ஐபிஎல் 2022: இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்லப் போவது யார்?

இந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் புதிதாக அறிமுகமாகியுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளன.
கோப்புப் படம்
கோப்புப் படம்

இந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் புதிதாக அறிமுகமாகியுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளன.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொங்கப்பட்ட முதல் பருவத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. அதன் பிறகு மீண்டும் அந்த அணி ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மறுமுனையில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான புதிதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. 

இந்த இரு அணிகளும் நாளை (மே 29) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.  முதல் தகுதிச் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. நீக்குதல் (eliminator) சுற்றில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரஜத் பட்டிதாரிம் அதிரடி சதத்தால் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினை வீழ்த்தி 2-வது தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்ததால் அந்த அணிக்கு இறுதிச்சுற்றுக்கு முன்னேற மற்றொரு வாய்ப்பு கிடைத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. பெங்களூரு அணிக்கு எதிரான தகுதிச்சுற்று-2-ல் ஜாஸ் பட்லரின் அசத்தலான சதத்தால் பெங்களூருவை எளிதில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

இந்த ஆண்டு புதிதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் ஹர்திக் பாண்டியா தலைமையில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும், புள்ளிகள் பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியது. ஒரு கேப்டனாகவும் மற்றும் பேட்ஸ்மேனாகாவும் ஹர்திக் பாண்டியாவிற்கு இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு 14 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 45.30 சராசரியுடன் 453 ரன்கள் குவித்துள்ளார். அதே போல குஜராத் டைட்டன்ஸ் அணியில் டேவிட் மில்லர், சுப்மன் கில், ரஷிது கான், ராகுல் திவாடியா என ஒரு நட்சத்திர பட்டாளமே உள்ளது. 

குஜராத் அணியில் பந்துவீச்சினை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ரஷிது கான் அணியை முன்னின்று வழிநடத்துகின்றனர். இந்த பருவத்தில் முகமது ஷமி 19 விக்கெட்டுகளையும், ரஷிது கான் 18 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இவர்களைத் தவிர லாகி ஃபெர்கியூசன், யாஷ் தயால் மற்றும் சாய் கிஷோர் போன்றோரும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். 

முதல் பருவத்தின் வெற்றியாளரான ராஜஸ்தான் ராயல்ஸ் தனது இரண்டாவது கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது. மேலும், இந்த முறை ராஜஸ்தான் அணி கோப்பையை வெல்ல நினைப்பதற்கு உணர்வுபூர்வமான காரணமும் உள்ளது. முதல் பருவத்தில் ராஜஸ்தான் அணியினை வெற்றிகரமாக வழிநடத்தி கோப்பையை வென்றுத் தந்த ஷேன் வார்னே கடந்த மார்ச் மாதத்தில் உயிரிழந்தார். நாளை நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் கோப்பையை வெல்ல இது உணவுபூர்வமான காரணமாக பார்க்கப்படுகிறது. 

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் அந்த அணியின் நம்பிக்கை நாயகனாக பார்க்கப்படுகிறார். இந்த பருவத்தில் அதிக ரன்களை குவித்துள்ள வீரர் என்ற பெருமையையும் தன்வசம் வைத்துள்ளார். இதுவரை 16 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 58.86 சராசரியுடன் 824 ரன்கள் குவித்துள்ளார். அதில் 4 சதங்கள் மற்றும் 4 அரை சதங்கள் அடங்கும். பட்லருக்கு உதவியாக அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தினை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். அவர் இந்த பருவத்தில் இதுவரை 444 ரன்கள் குவித்துள்ளார். அவர்களைத் தவிர படிக்கல் மற்றும் ஜெய்ஸ்வால் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

பந்துவீச்சினைப் பொறுத்தவரை யுஸ்வேந்திர சாஹல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த பருவத்தில் ராஜஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். அவர் இதுவரை 26 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவரைத் தவிர டிரெண்ட் போல்ட், பிரஷித் கிருஷ்ணா போன்றோரும் சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது. நாளை 7.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு போட்டியானது 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

இறுதிப் போட்டியில் களமிறங்கும் இரு அணி வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு,

குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில்,மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் திவாடியா, ரஷிது கான், சாய் கிஷோர், யாஷ் தயால், அல்ஜாரி ஜோசப், முகமது ஷமி, பிரதீப் சங்வான், வருண் ஆரோன், ஜெயந்த் யாதவ், விஜய் சங்கர், குர்கீரத் சிங், அபிநவ் மனோகர், தர்ஷன் நல்கண்டே, ரஹமனுல்லா குர்பாஸ், டொமினிக் டிரேக்ஸ், சாய் சுதர்ஷன், நூர் அகமது மற்றும் லாகி ஃபெர்கியூசன்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: யாசஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன் ( கேப்டன் & விக்கெட் கீப்பர்), தேவ்துத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மேயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், பிரதீஷ் கிருஷ்ணா, ஒபெட் மெக்காய், யுஸ்வேந்திர சாஹல், கருண் நாயர், ஜேம்ஸ் நீசம், ராஷி வாண்டர் துசென், கார்பின் பாஸ்ச், நவ்தீப் சைனி, கே.சி.கரியப்பா, டேரில் மிட்செல்,தேஜாஸ் பரோகா, குல்தீப் யாதவ், அனுநாய் சிங், குல்தீப் சென், துருவ் ஜுரெல் மற்றும் ஷுபம் கார்வால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com