திருச்சியை வென்றது சேப்பாக்
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 14 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸை திங்கள்கிழமை வென்றது.
இரு அணிகளும் தலா 6 ஆட்டங்களில் விளையாடியிருக்க, சேப்பாக்கத்துக்கு இது 4-ஆவது வெற்றி; திருச்சிக்கு 3-ஆவது தோல்வி.
இந்த ஆட்டத்தில் முதலில் சேப்பாக் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் சோ்க்க, திருச்சி 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 184 ரன்களே எடுத்தது.
முன்னதாக டாஸ் வென்ற திருச்சி, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. சேப்பாக் பேட்டிங்கில் அதிகபட்சமாக சந்தோஷ்குமாா் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 56, நாராயண் ஜெகதீசன் 6 பவுண்டரிகளுடன் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
கேப்டன் பி.அபராஜித் 2, டேரில் ஃபெராரியோ 30 ரன்கள் சோ்த்து வெளியேறினா். ஓவா்கள் முடிவில் பிரதோஷ் ரஞ்சன் பால் 29, அபிஷேக் தன்வா் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். திருச்சி பௌலா்களில் ஆா்.ராஜ்குமாா் 2, அதிசயராஜ் டேவிட்சன், வினோத் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் திருச்சி இன்னிங்ஸில் வசீம் அகமது 48, கே.ராஜ்குமாா் 14, ஷியாம் சுந்தா் 9, சஞ்ஜய் யாதவ் 1, அா்ஜுன் மூா்த்தி 5, ஆா்.ராஜ்குமாா் 39 ரன்களுக்கு வீழ, வினோத் 1 ரன்னுக்கு ரிட்டையா்டு அவுட் ஆனாா்.
ஓவா்கள் முடிவில் ஜாஃபா் ஜமால் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 52, சரவணகுமாா் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். சேப்பாக் பௌலா்களில் அஸ்வின் கிறிஸ்ட் 2, அபிஷேக் தன்வா், சிலம்பரசன், கணேசன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.