உலகக் கோப்பை: இந்திய அணியின் முயற்சியைக் கேள்விக்குள்ளாக்கும் வக்கார் யூனுஸ்!

பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுகிறதா இல்லையா என்பது பற்றி நான் கவலைப்படவில்லை...
உலகக் கோப்பை: இந்திய அணியின் முயற்சியைக் கேள்விக்குள்ளாக்கும் வக்கார் யூனுஸ்!

2019 உலகக் கோப்பையில் இந்தியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் தோல்வியைப் பரிசளித்தது இங்கிலாந்து.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய இங்கிலாந்து 337/7 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 306/5 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணி தோல்வியடைந்ததன் மூலம் பாகிஸ்தான்  அணி அரையிறுதிக்குச் செல்வது தற்போது மேலும் கடினமாகிவிட்டது. 9 புள்ளிகள் கொண்ட பாகிஸ்தான் அடுத்ததாக வங்கதேச அணியைத் தோற்கடிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணி நியூஸிலாந்திடம் தோற்கவேண்டும். இந்த இரண்டும் நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் 11 புள்ளிகளுடன் அரையிறுதிக்குத் தகுதி பெறமுடியும். 

நேற்று இந்திய அணி விளையாடிய விதம் இந்திய ரசிகர்களை மட்டுமல்லாமல் பாகிஸ்தான் ரசிகர்களையும் நோகடித்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்காக பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச ரசிகர்கள் பிரார்த்தனை செய்த நிலையில் இந்திய அணி விளையாடிய விதம் கடும் விமரிசனங்களை வரவழைத்துள்ளது. வெற்றி பெறவேண்டும் என்று விளையாடியது போல இல்லை என்று இந்திய அணியின் தோல்வியினால் பாதிக்கப்பட்ட ரசிகர்கள் கருத்து கூறியுள்ளார்கள். 

பாகிஸ்தானின் முன்னாள் வீரர் வக்கார் யூனூஸும் இந்திய அணி மீதான தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

நீங்கள் யார் என்பதல்ல, நீங்கள் உங்கள் வாழ்க்கையில் என்ன செய்கிறீர்கள் என்பதே உங்களை வெளிப்படுத்துகிறது. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுகிறதா இல்லையா என்பது பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் விளையாட்டு அறம் குறித்த சோதனையில் சிலர் தோல்வியடைந்துவிட்டார்கள் என்று கூறி #INDvsEND #CWC2019 போன்ற ஹேஷ்டேக்குகளையும் தன்னுடைய ட்வீட்டில் பயன்படுத்தியுள்ளார். இதன்மூலம் அவருடைய கோபம், இந்திய அணி மீதானது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com