மாற்றங்கள் இருந்தாலும் தென்னாப்பிரிக்கா பலம் வாய்ந்த அணி தான்: விராட் கோலி

தென்னாப்பிரிக்க அணியில் டேல் ஸ்டெயின் இல்லாமல் இருந்தாலும், அந்த அணி பலம் வாய்ந்த அணி தான் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 
மாற்றங்கள் இருந்தாலும் தென்னாப்பிரிக்கா பலம் வாய்ந்த அணி தான்: விராட் கோலி


தென்னாப்பிரிக்க அணியில் டேல் ஸ்டெயின் இல்லாமல் இருந்தாலும், அந்த அணி பலம் வாய்ந்த அணி தான் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை (புதன்கிழமை) தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதற்கு முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று சௌதாம்ப்டனில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தென்னாப்பிரிக்க அணியில் மாற்றங்கள் இருந்தாலும் அது பலம் வாய்ந்த அணி தான் என்று கோலி தெரிவித்தார். 

தென்னாப்பிரிக்க அணியில் ஸ்டெயின் காயம் காரணமாக விலகியுள்ளார். இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

பதில்: வீரர்களுக்கு காயங்கள் ஏற்படுவது இயல்பான விஷயம் தான். அதை முன்கூட்டியே கணிக்க முடியாது. எந்த அணியாக இருந்தாலும், வீரர்களுக்கு காயம் ஏற்படுவது நல்லதல்ல. இருப்பினும், தென்னாப்பிரிக்க அணி திறமையான அணி. மாற்றங்கள் இருந்தாலும், அந்த அணி பலம் வாய்ந்த அணி தான். 

முக்கியமான வீரருக்கு காயம் ஏற்பட்டிருந்தாலும், எந்தவொரு அணியையும் நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம். இளம் வீரர் நல்ல மனநிலையில் இருந்தால், அன்றைய தினம் அவர் சிறப்பாக செயல்படலாம். அதற்கான மதிப்பை நாங்கள் கடைபிடிக்க வேண்டும். எங்களுடைய பலம் மற்றும் எங்களால் ஒரு அணியாக என்ன செய்ய முடியும் என்ற வகையில் தான் போட்டியை அணுக வேண்டும். 

டேல் ஸ்டெயினுக்காக வருந்துகிறேன். அவர் சிறப்பாக பந்துவீசி வந்தார். அவர் எனது நண்பர். தனது நாட்டுக்காக விளையாட அவர் உத்வேகத்துடன் இருந்தார். ஆனால், காயங்கள் அவருக்கு சாதகமாக அமையவில்லை. அவருடைய வேதனை எனக்கு புரிகிறது. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். 

மற்ற அணிகள் குறைந்தபட்சம் ஒரு ஆட்டத்திலாவது விளையாடியுள்ளன. ஆனால், இந்திய அணி இதுவரை ஒரு ஆட்டம் கூட விளையாடவில்லை. இது அணிக்கு சாதகமானதா அல்லது அணியில் பின்னடைவை ஏற்படுத்துமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

பதில்: இது அணிக்கு சாதகமாக ஒன்று தான். இதுவரை நடந்த ஆட்டங்கள் எப்படி இருந்தது, மேகங்கள் எந்த மாதிரியான மாற்றங்களை ஆட்டத்தில் நிகழ்த்துகிறது உள்ளிட்டவற்றை புரிந்துகொள்ள வேண்டும். வெயில் வந்துவிட்டால் அது முற்றிலும் வேறு ஒரு ஆட்டமாக மாறிவிடுகிறது. மற்ற அணிகள் விளையாடும் போது ஆட்டத்தின் தன்மை என்னவாக இருக்கிறது, அணுகுமுறை எவ்வாறு இருக்கிறது உள்ளிட்டவை கவனிக்கப்பட வேண்டும். இதுபோன்ற கோணங்களில் பார்க்கும்போது, அதிலிருந்து ஏராளமான விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. 

ஆட்டம் நடைபெறும் தினத்தன்று, ஒரு அணி அதற்கு முன்னதாக விளையாடியுள்ளதா, இல்லையா என்பது முக்கியமல்ல. அன்றைய தினம், அந்த அணி எவ்வாறு செயல்படுகிறது, எந்த மாதிரியான மன நிலையில் உள்ளது என்பதைப் பொறுத்து தான் உள்ளது. போட்டி நடைபெறும் தினத்தன்று மனதளவிலும், திறமை அடிப்படையிலும் நாங்கள் எதிரணியைக் காட்டிலும் பலமாக இருக்க வேண்டும். எங்களுடைய கவனம் அதில் தான் உள்ளது. 

தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா விராட் கோலியை முதிர்ச்சியற்றவர் என்று கூறியது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. 

பதில்: கடந்த காலங்களில் நான் நிறைய முறை ரபாடாவுக்கு எதிராக விளையாடியுள்ளேன். ஏதேனும், பேச வேண்டும் என்றால் அதை நாங்கள் நேரடியாக பேசிக் கொள்வோம். எந்தவொரு கேள்விக்கும் பதிலளிப்பதற்காக இந்த செய்தியாளர் சந்திப்பை நான் பயன்படுத்திக் கொள்ளமாட்டேன்.  

ரபாடா உலகத் தரம் வாய்ந்த வீரர். அவர் ஆர்வம் நிறைந்தவர். அவருடைய தினத்தன்று, எந்தவொரு பேட்டிங் வரிசையும் அவரால் சிதைக்க முடியும். கடந்த காலங்களில் நாங்கள் அவருக்கு எதிராக சிறப்பாக விளையாடியுள்ளோம். ஆனால், இதுபோன்ற உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எப்போதும் மதிப்பளிக்க வேண்டும்.  

இந்தப் பேட்டியில், காயத்தால் அவதிப்பட்டு வந்த கேதார் ஜாதவ் தற்போது முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் என்றும் விராட் கோலி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com