
பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்களை சேர்த்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில் ஆட்டம் சமனில் முடிந்தது.
இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 15 ரன்களை சேர்த்தது. பின்னர் விளையாடிய நியூஸிலாந்தும் 15 ரன்களே எடுத்ததால், சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. இதையடுத்து, இந்த ஆட்டத்தில் 6 பவுண்டரிகள் அதிகமாக விளாசியதன் அடிப்படையில் இங்கிலாந்து வென்று கோப்பையைக் கைப்பற்றியது. இதன் மூலம் தங்களது 44 ஆண்டு கால கனவை நனவாக்கியது மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி. 2015 உலகக் கோப்பை போட்டியைப் போலவே 2019 இறுதி ஆட்டத்திலும் 2-ஆம் இடத்தையே பெற்று ஏமாற்றமடைந்தது நியூஸிலாந்து.
98 பந்துகளில் 84 ரன்கள் விளாசி அவுட்டாகாமல் இருந்த பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் 10 ஆட்டங்களில் 578 ரன்கள் எடுத்து, தனது அணியை நன்கு வழிநடத்தி 2-ம் இடத்தைப் பிடிக்க முக்கியக் காரணமாக இருந்த நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்குத் தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது.
உலகக் கோப்பை: இறுதிச்சுற்றில் ஆட்ட நாயகன் விருது பெற்ற வீரர்கள்
1975: லாயிட்
1979: ரிச்சர்ட்ஸ்
1983: அமர்நாத்
1987: பூன்
1992: அக்ரம்
1996: அரவிந்த் டி சில்வா
1999: வார்னே
2003: பாண்டிங்
2007: கில்கிறிஸ்ட்
2011: தோனி
2015: ஃபாக்னர்
2019: ஸ்டோக்ஸ்
உலகக் கோப்பை: தொடர் நாயகன் விருது பெற்ற வீரர்கள்
1992: குரோவ்
1996: ஜெயசூர்யா
1999: க்ளூஸ்னர்
2003: டெண்டுல்கர்
2007: மெக்ராத்
2011: யுவ்ராஜ்
2015: ஸ்டார்க்
2019: வில்லியம்சன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.