை எட்டவுள்ளார். அதனால் இந்திய மண்ணில் அடுத்த டெஸ்ட் தொடரில் சச்சின் விளையாடுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே. தில்லி டெஸ்ட் போட்டி சச்சினுக்கு 198-வது டெஸ்ட் போட்டியாகும். வரும் நவம்பரில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் விளையாடும்போது 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைப்பார் சச்சின். அந்த சாதனையை செய்த கையோடு அவர் ஓய்வுபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் மொஹாலி போட்டியில் விளையாடிய அதே பந்துவீச்சாளர்களே இந்தப் போட்டியிலும் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது. வேகப்பந்து வீச்சாளர்களில் அசோக் திண்டாவுக்கு கடந்த 3 போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்தப் போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமே. இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். மேலும் "ஒயிட் வாஷ்' முனைப்பில் களமிறங்குவதால் அணியில் மாற்றம் செய்ய கேப்டன் தோனி விரும்பமாட்டார்.
கிளார்க் இடம்பெற மாட்டார்? தொடர் தோல்விக்கு மத்தியில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மைக்கேல் கிளார்க், முதுகுப் பகுதியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விளையாடுவாரா, இல்லையா என்பது குறித்து போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே முடிவெடுக்கப்படும். எனினும் அவர் வியாழக்கிழமை இரு செசன்களிலுமே பயிற்சியில் ஈடுபடவில்லை. அதனால் அவர் கடைசிப் போட்டியில் விளையாடமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிளார்க் விளையாடாதபட்சத்தில், ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத துணை கேப்டன் ஷேன் வாட்சன், ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துவார் என்று தெரிகிறது. ஏற்கெனவே கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக விலகிவிட்ட நிலையில், இப்போது கிளார்க் நிலை குறித்தும் சந்தேகம் நிலவி வருவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர், எட் கோவன் ஆகியோர் கடந்த போட்டியில் ஓரளவு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். பில் ஹியூஸ் கடந்தப் போட்டியில் அரைசதம் கண்டார்.
அதனால் இந்தப் போட்டியில் அவர் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இதேபோல் கடந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 92 ரன்கள் எடுத்த ஸ்டீவ் ஸ்மித்தும் அணியில் இடம்பெறுவது உறுதி. ஆல்ரவுண்டர் மோசஸ் ஹென்ரிக்ஸýக்குப் பதிலாக மற்றொரு ஆல்ரவுண்டரான கிளன் மேக்ஸ்வெல் இடம்பெறலாம்.
மேத்யூ வேடு காயத்திலிருந்து மீண்டுவிட்டதால் அவர் அணியில் இடம்பெறுவார் என்று தெரிகிறது. டேவிட் வார்னர், எட் கோவன், பில் ஹியூஸ், ஷேன் வாட்சன், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், கிளன் மேக்ஸ்வெல், மிட்செல் ஜான்சன், ஜேம்ஸ் பட்டின்சன், பீட்டர் சிடில், நாதன் லியான் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.
முதலிடத்தில் சச்சின்!
தில்லி மைதானத்தில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் சச்சின் முதலிடத்தில் உள்ளார். இங்கு 9 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2 சதம், 4 அரைசதங்களுடன் 726 ரன்கள் குவித்துள்ளார். இங்கு அதிக போட்டிகளில் விளையாடிய பெருமையும் சச்சினையே சேரும்.
ஆஸ்திரேலியா தப்புமா?
இந்தப் போட்டியில் தோற்கும்பட்சத்தில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-வது முறையாக "ஒயிட் வாஷ்' தோல்வியை சந்திக்கும் ஆஸ்திரேலியா. முன்னதாக அந்த அணி 1978-79-ல் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரிலும், 1969-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் 4-0 என்ற கணக்கில் "ஒயிட் வாஷ்' ஆகியுள்ளது.
அணி விவரம்
இந்தியா: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா, இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், சுரேஷ் ரெய்னா, அசோக் திண்டா.
ஆஸ்திரேலியா: மைக்கேல் கிளார்க் (கேப்டன்), ஷேன் வாட்சன், எட் கோவன், டேவிட் வார்னர், பில் ஹியூஸ், உஸ்மான் கவாஜா, கிளன் மேக்ஸ்வெல், பீட்டர் சிடில், ஜேம்ஸ் பட்டின்சன், நாதன் லியான், மோசஸ் ஹென்ரிக்ஸ், மேத்யூ வேட், மிட்செல் ஜான்சன்.
போட்டி நேரம்: காலை 9.30
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் கிரிக்கெட்
மைதானம் எப்படி?
போட்டி நடைபெறவுள்ள தில்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். அதனால் இந்தப் போட்டியிலும் சுழற்பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்களே இங்கு ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். இங்கு வேகப்பந்து வீச்சாளர்களின் விக்கெட் சராசரி 43.57 சதவீதம் மட்டுமே.
வழக்கமாக தில்லியில் கோடைக்காலத்தில் கடுமையான வெப்பம் நிலவும். எனினும் தற்போதைய நிலையில் அங்கு இதமான சூழலே நிலவி வருகிறது. தற்போது சராசரியாக 85 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையே காணப்படுகிறது.
தில்லியில் இதுவரை...
தில்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இந்திய அணி 1948 முதல் இதுவரை 31 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 11-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் கண்டுள்ளது. எஞ்சிய 14 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. 1959 முதல் 2008 வரை இங்கு இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 6 முறை மோதியுள்ளன. அதில் இந்தியா 2 முறை வெற்றி கண்டுள்ளது. ஆஸ்திரேலியா ஒரு முறை வாகை சூடியுள்ளது. 3 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
கடைசியாக இங்கு 1987-ல் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வி கண்டுள்ளது இந்தியா. அதன்பிறகு இங்கு நடைபெற்ற 9 டெஸ்ட் போட்டிகளில் 8-ல் இந்தியா வெற்றி கண்டுள்ளது. கடைசியாக இங்கு 2008 நவம்பரில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதிய டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
கும்ப்ளே அதிக விக்கெட்
தில்லி மைதானத்தில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் இந்தியாவின் அனில் கும்ப்ளே 7 போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவாடானையில் ஏப்.15-இல் 2-ஆம் கட்ட தோ்தல் பயிற்சி முகாம்

வளா்ந்த நாடுகள், ஏழை நாடுகள் இடையே இடைவெளி அதிகரிப்பு: ஐ.நா. அறிக்கை

திருவாடானை பேரவைத் தொகுதிக்கு கூடுதலாக 453 வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

காஞ்சிபுரத்தில் 8 சுயேச்சைகள் உள்பட 15 போ் போட்டி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

