

சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணியில் அறிமுகமாகியுள்ள பென் கரணுக்கு அறிமுக தொடர் அசத்தலானதாக அமைந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்காக பென் கரண் அண்மையில் அறிமுகமானார். அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது, ஜிம்பாப்வே அணியில் அறிமுக வீரராக களமிறங்கினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 26) தொடங்கியது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் ஜிம்பாப்வே அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 363 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
இதையும் படிக்க: உஸ்மான் கவாஜா மீதான அழுத்தத்தை போக்கிய சாம் கொன்ஸ்டாஸ்!
பென் கரண் அதிரடி
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய டெஸ்ட் போட்டியின் மூலம் ஜிம்பாப்வே அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுக வீரராக களமிறங்கிய பென் கரண் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 74 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம், அறிமுகப் போட்டியே அவருக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது.
யார் இந்த பென் கரண்?
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் கரண் யார் என இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தேட ஆரம்பித்தனர். பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாம் கரண் மற்றும் டாம் கரணின் சகோதரர் பென் கரண் என்பது தெரிய வந்தது.
28 வயதாகும் பென் கரண் நார்த்தாம்டனில் பிறந்துள்ளார். ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் கெவின் கரண், பென் கரணின் தந்தை ஆவார். அவர் இங்கிலாந்து அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன் பின், ஜிம்பாப்வேவுக்கு நகர்ந்த கெவின் கரண், அந்த நாட்டுக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடத் தொடங்கியுள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்காக விளையாடிய கெவின் கரண், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக கடந்த 2005 - 2007 ஆம் ஆண்டு இடைவெளியில் செயல்பட்டுள்ளார். இந்த நிலையில், கெவின் கரணின் மகனான பென் கரண் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம், ஜிம்பாப்வே அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார். அவரது தந்தையைப் போன்றே பென் கரணும் இங்கிலாந்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸின் நட்சத்திர பந்துவீச்சாளராகவும், சுட்டிக் குழந்தை எனவும் பலராலும் அறியப்பட்ட சாம் கரணும், பென் கரணும் சகோதரர்கள். இவர்களுக்கு டாம் கரண் என்ற மற்றுமொரு சகோதரரும் இருக்கிறார். இந்த சகோதரர்கள் மூவரும் குழந்தைப் பருவத்தில் ஜிம்பாப்வேவில் வளர்ந்துள்ளனர். ஆனால், சாம் கரண் மற்றும் டாம் கரண் இருவரும் இங்கிலாந்து அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.