

விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற 3 இந்தியர்களுக்கும் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
விம்பிள்டன் கலப்பு இரட்டையர் போட்டியில் லியாண்டர் பெயஸ் - ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் பெயஸ் - ஹிங்கிஸ் ஜோடி, பெயா - பபோஸ் ஜோடியை 6-1, 6-1 என நேர் செட்களில் எளிதான முறையில் வெற்றி கண்டு விம்பிள்டன் பட்டத்தை வென்றது. 42 வயதான பெயஸுக்கு இது 16-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
ஜுனியர் விம்பிள்டன் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல் - நாம் ஹோங்லி (வியட்நாம்) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் உள்ள சுமித் - ஹோங்லி ஜோடி, போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்திலுள்ள ரெய்லி ஓபெல்கா (அமெரிக்கா) - அகிரா சான்டில்லன் (ஜப்பான்) ஜோடியை எதிர்கொண்டது. இதில் சுமித் ஜோடி, 7-6(4), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. 17 வயதான சுமித் நாகல் புது தில்லியை சேர்ந்தவர் ஆவார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தார் இந்தியாவின் சானியா மிர்ஸா. விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, ரஷியாவின் எகர்டினா மகரோவா - எலீனா வெஸ்னினா ஜோடியை எதிர்கொண்டது. மொத்தத்தில் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் நீடித்த இந்த பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் 5-7, 7-6 (7/4), 7-5 என்ற செட் கணக்குகளில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி வெற்றி பெற்று விம்பிள்டன் இரட்டையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் மகளிர் இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாறு படைத்தார் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா.
இந்த மூன்று இந்தியர்களின் சாதனைகளுக்கும் தன்னுடைய ட்விட்டர் பக்கம் வழியாக சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.