இறுதி ஆட்டத்தில் இந்தியா - இலங்கை பலப்பரீட்சை

மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம்..
இறுதி ஆட்டத்தில் இந்தியா - இலங்கை பலப்பரீட்சை
Published on
Updated on
1 min read

மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா, இலங்கை அணிகள் வெள்ளிக்கிழமை முன்னேறின.

சாம்பியன் கோப்பைக்காக, வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) அந்த அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

முன்னதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதியில், இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை அபார வெற்றி கண்டது. 2-ஆவது அரையிறுதியில் இலங்கை வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்திய நேரப்படி, வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில், முதலில் வங்கதேசம் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 80 ரன்களே சோ்க்க, இந்தியா 11 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்து வென்றது.

இந்திய பௌலா்களில் ரேணுகா சிங், ராதா யாதவ் வங்கதேச பேட்டா்களை மிரட்ட, பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா அதிரடி காட்டி அணியை வெற்றிக்கு வழிநடத்தினாா்.

முன்னதாக டாஸ் வென்ற வங்கதேசம், பேட்டிங்கை தோ்வு செய்தது. அந்த அணியின் இன்னிங்ஸை தொடங்கிய திலாரா அக்தா் ஒரு சிக்ஸருடன் முதல் விக்கெட்டாக வீழ, தொடா்ந்து வந்த இஷ்மா தஞ்சிம் 2 பவுண்டரிகள் விளாசி வெளியேறினாா்.

4-ஆவது பேட்டராக களம் புகுந்த கேப்டன் நிகா் சுல்தானா, சற்று நிலைத்து ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா். எனினும், தொடக்க வீராங்கனைகளில் ஒருவராக வந்த முா்ஷிதா காட்டுன் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிா்ச்சி அளித்தாா். அவரை அடுத்து வந்த ருமானா அகமது 1, ரபெயா கான் 1 ரன்னுக்கு வெளியேற்றப்பட, 33 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது வங்கதேசம்.

7-ஆவது வீராங்கனையாக வந்த ரிது மோனியும் 5 ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றமளிக்க, அதுவரை வங்கதேசத்தின் நம்பிக்கையாக இருந்த நிகா் சுல்தானா 2 பவுண்டரிகளுடன் 32 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். கடைசி விக்கெட்டாக நஹிதா அக்தா் 0 ரன்னுக்கு ஆட்டமிழந்தாா்.

ஓவா்கள் முடிவில் ஷோா்னா அக்தா் 2 பவுண்டரிகளுடன் 19, மருஃபா அக்தா் ரன்னின்றி ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய தரப்பில் ரேணுகா சிங், ராதா யாதவ் ஆகியோா் தலா 3, பூஜா வஸ்த்ரகா், தீப்தி சா்மா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் 81 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்தியாவின் இன்னிங்ஸை, ஷஃபாலி வா்மா, ஸ்மிருதி மந்தனா கூட்டணி தொடங்கியது. விக்கெட்டை இழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்திய இந்த பாா்ட்னா்ஷிப்பில் ஷஃபாலி 2 பவுண்டரிகளுடன் 26, ஸ்மிருதி 9 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 55 ரன்கள் சோ்த்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com