மூளையதிர்ச்சி காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய அணி வீரர் வில் புக்கோவ்ஸ்கி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய 26 வயதான வில் புக்கோவ்ஸ்கி ஆஸ்திரேலிய அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்டார். இந்த நிலையில், அவரது தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக மூளையதிர்ச்சியால் மிகக்குறுகிய காலத்தில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தின்போது, இந்திய வீரர் கார்த்திக் தியாகி வீசிய பந்து வில் புக்கோவ்ஸ்கி தலையில் பயங்கரமாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மைதானத்தில் அப்படியே நிலைகுலைந்தார். இதையடுத்து அவருக்கு ஒன்பது கட்டங்களாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
வில் புக்கோவ்ஸ்கி 2021 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் அறிமுகமானார். இதுவே அவரது கடைசி போட்டியாகவும் அமைந்தது.
இதனால், மிகவும் பாதிக்கப்பட்ட வில் புக்கோவ்ஸ்கி பல்வேறு மருத்துவர்களின் ஆலோசனைபடி தான் இந்த ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
விக்டோரியா அணிக்காக 36 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள வில் புகோவ்ஸ்கி 45.19 சராசரியுடன் 7 சதங்கள் உள்பட 2,350 ரன்கள் எடுத்துள்ளார்.
அவர் 2017 ஆம் ஆண்டில் தனது முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆஸ்திரேலியாவில் பிரபலமான பிக் பாஷ் லீக்கில் விளையாடி உள்ள அவர் இதுவரை டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதில்லை.
விக்டோரியா அணிக்காக 2 இரட்டை சதங்கள் அடித்ததால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் புகோவ்ஸ்கி தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.