தோனி, பாண்டியா மிரட்டல் பினிஷிங்: இந்திய அணி 352 ரன்கள் குவிப்பு
By DIN | Published On : 09th June 2019 06:52 PM | Last Updated : 09th June 2019 06:52 PM | அ+அ அ- |

நன்றி: டிவிட்டர்/பிசிசிஐ
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்கள் குவித்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் நல்ல அடித்தளம் அமைத்தனர். தொடக்கத்தில் விக்கெட்டை பாதுகாத்து விளையாட, அதன்பிறகு துரிதமாக ரன் சேர்க்கத் துவங்கினார்.
முதலில் ஷிகர் தவான் அரைசதத்தை எட்டினார். அவரைத்தொடர்ந்து, ரோஹித் சர்மாவும் அரைசதத்தை எட்டினார். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களைக் கடந்து விளையாடியது. இந்த நிலையில், 57 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சர்மா கூல்டர் நைல் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, தவானுடன் விராட் கோலி இணைந்தார். கோலி இன்னிங்ஸை கட்டமைக்க, தவான் துரிதமாக ரன் சேர்க்க இந்திய அணியின் ரன் ரேட் நல்ல நிலையில் உயர்ந்தது. இதனிடையே, ஷிகர் தவான் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 17-வது சதத்தை அடித்தார்.
சதமடித்த தவான், அதிரடிக்கு மாறினார். ஆனால், அந்த அதிரடி நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அவர் 117 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து, ராகுல் மற்றும் தோனிக்கு முன்னதாக பாண்டியா களமிறக்கப்பட்டார். பாண்டியா தனது முதல் பந்திலேயே கொடுத்த கேட்ச் வாய்ப்பை, ஆஸ்திரேலியாவின் கீப்பர் தவறவிட பாண்டியா பிழைத்தார். இதையடுத்து, அவர் சிக்ஸரும் பவுண்டரியுமாக அடிக்க இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதேசமயம், விராட் கோலியும் தனது அரைசதத்தை எட்டினார். இது கோலியின் 50-வது அரைசதம் ஆகும்.
இதையடுத்து கோலியும், பாண்டியாவும் மாறி மாறி பவுண்டரிகளாக அடித்தனர். ஆஸ்திரேலியாவின் பிரதான பந்துவீச்சாளர்களான ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் ஓவர்களும் எடுபடவில்லை. இதனால், பாண்டியா அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 ரன்கள் குறைவாக ஆட்டமிழந்தார். அவர் 27 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 48 ரன்கள் எடுத்தார்.
கோலி, பாண்டியா இணை 3-வது விக்கெட்டுக்கு 53 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்து அணிக்கு முக்கியமான பங்களிப்பை அளித்தது.
பாண்டியாவைத் தொடர்ந்து தோனி களமிறங்கினார். தோனி, கோலி இணையும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை விளாசியது.
இந்த நிலையில், தோனி 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, விராட் கோலியும் 77 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் களமிறங்கிய ராகுல் 3 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரி உட்பட 11 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டாய்னிஸ் 2 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், கூல்டர் நைல் மற்றும் கம்மின்ஸ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.