ஆசியப் போட்டி: 86 வருட சாதனையை முறியடித்து பெரிய வெற்றியடைந்த இந்திய ஹாக்கி அணி!

ஹாங்காங் சீனாவுக்கு எதிரான ஆடவர் ஹாக்கி ஆட்டத்தில் சாதனை வெற்றியை நிகழ்த்தியுள்ளது இந்திய அணி.
ஆசியப் போட்டி: 86 வருட சாதனையை முறியடித்து பெரிய வெற்றியடைந்த இந்திய ஹாக்கி அணி!

ஹாங்காங் சீனாவுக்கு எதிரான ஆடவர் ஹாக்கி ஆட்டத்தில் சாதனை வெற்றியை நிகழ்த்தியுள்ளது இந்திய அணி.

இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா மீண்டும் தங்கம் வென்று 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடித் தகுதி பெறும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில் ஏ பிரிவில் இந்தியாவும் ஹாங்காங் சீனாவும் இன்று மோதின. உலகின் 5-ம் நிலை அணியான இந்தியா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. முதல் காலிறுதியில் இந்திய அணி 6 கோல்களை அடித்து முன்னிலை பெற்றது. அடுத்தக் காலிறுதியில் கோல் மழை மேலும் அதிகரித்தது. 14 கோல்கள் அடித்து வலுவான நிலையில் இருந்தது இந்தியா. அடுத்தக் காலிறுதியில் 4 கோல்கள் அடிக்க 18-0 என முன்னிலை பெற்றது. ஆட்ட முடிவில் 26-0 என ஹாங்காங் சீனாவை வீழ்த்து சாதனை வெற்றியை அடைந்தது இந்தியா. 

இந்த வெற்றியின் மூலம் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 1932 ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி, அமெரிக்காவை 24-1 எனத் தோற்கடித்தது. இந்தியா பங்குபெற்ற ஆட்டங்களில் அதுவே அதிக கோல் வித்தியாசத்தில் வென்ற ஆட்டமாகக் கருதப்பட்டது. தற்போது 26-0 என வெற்றி கண்டு புதிய சாதனையைப் படைத்துள்ளது இந்திய அணி. 

தொடக்க ஆட்டத்தில் இந்தோனேஷியாவை 17-0 எனத் தோற்கடித்தது இந்தியா. ஆசிய விளையாட்டுப் போட்டியில் அதிக கோல் வித்தியாசத்தில் வென்ற அணி என்கிற சாதனையை அன்று நிகழ்த்தியது இந்தியா. இந்நிலையில் இன்றும் மற்றொரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 24 அன்று ஜப்பானையும் ஆகஸ்ட் 26 அன்று கொரியாவையும் ஆகஸ்ட் 28 அன்று இலங்கையையும் எதிர்கொள்கிறது இந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com