
முதல் டி20யில் இந்தியா 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் சோ்க்க, தென்னாப்பிரிக்கா 17.5 ஓவா்களில் 141 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய பௌலா்களில் வருண் சக்கரவா்த்தி, ரவி பிஷ்னோய் ஆகியோா் தலா 3, ஆவேஷ் கான் 2, அா்ஷ்தீப் சிங் 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.
சா்வதேச டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்த ஆட்டங்களில் சதம் விளாசிய முதல் இந்தியா் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தாா்.
கடைசியாக வங்கதேசத்துக்கு எதிராக 111 ரன்கள் எடுத்திருந்தார். 29 வயதாகும் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருதுபெற்றார்.
இந்த சாதனை குறித்து சஞ்சு சாம்சன் பேசியதாவது:
தோல்விகளில் ஆறுதல்
எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல தோல்விகளை சந்தித்துள்ளேன். தோல்வியின்போது நமது மனதில் ஏகப்பட்ட எண்ணங்கள் தோன்றும். அதில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், நாம் நம்மைப் பற்றி அதிகமாக சிந்திக்க வேண்டும்.
ஐபிஎல் போட்டிகளில் நன்றாக விளையாடும் நான் ஏன் சர்வதேச போட்டிகளில் சரியாக விளையாடுவதில்லை என சிந்திப்பேன். சிறிது நேரம் களத்தில் இருந்தபிறகு என்னால் சுழல், வேகப் பந்துகளை அதிரடியாக அடிக்க முடியும். அணியை வெற்றிப் பெற வைக்க முடியும். எனக்கு நானே இதைச் சொல்லிக்கொள்வேன்.
கேப்டன் சூர்யகுமார் யாதவ், பயிற்சியாளர் கம்பீர், லக்ஷ்மணன் போன்ற நபர்கள் எனது தோல்வியின்போது ஆதரவாக இருந்தார்கள்.
நம்பிக்கைக்கு பலன்
அனைவருமே ஏதோவொரு கட்டத்தில் மோசமான காலகட்டத்தில் இருப்பார்கள். அப்போது அவர்களிடம் நாம் பேசவேண்டியது முக்கியமானது. அணியின் பயிற்சியாளர், கேப்டன் கேரளத்தில் உள்ள சுழல்பந்து வீச்சாளர்களை வரவழைத்து பயிற்சி செய்யக் கூறினார்கள். நானும் அவ்வாறே செய்தேன்.
இந்தமாதிரி சிறிய சிறிய விஷயங்கள் மிகப்பெரிய பங்கு வகிப்பதாகக் கருதுகிறேன். என்மீது அவர்கள் வைத்த நம்பிக்கைக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அதை நிர்வாகத்துக்கு திருப்பியளிக்கிறேன். இது தொடக்கம் மட்டுமே.
கடினமாக உழைக்கவும் இந்திய அணிக்காக ரன்களை குவித்து பெருமையாக நடக்கவும் விரும்புகிறேன்.
நமது நாட்டுக்காக சதம் அடிப்பது மிகவும் சிறந்த உணர்வு. களத்தில் பவுன்சர் சற்று அதிகமாக இருந்தது. இங்கு 3-4 நாள்களாக மழை பெய்திருந்ததால் சற்று கடினமாக இருக்குமென கணித்தேன். அதற்கேற்றார்போல நாங்கள் தயாரானோம்.
டி20யில் ஆதிக்கம் செலுத்துவோம்
மழையிலும் நாங்கள் 2-3 மணி நேரம் பயிற்சி செய்தோம். நாங்கள் டி20 உலகக் கோப்பையை வென்றவர்கள். அதுபோலதான் விளையாடியாக வேண்டும். கடந்த 2-3 வருடங்களாகவே டாஸில் தோற்றாலும் முழு முயற்சியை கொடுக்க வேண்டுமென பேசுவோம். இந்த ஆடுகளத்தில் 160-170 போதாதென கணித்தோம்.
பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தாலும் அதிரடியாக ஆட முடிவெடுத்தோம். அந்த நேரத்தில் நாங்கள் உலக சாம்பியன்போலவே செயல்பட்டோம். இந்த டி20 போட்டிகளில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தவே விரும்புகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.