அரசியலமைப்பை பின்பற்ற வேண்டும்: இர்பான் பதானின் ட்வீட்டும் மிஸ்ராவின் அசத்தல் பதிலும்

"என் நாடு. அழகான நாடு. உலகின் மிகப் பெரிய நாடாகும் வல்லமை கொண்டது. ஆனால், அரசியலமைப்புதான் பின்பற்ற வேண்டிய முதல் புத்தகம் என்பதை ஒரு சிலர் உணர்ந்தால் மட்டுமே அது சாத்தியம்" 
கோப்புப்படம்
கோப்புப்படம்

முன்னாள் கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான், அமித் மிஸ்ரா ஆகியோர் ட்விட்டரில் இந்தியா பற்றி பதிவுகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

இந்தியாவின் வல்லமை குறித்து பதிவிட்ட இர்பான் பதான், "என் நாடு. அழகான நாடு. உலகின் மிகப் பெரிய நாடாகும் வல்லமை கொண்டது. ஆனால், " என வாக்கியத்தை நிறைவு செய்யாமல் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக வாக்கியத்தை நிறைவு செய்த அமித் மிஸ்ரா, "என் நாடு. அழகான நாடு. உலகின் மிகப் பெரிய நாடாகும் வல்லமை கொண்டது. ஆனால், அரசியலமைப்புதான் பின்பற்ற வேண்டிய முதல் புத்தகம் என்பதை ஒரு சிலர் உணர்ந்தால் மட்டுமே அது சாத்தியம்" என பதிவிட்டார்.

எது குறித்து ட்வீட் செய்துள்ளார்கள் என்பதை இருவரும் விளக்கவில்லை என்றாலும், தில்லி ஜஹாங்கீர்புரியில் நடைபெற்ற வன்முறை பற்றிய பதிவுதான் இது என சமூகவலைதள பயனாளர்கள் இதை ட்ரெண்ட் செய்ய தொடங்கினர். 

துணிவு இருந்தால் வாக்கியத்தை நிறைவு செய்யும்படி பலர் பதானை கடுமையாக சாடினர். கிரிக்கெட் மூலம் பெற்ற நற்பெயரை இழந்தவிட வேண்டாம் என்றும் ஒரு சிலர் கருத்து பதிவிட்டிருந்தனர். இதையடுத்து, பதானின் வாக்கியத்தை மிஸ்ரா நிறைவு செய்ய இது ட்விட்டரில் விவாத பொருளாக மாறியது. 

முன்னதாக, சனிக்கிழமையன்று ஹனுமான் ஜெயந்தி விழாவின்போது ஜஹாங்கீர்புரியில் வன்முறை வெடித்தது. பின்னர், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகக் கூறி இஸ்லாமியர்களின் வீடுகளையும் கடைகளையும் மாநகராட்சி இடித்து தள்ளியது. 

இதே போன்று உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறிப்பிட்ட சமூகத்தினரின் வீடுகள் கடைகள் ஆகியவை இடிக்கப்பட்டதா குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com