பும்ராவை குரங்கு இனத்துடன் ஒப்பிட்ட வர்ணனையாளர்! கொந்தளித்த ரசிகர்கள்!

இந்திய வீரர் பும்ராவை ‘பிரைமேட்’ என்று குறிப்பிட்டு வர்ணனை செய்தது பற்றி...
பும்ரா
பும்ராANI
Published on
Updated on
2 min read

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை குரங்கு இனத்துடன் ஒப்பிட்டு வர்ணனையாளர் பாராட்டியதற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பார்டர் - காவஸ்கர் தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. முதல் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் 1-1 என்று சமனில் உள்ளன.

தற்போது பிரிஸ்பேனின் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகின்றன. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மூன்றாம் நாளான இன்று இந்திய வீரர்கள் பேட்டிங் செய்து வருகின்றனர்.

பும்ராவை அவமதித்த வர்ணனையாளர்

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சிறப்பான பங்களிப்பை அணிக்காக வழங்கினார். அதேபோல், மூன்றாவது டெஸ்ட்டிலும் முதல் இன்னிங்ஸில் மட்டும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது, வர்ணனை செய்து கொண்டிருந்த பிரட் லீ, மிகவும் மதிப்புமிக்க வீரர் என்று பாராட்டினார்.

இதற்கு பதிலளித்த மற்றொரு வர்ணனையாளர் ஈசா குஹா, மிகவும் மதிப்புமிக்க பிரைமிட் என்று பும்ராவை குறிப்பிட்டார். (பிரைமிட் என்பது குரங்கு இனத்தைச் சேர்ந்த விலங்கு)

ரசிகர்கள் கண்டனம்

ஈசாவின் வர்ணனை இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், இந்திய ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

உலகின் தலைசிறந்த பவுலராக உள்ள பும்ராவை எப்படி குரங்கு இனத்துடன் ஒப்பிட முடியும்? இது திட்டமிட்டே வெளியிட்ட கருத்து என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஈசா குஹா மன்னிப்பு

இந்திய ரசிகர்களின் கண்டனத்தை தொடர்ந்து, மூன்றாவது நாள் போட்டியின் வர்ணனையில் ஈடுபட்ட ஈசா, பும்ரா மற்றும் இந்திய ரசிகர்களிடம் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

அவர் நேரலையில் பேசியதாவது:

”நேற்று வர்ணனையில் நான் பலவிதங்களில் எடுத்துக்கொள்ளக் கூடிய ஒரு வார்த்தையைப் பயன்படுத்தினேன். அதில் குற்றம் இருப்பின், அதற்காக நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். மற்றவர்களை மரியாதையுடன் நடத்தும் விஷயத்தில் நான் மிகவும் உயர்ந்த தரத்தை அமைத்துக் கொண்டுள்ளேன். முழு வர்ணனையும் நீங்கள் கேட்டால், இந்தியாவின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரைப் பற்றிய மிக உயர்ந்த பாராட்டு மட்டுமே நான் வெளிப்படுத்தி இருப்பேன். மேலும் நான் மிகவும் போற்றும் நபரில் அவரும் ஒருவர்.

நான் அவரது சாதனையின் மகத்துவத்தை வடிவமைக்க முயற்சித்தேன், நான் தவறான வார்த்தையைத் தேர்ந்தெடுத்திவிட்டேன். அதற்காக நான் ஆழ்ந்த வருந்துகிறேன். தெற்காசிய பாரம்பரியத்தைச் சேர்ந்த ஒருவர் என்ற முறையில் தெரிவித்துவிட்டேன், வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதை மக்கள் அங்கீகரிப்பார்கள் என்று நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னதாக கடந்த 2008ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஹர்பஜன் சிங்கை பார்த்தும் குரங்கு என்று ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் வர்ணனை செய்திருந்தார்.

தற்போது மீண்டும் இந்திய வீரரான பும்ராவை அவ்வாறு வர்ணனை செய்துள்ளது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com