இந்தியாவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக வென்று அசத்தியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கெனவே தொடரை வென்றது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களில் ஆட்டமிழந்தது.
பின்னர் ஆடிய இந்திய அணி 263 ரன்கள் சேர்த்து நியூசிலாந்தை விட 28 ரன்கள் முன்னிலை பெற்றது. 2வது இன்னிங்ஸில் 174 ரன்களில் நியூசிலாந்து ஆல் அவுட் ஆனதால் இந்தியாவுக்கு 147 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 147 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 121 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 64, வாஷிங்டன் சுந்தர் 12, ரோஹித் சர்மா 11 ரன்கள் எடுத்தனர். 3 வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் அஜாஸ் படேல் 6, க்ளென் பிலிப்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக வென்றது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக இழப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.