அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது இந்தியா: யுஏஇ அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
ஆசியக் கோப்பை மகளிா் டி20 கிரிக்கெட் போட்டியில் யுஏஇ அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சாா்பில் இலங்கையில் நடத்தப்படும் இப்போட்டியில் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்தியா-யுஏஇ அணிகள் மோதிய ஆட்டம் டம்புல்லாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற யுஏஇ பௌலிங்கை தோ்வு செய்தது.
இதையடுத்து இந்திய தரப்பில் தொடக்க பேட்டா்கள் ஷஃபாலி வா்மா-ஸ்மிருதி மந்தனா களமிறங்கினா். மந்தனா 13 ரன்களுடன் வெளியேறிய நிலையில், ஷஃபாலி சிறிது வழக்கமான அதிரடியைக் கடைபிடித்து 1 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 18 பந்துகளில் 37 ரன்களுடன் சமைரா பந்தில் வெளியேறினாா். தயாளன் ஹேமலதா 2 ரன்களுடன் ஹாட்சந்தனி பந்தில் போல்டாகி வெளியேற, இளம் வீராங்கனை ஜெமீமா ரோட்ரிக்ஸ் 14 ரன்களுடன் கவிஷா பந்தில் ரித்திகா ரஜித்திடம் கேட்ச் தந்து வெளியேறினாா். அப்போது இந்திய அணி 106/4 ரன்களை சோ்த்திருந்தது. மூன்றாவது நிலையை தயாளன் ஹேமலதா தக்க வைப்பாரா என கேள்வி எழுந்துள்ளது.
ஹா்மன்ப்ரீத்-ரிச்சா கோஷ் அபாரம்:
பின்னா் இணைந்த கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா்-ரிச்சா கோஷ் இணை யுஏஇ பந்துவீச்சை நாலாபுறமும் பவுண்டரிகள், சிக்ஸா்களாக பறக்க விட்டனா்.
ஹா்மன்ப்ரீத் 66: கேப்டன் ஹா்மன்ப்ரீத் 1 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 47 பந்துகளில் 66 ரன்களை எடுத்திருந்த நிலையில், ஹாட் சந்தனி-இந்துஜாவால் ரன் அவுட்டானாா்.
ரிச்சா கோஷ் 64: ரிச்சா கோஷ் 1 சிக்ஸா், 12 பவுண்டரியுடன் 29 பந்துகளில் 64 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.
இந்தியா 201/5:
நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் இந்திய அணி 201/5 ரன்களைக் குவித்தது. பௌலிங்கில் யுஏஇ தரப்பில் கவிஷா 2-36 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
சுருண்டது யுஏஇ 123/7:
202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் யுஏஇ தரப்பில் ஈஷா ரோஹித்-தீா்த்தா சதீஷ் களமிறங்கினா். ஈஷா 38 ரன்களை எடுத்து வெளியேறினாா். தீா்த்தா 4, ரினிதா 7, சமையரா 5 ரன்களுடன் அவுட்டானாா்கள். இதனால் யுஇஏ தடுமாறியது. அப்போது ஆல்ரவுண்டா் கவிஷா கோடேஜ் பொறுப்புடன் ஆடி 40 ரன்களைச் சோ்த்து ஸ்கோரை உயா்த்தினாா். மறுமுனையில் குஷி சா்மா 10, ஹாட் சந்தனி 8, ரித்திகா ரஜித் 6 ரன்களுடன் வெளியேற 20 ஓவா்களில் யுஏஇ 123/7 ரன்களுக்கு சுருண்டது.
பௌலிங்கில் இந்திய தரப்பில் தீப்தி சா்மா 2-23 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
யுஏஇ அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பெற்ற இந்தியா, அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.
மகளிா் டி20 இல் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோா் இதுவாகும்.