விம்பிள்டனில் சறுக்கிய ஜாம்பவான்கள்!
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வெல்லக்கூடியவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட ஸ்பெயினின் ரஃபேல் நடால், முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.


கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வெல்லக்கூடியவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட ஸ்பெயினின் ரஃபேல் நடால், முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
விம்பிள்டனில் நடால் மட்டுமல்ல, முந்தைய காலங்களில் பீட் சாம்ப்ராஸ், ஆந்த்ரே அகஸ்ஸி, லெய்டன் ஹெவிட், மார்ட்டினா ஹிங்கிஸ் போன்ற ஜாம்பவான்களும் ஆரம்ப சுற்றுகளிலேயே தோல்வி கண்டு சறுக்கலை சந்தித்துள்ளனர். அதன் விவரம்:
ரஃபேல் நடால்: தற்போது நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் உலகின் 5-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் தனது முதல் சுற்றில் 6-7 (4), 6-7 (8), 4-6 என்ற நேர் செட்களில் பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்சிஸிடம் தோல்வி கண்டார்.
2012 விம்பிள்டனில் ரஃபேல் நடால், 2-வது சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். அப்போது செக்.குடியரசின் லூகாஸ் ரஸþல் 6-7, 6-4, 6-4, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் நடாலுக்கு அதிர்ச்சி தோல்வி கொடுத்தார்.
ஆஸ்திரேலிய ஓபனில் ஒரு முறை, பிரெஞ்சு ஓபனில் 8 முறை, விம்பிள்டனில் 2 முறை, அமெரிக்க ஓபனில் ஒருமுறை என மொத்தம் 12 ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் நடால்.
லெய்டன் ஹெவிட்: 2003-ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நடப்புச் சாம்பியனாகக் களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் லெய்டன் ஹெவிட், முதல் சுற்றோடு வெளியேறினார்.
அந்தப் போட்டியில் முதல் நிலை வீரராக இருந்த ஹெவிட், தனது முதல் சுற்றில் 6-1, 6-7, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 202-வது இடத்தில் இருந்தவரான "6 அடி, 10 அங்குலம்' உயரம் கொண்ட குரோஷியாவின் இவோ கார்லோவிக்கிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.
விம்பிள்டன் வரலாற்றில் நடப்புச் சாம்பியன் ஒருவர் முதல் நாளிலேயே வெளியேறியது 2-வது முறையாகும். லெய்டன் ஹெவிட், விம்பிள்டனில் ஒரு பட்டம், அமெரிக்க ஓபனில் ஒரு பட்டம் என மொத்தம் இரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். தனது சொந்த ஊரில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபனில் அவர் பட்டம் வென்றதில்லை. 2005-ல் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் அதிகபட்சமாக இறுதிச்சுற்று வரை மட்டுமே முன்னேறினார்.
பீட் சாம்ப்ராஸ்: டென்னிஸ் வரலாற்றில் "ஓபன் எராவில்' எப்போதுமே சிறந்த வீரராக நினைவுகூரப்படுபவர் அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ். 1990-களில் சர்வதேச டென்னிûஸ தன்வசம் வைத்திருந்த சாம்ப்ராஸ், விம்பிள்டனில் 1993 முதல் 2000 வரையிலான 8 ஆண்டுகளில் 7 பட்டங்களை வென்றவர் ஆவார். 1996-ல் மட்டுமே இவர் பட்டம் வெல்லவில்லை.
எனினும் 2002-ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் போட்டியில் 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்தார். அப்போது உலகின் 6-ம் நிலை வீரராக இருந்த பீட் சாம்ப்ராஸ் 3-6, 2-6, 6-4, 6-3, 4-6 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 145-வது இடத்தில் இருந்த ஸ்விட்சர்லாந்தின் ஜார்ஜ் பாஸ்டிலிடம் தோல்வி கண்டார். சாம்ப்ராஸýக்கு அதுவே கடைசி விம்பிள்டன் போட்டியாகவும் அமைந்தது.
அந்த ஆண்டில் விம்பிள்டனில் 2-வது சுற்றோடு வெளியேறினாலும், பின்னர் நடைபெற்ற அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றார். அதைத் தொடர்ந்து டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஆஸ்திரேலிய ஓபனில் 2, விம்பிள்டனில் 7, அமெரிக்க ஓபனில் 5 என மொத்தம் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அதிக ஒற்றையர் பட்டம் வென்றவர்கள் வரிசையில் ஃபெடரருக்கு (17 பட்டங்கள்) அடுத்தபடியாக 2-வது இடத்தில் உள்ளார். எனினும் பீட் சாம்ப்ராஸ், பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்த்ரே அகஸ்ஸி: 2002-ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டனில் 2-வது சுற்றோடு வெளியேறிய மற்றொரு முன்னணி வீரர் அமெரிக்காவின் ஆந்த்ரே அகஸ்ஸி ஆவார். அந்தப் போட்டியில் 3-ம் நிலை வீரராக இருந்த அகஸ்ஸி 4-6, 6-7, 2-6 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் இல்லாத தாய்லாந்தின் பராதர்ன் ஸ்ரீசப்பானிடம் தோல்வி கண்டார். இந்த ஆட்டம் 50 நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்தது.
அகஸ்ஸி ஆஸ்திரேலிய ஓபனில் 4, பிரஞ்சு ஓபனில் 1, விம்பிள்டனில் 1, அமெரிக்க ஓபனில் 2 என மொத்தம் 8 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
மார்ட்டினா ஹிங்கிஸ்: 1999-ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
சர்வதேச தரவரிசையில் 129-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ஜெலீனா டோகிக் 6-2, 6-0 என்ற நேர் செட்களில் மார்ட்டினாவை தோற்கடித்தார்.
1997-ல் நடைபெற்ற விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்றவரான ஹிங்கிஸ், தகுதிச்சுற்றில் விளையாடி பிரதான சுற்றுக்கு முன்னேறிய ஜெலீனாவிடம் தோல்வி கண்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மார்ட்டினா ஹிங்கிஸ் ஆஸ்திரேலிய ஓபனில் 3, விம்பிள்டனில் 1, அமெரிக்க ஓபனில் 1 என மொத்தம் 5 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். பிரெஞ்சு ஓபனில் 1997, 1999 ஆகிய ஆண்டுகளில் அவர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியபோதும் பட்டம் வெல்ல முடியவில்லை.
விளையாட்டில் ஏற்ற இறக்கமும், ஜாம்பவான்கள் சறுக்குவதும், யாரும் எதிர்பார்க்காத ஒருவர் வெற்றி பெறுவதும் சகஜம் என்பதற்கு விம்பிள்டன் ஒரு நல்ல உதாரணம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...