
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜுக்கு, இளம் வீரர் நிதீஷ் குமார் ரெட்டியின் தந்தை முத்யாலு ரெட்டி நன்றி கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம், இந்திய அணியைக் காட்டிலும் ஆஸ்திரேலியா 333 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
முன்னதாக, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் குமார் ரெட்டி சதம் விளாசி அசத்தினார். அவர் 99 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கையில், இந்திய அணி அதன் 9-வது விக்கெட்டினை இழந்தது. அடுத்து களமிறங்கிய முகமது சிராஜ், பாட் கம்மின்ஸ் ஓவரில் மூன்று பந்துகளை சந்திக்க வேண்டியிருந்தது.
நிதீஷ் ரெட்டியின் தந்தை முத்யாலு ரெட்டி மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவும் நிதீஷ் ரெட்டி சதமடிக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டிருந்தது. முகமது சிராஜ் 3 பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டு தடுப்பாட்டத்தை வெளிப்படுத்த, நிதீஷ் ரெட்டி டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை விளாசி அசத்தினார்.
முகமது சிராஜுக்கு நன்றி
தனது மகன் சதம் விளாசுவதற்கு விக்கெட்டை இழக்காமல் உறுதுணையாக இருந்த முகமது சிராஜுக்கு நிதீஷ் குமார் ரெட்டியின் தந்தை முத்யாலு ரெட்டி நன்றி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: முகமது சிராஜ் பேட் செய்ய வந்தபோது, நான் சிறிது பதற்றமாக இருந்தேன். அவர் எப்படி விளையாடுவர் என நினைத்து பதற்றமாக இருந்தது. அவர் ஆட்டமிழக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், அவர் கம்மின்ஸ் ஓவரில் சந்தித்த மூன்று பந்துகளையும் தனது சிறப்பான தடுப்பாட்டத்தால் தடுத்து விளையாடினார். எனது மகன் சதம் விளாச ஆதரவளித்த அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
சிறப்பாக விளையாடிய நிதீஷ் குமார் ரெட்டி முதல் இன்னிங்ஸில் 114 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.