பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கண்டது.

News image
Updated On :26 பிப்ரவரி 2013, 7:59 pm

ஏ.வி. பெருமாள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கண்டது.

ஆட்டத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்ஸ் 241 ரன்களில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து 50 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 11.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 133 ஓவர்களில் 380 ரன்களும், இந்தியா 154.3 ஓவர்களில் 572 ரன்களும் குவித்தன.

பின்னர் 2-வது இன்னிங்ûஸ விளையாடிய ஆஸ்திரேலியா 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்திருந்தது. மோய்சஸ் ஹென்ரிக்ஸ் 75, நாதன் லியான் 8 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

241-க்கு ஆல்அவுட்: கடைசி நாளான செவ்வாய்க்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் நாதன் லியான் 11 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, முதல் அரை மணி நேரத்திலேயே ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்ஸ் 93 ஓவர்களில் 241 ரன்களில் முடிவுக்கு வந்தது. மோய்சஸ் 148 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.  இந்தியத் தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

50 ரன்கள் இலக்கு: இதையடுத்து 50 ரன்கள் என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ûஸ தொடங்கியது இந்தியா. எளிதான இலக்கு என்பதால் விக்கெட் இழப்பின்றி இந்தியா வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், முரளி விஜய் ஒரு சிக்ஸருடன் வெளியேறினார். இதையடுத்து புஜாரா களம்புகுந்தார். இந்திய அணி 36 ரன்களை எட்டியபோது 2-வது விக்கெட்டை இழந்தது. 23 பந்துகளைச் சந்தித்த சேவாக் 19 ரன்களில் நாதன் லியான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு வந்த சச்சின், லியான் பந்துவீச்சில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை விளாசி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இதனால் 11.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது இந்தியா. சச்சின் 13, புஜாரா 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  இரட்டைச் சதமடித்த இந்திய கேப்டன் தோனி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் சனிக்கிழமை ஹைதராபாதில் தொடங்குகிறது.

சுருக்கமான ஸ்கோர்

ஆஸ்திரேலியா 

முதல் இன்னிங்ஸ்-380

(கிளார்க் 130, ஹென்ரிக்ஸ் 68, வார்னர் 59,

அஸ்வின் 7வி/103)

2-வது இன்னிங்ஸ்-241 (ஹென்ரிக்ஸ் 81*, கோவன் 32,

அஸ்வின் 5வி/95,

ஜடேஜா 3வி/72,

ஹர்பஜன் 2வி/55)

இந்தியா

முதல் இன்னிங்ஸ்-572

(தோனி 224, கோலி 107,

சச்சின் 81, பட்டின்சன் 5வி/96,

லியான் 3வி/215)

2-வது இன்னிங்ஸ்-50/2 (சேவாக் 19, சச்சின் 13*, புஜாரா 8*, விஜய் 6,

பட்டின்சன் 1வி/13,

லியான் 1வி/29)

"சயின்டிஸ்ட்' சேவாக்

தலைவலி காரணமாக இந்தப் போட்டியில் வீரேந்திர சேவாக் கண்ணாடி அணிந்து விளையாடினார். கடைசி நாளான  செவ்வாய்க்கிழமை,  அவர் கண்ணாடி அணிந்திருப்பதைக் கிண்டல் செய்யும் வகையில் ரசிகர் ஒருவர், "நம்ம "சயின்டிஸ்ட்' சேவாக்கிற்கு ஒரு விசில் அடியுங்க' என்று கூறி அனுப்பிய எஸ்.எம்.எஸ். மைதானத்தில் இருந்த பிரதான ஸ்கோர் பலகையில் காண்பிக்கப்பட்டது. அப்போது விசில் சத்தத்தால் மைதானமே அதிர, அதைப்பார்த்த சேவாக் புன்னகைத்தார்.

கங்குலி-தோனி டிரா

இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு அதிக வெற்றிகளைத் தேடித்தந்த கேப்டன்களின் வரிசையில் முதலிடத்தில் இருந்த செüரவ் கங்குலியின் சாதனையை சமன் செய்தார் தோனி.

இவருடைய தலைமையில் இந்திய அணி 44 போட்டிகளில் விளையாடி 21-ல் வெற்றி கண்டுள்ளது. 12 போட்டிகளில் தோற்றுள்ளது. 11 போட்டிகளில் டிரா செய்துள்ளது. இவரின் வெற்றி-தோல்வி விகிதம் 1.75 ஆகும்.

கங்குலி தலைமையில் இந்திய அணி 49 போட்டிகளில் விளையாடி 21-ல் வெற்றியும், 13-ல் தோல்வியும் கண்டுள்ளது.

15 போட்டிகளில் டிரா செய்துள்ளது. இவருடைய வெற்றி-தோல்வி விகிதம் 1.61 ஆகும்.

அடுத்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு அதிக வெற்றிகளைத் தேடித்தந்த கேப்டன் என்ற பெருமையை தோனி பெறுவார்.

போட்டித் துளிகள்...

* சென்னை மைதானத்தில் இந்திய அணி தற்போது 13-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்திய மைதானங்களில் சென்னையில்தான் இந்திய அணி அதிக வெற்றிகளைக் குவித்துள்ளது. இதற்கடுத்தபடியாக தில்லியில் 11 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

* சென்னையில் ஆஸ்திரேலியாவுடன் விளையாடிய கடைசி 4 டெஸ்ட் போட்டிகளில் 3-ல் இந்தியா வெற்றி கண்டுள்ளது. 2004-ல் இங்கு நடைபெற்ற டெஸ்ட் மட்டும் டிராவில் முடிந்துள்ளது.

* இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் 20 விக்கெட்டுகளையும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களே கைப்பற்றினர். ஒரு போட்டியில் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றுவது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக 1973-ல் சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும், 1976-ல் ஆக்லாந்தில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியிலும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

* 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறந்த வெற்றியை (அதிக விக்கெட் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி) பதிவு செய்துள்ளது இந்தியா.

* டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி பெற்ற 21-வது வெற்றி இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.