துரோணாச்சார்ய விருது: பாஸ்கரன் வேதனை
துரோணாச்சார்ய விருதை மத்திய அரசே வழங்கியிருக்க வேண்டும்; அதை கேட்டுப் பெறுவதில் எனக்கு விருப்பமில்லை என்று இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான வாசுதேவன் பாஸ்கரன் தெரிவித்தார்.


துரோணாச்சார்ய விருதை மத்திய அரசே வழங்கியிருக்க வேண்டும்; அதை கேட்டுப் பெறுவதில் எனக்கு விருப்பமில்லை என்று இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான வாசுதேவன் பாஸ்கரன் தெரிவித்தார்.
சிறந்த பயிற்சியாளருக்கு வழங்கப்படும் துரோணாச்சார்ய விருதுக்கு பாஸ்கரனின் பெயரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பாக பாஸ்கரனிடம் கேட்டபோது, "மத்திய விளையாட்டு அமைச்சகம் தானாகவே முன் வந்து துரோணாச்சார்ய விருதை கொடுத்திருக்க வேண்டும். விருதை கேட்டுப் பெறுவதில் எனக்கு விருப்பமில்லை. அதனால்தான் இத்தனை ஆண்டுகளாக நான் விருதுக்கு விண்ணப்பிக்கவில்லை. வீரர்கள் மற்றும் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரிலேயே விருதுக்கு விண்ணப்பித்திருக்கிறேன்.நான் தலைமைப் பயிற்சியாளராக இருந்தபோது என்னுடன் உதவிப் பயிற்சியாளர்களாக பணியாற்றிய பல்தேவ் சிங்குக்கு 2009-லும், அஜய் குமார் பன்சாலுக்கு 2010-லும், ரஜீந்தர் சிங்குக்கு 2011-லும், ஹரேந்திரா சிங்குக்கு 2012-லும் துரோணாச்சார்ய விருது வழங்கப்பட்டது. ஆனால் எனது பெயர் இப்போதுதான் துரோணாச்சார்யா விருதுக்கு பரிந்துரையே செய்யப்பட்டுள்ளது ' என்றார்.
பாஸ்கரனின் சாதனைகள்: பாஸ்கரன், இரு ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியவர். 1980-ல் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு கேப்டனாக இருந்தவர். இந்த சாதனைக்காக 1980-ல் அவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
1986-ல் இந்திய அணிக்காக விளையாடியபோதே, ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற 4 நாடுகள் ஹாக்கிப் போட்டிக்கு பயிற்சியாளராகவும் இருந்தவர். ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் பாஸ்கரன்.
இரு உலகக் கோப்பை போட்டிகள் (1998, 2006), இரு சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் (1996, 2001), 2000-ல் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி, 1996-ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் விளையாடிய இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருந்தவர்.
1995-ல் நடைபெற்ற அஸ்லன் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியில் இவரது பயிற்சியின் கீழ் பங்கேற்ற இந்திய அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இதுதவிர ஜூனியர் உலகக் கோப்பையில் முதல்முறையாக பதக்கம் (வெள்ளி) வென்ற இந்திய அணிக்கும் இவர்தான் பயிற்சியாளர். இவரது பயிற்சியின் கீழ் 167 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 114-ல் வெற்றி கண்டுள்ளது. ரயில்வே அணிக்கு 13 ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் முதல் நிலை (கிரேடு 1) பயிற்சியாளர் சான்றிதழ் பெற்ற ஒரே இந்தியரான இவர், சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைசிறந்த 8 பயிற்சியாளர்களில் ஒருவரும்கூட.
இந்திய ஹாக்கி வீரர்கள் அர்ஜுன், தன்ராஜ் பிள்ளை, தினேஷ் நாயக், ஆடம் சின்கிளேயர், இந்திய அணியின் தற்போதைய கேப்டன் சர்தார் சிங், சந்தீப் சிங், ரகுநாத், கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் போன்ற முன்னணி வீரர்கள் இவரிடம் பயிற்சி பெற்றவர்கள்.
துரோணாச்சார்ய விருதுக்கு பாஸ்கரனின் பெயர் மிகவும் காலதாமதமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பல்வேறு ஹாக்கி வீரர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறியது:
இந்திய ஹாக்கிக்கு பெரும் பங்களிப்பை செய்த பாஸ்கரனுக்கு அவர் விண்ணப்பிக்காமலேயே துரோணாச்சார்யா விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவரின் பங்களிப்பு, மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கும், இந்தியாவில் ஹாக்கியை நிர்வகிக்கும் ஹாக்கி இந்தியாவுக்கும் தெரியாததல்ல. ஆனாலும், அவர் இவ்வளவு காலம் புறக்கணிக்கப்பட்டுள்ளார். தமிழகமும் கூட இதற்கு முன்பு வரை துரோணாச்சார்ய விருதுக்கு பாஸ்கரன் பெயரை பரிந்துரை செய்யவில்லை.
தற்போது நண்பர்கள் மற்றும் எங்களைப் போன்ற வீரர்களின் வற்புறுத்தல் காரணமாகவே துரோணாச்சார்ய விருதுக்கு பாஸ்கரன் விண்ணப்பித்துள்ளார். அதன்பேரிலேயே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அவரின் விண்ணப்பத்தை மத்திய விளையாட்டு அமைச்சக செயலருக்கு அனுப்பியுள்ளது' என்று ஹாக்கி வீரர்கள் தெரிவித்தனர்.
இந்திய ஹாக்கிக்காக சிறப்பாக பணியாற்றிய தமிழகத்தின் பாஸ்கரனுக்கு இந்த முறையாவது துரோணாச்சார்ய விருது வழங்கப்பட வேண்டும். அவரின் சாதனைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே ஹாக்கி வீரர்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...