இலக்கு ஒன்றல்ல; இரண்டு!
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 5000 மீ. ஓட்டம், 10000 மீ. ஓட்டம் என இரண்டிலும் பதக்கம்


ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 5000 மீ. ஓட்டம், 10000 மீ. ஓட்டம் என இரண்டிலும் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே இலக்கு என்கிறார் புதுக்கோட்டையைச் சேர்ந்த ராணுவ வீரரான லட்சுமணன்.
புணேவில் ஜூலை 3 முதல் 7 வரை நடைபெறவுள்ள 20-வது ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழக வீரர்களில் லட்சுமணனும் ஒருவர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சொக்கூரணி என்ற கிராமத்தில் பிறந்த லட்சுமணன், தனது தடகள வாழ்க்கையில் வறுமை உள்ளிட்ட பல தடைகளைத் தாண்டி வந்துள்ளார். சரியான மைதானம்கூட இல்லாத நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் 18 கி.மீ. தூரம் ஓடி பயிற்சி பெற்று ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.
எம்.ஆர்.சி. ராணுவ மையத்தில் பணியில் சேர்ந்தபோதுதான் லட்சுமணனின் தடகள வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. முறையான பயிற்சி பெறுவதற்கு சரியான வாய்ப்புகள் கிடைத்தன. இதன்பிறகு புணேவில் உள்ள ராணுவ விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற்ற லட்சுமணன், தற்போது பெங்களூரில் இந்திய தடகள அணியின் பயிற்சி முகாமில் உள்ளார்.
ஆசிய தடகளப் போட்டி பற்றி கேட்டபோது, அவர் கூறியது: தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருந்தாலும், ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிதான் நான் பங்கேற்கவுள்ள முதல் சர்வதேசப் போட்டி. சுமார் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றாலும், எனக்கு எவ்வித பயமும் இல்லை.
கடும் முயற்சியும், தீவிரப் பயிற்சியும் மேற்கொண்டு வருவதால் இந்தப் போட்டியில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்னால் முடிந்த அளவுக்கு முயற்சிப்பேன். தங்கப் பதக்கம் வென்றால் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுவிட முடியும்.
இல்லாவிட்டால் 5000 மீ. ஓட்டத்தில் 13.29 நிமிடங்களிலும், 10000 மீ. ஓட்டத்தில் 28 நிமிடங்களிலும் இலக்கை எட்டும் பட்சத்தில் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க தகுதி பெற முடியும். 5000 மீ. ஓட்டத்தில் 13.29 நிமிடங்களில் இலக்கை எட்டினால் தேசிய சாதனையையும் சமன் செய்ய முடியும்.
எம்.ஆர்.சி. ராணுவ மையத்தின் உதவியால்தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். எனவே இந்தப் போட்டியில் பதக்கம் வென்று ராணுவ மையத்துக்கும், தமிழகத்துக்கும், நான் பிறந்த புதுக்கோட்டைக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
வென்ற பதக்கங்கள்: தேசிய கிராஸ் கன்ட்ரி போட்டிகளில் 5000 மீ., 10000 மீ. ஓட்டங்களில் தங்கம் வென்றுள்ளார்.
இதேபோல் ராணுவ விளையாட்டுப் போட்டிகளில் கணிசமான பதக்கங்களை குவித்துள்ளார்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் 5000 மீ. ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், 10000 மீ. ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
பயிற்சியாளர்: லட்சுமணனின் ராணுவப் பயிற்சியாளரான சுரேந்திரா சிங் கூறுகையில், "சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியைப் போன்றே, ஆசிய தடகளப் போட்டியிலும் லட்சுமணன் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது' என கூறினார்.
சுரேந்திரா சிங், இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...