ஜம்ப் ஒன்று; சாதனை மூன்று!
ஆசிய தடகளப் போட்டியில் 8.10 மீ. தூரம் தாண்டும்பட்சத்தில், பதக்கம் வெல்வது, தேசிய சாதனையை முறியடிப்பது, உலக தடகளப் போட்டிக்கு தகுதி பெறுவது என 3 சாதனைகளை செய்ய முடியும் என்கிறார் தமிழக நீளம் தாண்டுதல் வீரர் பிரேம் குமார்.


ஆசிய தடகளப் போட்டியில் 8.10 மீ. தூரம் தாண்டும்பட்சத்தில், பதக்கம் வெல்வது, தேசிய சாதனையை முறியடிப்பது, உலக தடகளப் போட்டிக்கு தகுதி பெறுவது என 3 சாதனைகளை செய்ய முடியும் என்கிறார் தமிழக நீளம் தாண்டுதல் வீரர் பிரேம் குமார்.
புணேவில் நடைபெறவுள்ள 20-வது ஆசிய தடகளப் போட்டியில் பதக்கம் வெல்லக்கூடியவர்கள் என்று எதிர்பார்க்கப்படும் இந்திய வீரர்களில் தமிழகத்தின் பிரேம் குமாரும் ஒருவர். இவர் ஆடவர் நீளம் தாண்டுதலில் பங்கேற்கிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவரான பிரேம் குமார், சென்னை செயின்ட் ஜோசப் விளையாட்டு அகாதெமியில் பயிற்சி பெற்று வருகிறார். தடகளப் பயிற்சியாளர் நாகராஜால் செதுக்கப்பட்ட சிறந்த வீரர்களில் இவரும் ஒருவர்.
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் ஆடவர் நீளம் தாண்டுதலில் 8 மீ. தூரம் தாண்டியதன் மூலம் இப்போட்டியில் அதிகபட்ச தூரம் தாண்டியவர் என்ற புதிய சாதனையைப் படைத்தார்.
இதன்மூலம் இந்தப் போட்டியில் இருந்த 12 ஆண்டுகால சாதனையை தகர்த்தார். முன்னதாக 2001-ல் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில் மேற்கு வங்கத்தின் சஞ்சய் குமார் ராய், 7.92 மீ. தூரம் தாண்டியதே சாதனையாக இருந்தது.
தேசிய அளவில் 8 மீ. தூரம் தாண்டிய 4-வது இந்தியர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரான பிரேம் குமாரிடம் ஆசிய தடகளப் போட்டி குறித்து கேட்டபோது அவர் கூறியது:
இந்தியாவில், அதுவும் நான், இரண்டுக்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற புணே மைதானத்தில் ஆசிய தடகளப் போட்டி நடைபெறுகிறது. தாய் நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் இப்போட்டியில் பங்கேற்கவிருப்பது கூடுதல் பலமாகும்.
புணே மைதானத்தில்தான் 20 வயதுக்குட்பட்டோருக்கான நீளம் தாண்டுதலில் 7.94 மீ. தூரம் தாண்டி தேசிய சாதனை படைத்தேன். இதேபோல் அங்கு நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் 7.65 மீ. தூரம் தாண்டி தங்கம் வென்றதோடு, புதிய சாதனையும் படைத்தேன்.
நான் இரு சாதனைகளை செய்த மைதானத்தில் நடைபெறும் ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்கவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சீனியர் பிரிவில் 8.08 மீ. தூரம் தாண்டியதே தேசிய சாதனையாக உள்ளது. ஆசிய தடகளப் போட்டியில் 8.10 மீ. தூரம் தாண்ட வேண்டும் என முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அந்த இலக்கை எட்டும்பட்சத்தில் பதக்கம் வெல்வது மட்டுமின்றி, புதிய தேசிய சாதனை படைப்பதோடு, உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றுவிடுவேன். அந்த இலக்கை நோக்கித்தான் இப்போது நீளம் தாண்டிக் கொண்டிருக்கிறேன் என்றார்.
சாதனைகள்: ஜூனியர் பிரிவில் 18 மற்றும் 20 வயதுக்குட்பட்டோருக்கான நீளம் தாண்டுதலில் தேசிய சாதனை பிரேம் குமார் வசமே உள்ளது. ஜூனியர் பிரிவில் தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். சீனா மற்றும் இலங்கையில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
சீனியர் பிரிவில் 2011-ல் ராஞ்சியில் நடைபெற்ற தேசிய தடகளப் போட்டியில் வெண்கலமும், 2012-ல் நடைபெற்ற தேசிய ஓபன் தடகளத்தில் தங்கமும், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற ஆசிய கிராண்ட்ப்ரீ போட்டிகளில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரு பதக்கங்களையும், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் தங்கமும் வென்றுள்ளார்.
ஸ்பெயினில் நடைபெற்ற ஜூனியர் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டுக்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற புணே மைதானத்தில் ஆசிய தடகளப் போட்டி நடைபெறுகிறது.தாய் நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் இப்போட்டியில் பங்கேற்கவிருப்பது கூடுதல் பலமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...