
ஜோஷ் இங்லிஷ் முதல்முறையாக ஆஸ்திரேலிய டி20 அணிக்கு கேப்டனாக செயல்படுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் டி20 அணியை கேப்டன் பெயரில்லாமல் அறிவிக்கப்பட்டிருந்தது. வழக்கமாக மிட்செல் மார்ஷ் டி20 அணிக்கு கேப்டனாக இருக்கிறார்.
இந்நிலையில், 29 வயதாகும் விக்கெட் கீப்பர் பேட்டரான ஜோஷ் இங்லிஷ் புதிய டி20 கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
டி20க்கு மட்டுமல்லாமல் பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியிலும் இங்லிஷ் கேப்டனாக செயல்படுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது
பார்டர்- கவாஸ்கர் கோப்பை தயாரிப்புக்காக பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் 3ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார்கள் என்பதால் இங்லிஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மிட்செல் மார்ஷ், டிராவிஷ் ஹெட் தங்களது குழந்தைகளுடன் நேரம் செலவிட இருப்பதால் டி20 கேப்டனாக இந்தத் தொடருக்கு மட்டும் இங்லிஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் 14ஆவது டி20 கேப்டனாகவும் 30ஆவது ஒருநாள் கேப்டனாகவும் இங்லிஷ் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் தேசிய அணித் தலைவர் ஜார்ஜ் பெய்லி, “ஜோஷ் இங்லிஷ் ஒருநாள், டி20 அணியில் விளையாடுபவர். களத்திலும் களத்துக்கு வெளியேவும் மிகவும் மதிக்கத்தக்க வீரராக இருக்கிறார்.
இதற்கு முன்பாக ஆஸ்திரேலியா ஏ அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். ஷார்ட், ஜாம்பா, மேக்ஸ்வெல், ஸ்டாயினிஸிடமிருந்து இவருக்கு நல்ல ஆதரவும் கிடைத்துள்ளது.
மூத்த வீரர்களுக்கு பதிலாக 3ஆவது ஒருநாள் போட்டியில் சேவியர் பார்ட்லெட், ஸ்பென்சர் ஜான்சன், ஜோஷ் பிலிப் அணியில் இணைந்துள்ளார்கள்” எனக் கூறினார்.
முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. முதல் டி20 தொடர் நவ.14ஆம் தேதி தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.